Sunday, August 11, 2019

03.05.041 – பொது - பாரிடைக் கலங்கி - (வண்ணம்)

03.05.041 – பொது - பாரிடைக் கலங்கி - (வண்ணம்)

2007-05-02

3.5.41 - பாரிடைக் கலங்கி - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானனத் தனந்த .. தனதான )

(காமியத் தழுந்தி யிளையாதே - திருப்புகழ் - சுவாமிமலை)


பாரிடைக் கலங்கி .. மடியாமல்

.. பாவினைப் புனைந்து .. பணிவேனே

பாரிடக் கணங்கள் .. அவைகீதம்

.. பாடிடச் சுழன்று .. நடமாடீ

தேரினச் சொடிந்து .. விழவேறித்

.. தீயினிற் புரங்க .. ளவைவீழப்

போரினைப் புரிந்த .. புகழாளா

.. பூதியைப் புனைந்த .. பெருமானே


பாரிடைக் கலங்கி மடியாமல் - இந்த உலகில் மயங்கி வருந்தி அழியாமல்;

பாவினைப் புனைந்து பணிவேனே - பாமாலைகளை இயற்றி உன்னை வணங்குவேன்;

பாரிடக் கணங்கள் அவை கீதம் பாடிடச் சுழன்று நடம் ஆடீ - பூதகணங்கள் இசை பாடச் சுழன்று கூத்தாடுபவனே; (பாரிடம் - பூதம்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.3 - "பூதம் பாடப் புறங்காட் டிடையாடி");

தேரின் அச்சு ஒடிந்து விழறித் - (தேவர்கள் செய்த பெரிய) தேரின் அச்சு முரியும்படி அத்தேரில் ஏறி;

தீயினில் புரங்கள் அவை வீழப் - முப்புரங்களும் தீயில் புகுந்து அழியும்படி;

போரினைப் புரிந்த புகழாளா - போர் செய்த புகழ் உடையவனே;

பூதியைப் புனைந்த பெருமானே - திருமேனியில் திருநீற்றினை அணிந்த பெருமானே; (பூதி - சாம்பல்; திருநீறு);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment