Saturday, August 31, 2019

03.07.003 – மாணிக்க வாசகர் துதி - செழுமா மலர்க் குருந்தின் - (வண்ணம்)

03.07.003 – மாணிக்க வாசகர் துதி - செழுமா மலர்க் குருந்தின் - (வண்ணம்)

2007-06-19

3.7.3 - மாணிக்க வாசகர் குருபூஜை - 2007-06-20 (ஆனி மகம்)

----------------------------------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனனா தனத்த தந்த

தனனா தனத்த தந்த

தனனா தனத்த தந்த .. தனதான)

(கடிமா மலர்க்கு ளின்பம் - திருப்புகழ் - சுவாமிமலை)


செழுமா மலர்க்கு ருந்தின் .. அடியே அறத்தை அன்று

.. சிவனே உரைத்த கன்று .. விடவாடித்

தொழுதே அரற்றி நைந்து .. துணையாய் இருக்கும் எந்தை

.. துணையார் அடிக்க லங்கல் .. எனநாளும்

வழுவா தருத்தி பொங்கு .. தமிழால் வழுத்தி நின்ற

.. மணிவா சகர்க்கி ரங்கு .. பெருமானை

மெழுகா உருக்கு கின்ற .. திருவா சகத்தொ டின்று

.. வினைமா சறுக்க என்று .. பணிவேனே.


பதம் பிரித்து:

செழு-மா மலர்க்-குருந்தின் .. அடியே அறத்தை அன்று

.. சிவனே உரைத்து அகன்றுவிட, வாடித்,

தொழுதே அரற்றி நைந்து, .. துணையாய் இருக்கும் எந்தை

.. துணை-ஆர் அடிக்கு அலங்கல் .. என நாளும்

வழுவாது அருத்தி பொங்கு .. தமிழால் வழுத்தி நின்ற

.. மணிவாசகர்க்கு இரங்கு .. பெருமானை,

மெழுகா உருக்குகின்ற .. திருவாசகத்தொடு இன்று,

.. "வினை-மாசு அறுக்க" என்று .. பணிவேனே.


செழு-மா மலர்க்-குருந்தின் அடியே அறத்தை அன்று சிவனே உரைத்து அகன்றுவிட வாடித் - செழுமையான மலர்கள் நிறைந்த குருந்தமரத்தின் கீழே சிவனே குருவாகி வந்து ஞானத்தைப் போதித்துப் பின்னர் நீங்கிவிடவும், மிகவும் மனம் வாடித்;

தொழுதே அரற்றி நைந்து, துணையாய் இருக்கும் எந்தை துணை ஆர் அடிக்கு அலங்கல் என நாளும் - அழுது தொழுது உருகி, உற்ற துணையான எம் தந்தை சிவபெருமானது இரு-திருவடிகளுக்கு மாலையாகத் தினமும்; (துணை - உதவி; இரண்டு); (அலங்கல் - மாலை);

வழுவாது அருத்தி பொங்கு தமிழால் வழுத்தி நின்ற மணிவாசகர்க்கு இரங்கு பெருமானை - தவறாமல் அன்பு பொங்கும் தமிழால் போற்றிய மாணிக்கவாசகர்க்கு இரங்கியருளிய பெருமானை; (அருத்தி - அன்பு);

மெழுகா உருக்குகின்ற திருவாசகத்தொடு இன்று "வினை-மாசு அறுக்க" என்று பணிவேனே - மெழுகாக உருக்குகின்ற திருவாசகத்தால் இன்று, "என் வினைகளைத் தீர்ப்பாயாக" என்று வேண்டிப் பணிவேன்; (மெழுகா - மெழுகாக; கடைக்குறை விகாரம்); (அறுக்க - அறுப்பாயாக);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment