03.05.035 – பொது - அகலா வினைத்தொகுதி - (வண்ணம்)
2007-04-21
3.5.35 – அகலா வினைத்தொகுதி - (பொது)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதான தத்ததன தனதான தத்ததன
தனதான தத்ததன .. தனதான )
(வலிவாத பித்தமொடு - திருப்புகழ் - திருவண்ணாமலை)
அகலாவி னைத்தொகுதி அறுமாறு னைச்சரணம்
..... அடைமாத வர்க்கருளும் .. உனையோரேன்
.. அவமேபெ ருக்கியிரு நில(ம்)மீது நித்தமிடர்
..... அடைவால்வ ருத்த(ம்)மிக .. உறுவேனும்
புகல்நீயெ னத்தினமு(ம்) மணமேறு சொற்களொடு
..... புகழ்மாலை கட்டிவழி .. படுவேனோ
.. புரம்வேவ வெற்பையொரு சிலையாவ ளைத்துநகை
..... புரிவீர நச்சரவ .. அரைநாணா
அகமாச கற்றியுன தடியேநி னைத்துருகும்
..... அடியார்ம னத்தளியில் .. மகிழ்வோனே
.. அலர்மேலி ருப்பவனும் அரமேலி ருப்பவனும்
..... அறியாநெ ருப்புருவில் .. எழுவோனே
முகமாறு பெற்றவனை அருள்நாத கைத்தவிட(ம்)
..... முனைநாள்ம டுத்துமிட .. றிடுவோனே
.. முதல்வாம டக்கொடியை ஒருபாகம் வைத்துநதி
..... முடிமீது வைத்தசிவ .. பெருமானே.
பதம் பிரித்து:
அகலா வினைத்தொகுதி அறுமாறு உனைச் சரணம்
..... அடை மாதவர்க்கு அருளும் உனை ஓரேன்;
.. அவமே பெருக்கி இருநிலம் மீது நித்தம் இடர்
..... அடைவால் வருத்தம் மிக உறுவேனும்,
"புகல் நீ" எனத் தினமும் மணம் ஏறு சொற்களொடு
..... புகழ்மாலை கட்டி வழிபடுவேனோ;
.. புரம் வேவ வெற்பை ஒரு சிலையா வளைத்து நகை
..... புரி வீர; நச்சரவ அரைநாணா;
அக-மாசு அகற்றி, உனது அடியே நினைத்து உருகும்
..... அடியார் மனத்-தளியில் மகிழ்வோனே;
.. அலர்மேல் இருப்பவனும் அரமேல் இருப்பவனும்
..... அறியா நெருப்பு உருவில் எழுவோனே;
முகம் ஆறு பெற்றவனை அருள் நாத; கைத்த விடம்
..... முனைநாள் மடுத்து மிடறு இடுவோனே;
.. முதல்வா; மடக்கொடியை ஒரு பாகம் வைத்து, நதி
..... முடிமீது வைத்த சிவபெருமானே.
அகலா வினைத்தொகுதி அறுமாறு உனைச் சரணம் அடை மாதவர்க்கு அருளும் உனை ஓரேன் - நீங்காத பழவினையெல்லாம் தீரும்படி உன்னைச் சரண்புகுந்த பெரும் தவத்தினர்க்கு அருளும் உன்னை நான் நினக்கமாட்டேன்;
அவமே பெருக்கி இருநிலம் மீது நித்தம் இடர் அடைவால் வருத்தம் மிக உறுவேனும் - பயனற்ற செயல்களே செய்து இந்தப் பூமியில் தினமும் துன்பத்தைப் பெறுதலால் மிகவும் வருந்தும் நானும்; (அடைவு - அடைதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.125.4 - "துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு பிணியடை விலர்");
"புகல் நீ" எனத் தினமும் மணம் ஏறு சொற்களொடு புகழ்மாலை கட்டி வழிபடுவேனோ - "நீயே புகல்" என்று உன்னைச் சரணடைந்து நாள்தோறும் வாசம் மிக்க சொற்களால் உன் புகழ்பாடும் பாமாலைகளைத் தொடுத்து வழிபட எனக்கு அருள்வாயாக;
புரம் வேவ வெற்பை ஒரு சிலையா வளைத்து நகை புரி வீர - முப்புரங்களும் வெந்து சாம்பலாகும்படி மேரு மலையை ஒரு வில்லாக வளைத்துச் சிரித்த வீரனே;
நச்சரவ அரைநாணா - நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;
அக-மாசு அகற்றி, உனது அடியே நினைத்து உருகும் அடியார் மனத்-தளியில் மகிழ்வோனே - மனத்தின் மாசுகளை நீக்கி, உன் திருவடியையே நினைத்து உருகும் பக்தர்களது மனமே கோயிலாக விரும்பி உறைபவனே; (பூசலார் நாயனார், வாயிலார் நாயனார், முதலியோரது வரலாறுகளைப் பெரியபுராணத்திற் காண்க);
அலர்மேல் இருப்பவனும் அரமேல் இருப்பவனும் அறியா நெருப்பு உருவில் எழுவோனே - பூமேல் இருக்கும் பிரமனாலும் பாம்பின்மேல் இருக்கும் திருமாலாலும் அறிய ஒண்ணாத சோதியாகி உயர்ந்தவனே; (அர = பாம்பு ); (சம்பந்தர் தேவாரம் - 1.98.9 - "அரப்பள்ளியானு மலருறைவானு மறியாமைக்");
முகம் ஆறு பெற்றவனை அருள் நாத - முருகனைத் தந்தருளிய நாதனே;
கைத்த விடம் முனைநாள் மடுத்து மிடறு இடுவோனே - கசந்த ஆலகால நஞ்சை முன்பு உண்டு கண்டத்தில் இட்டவனே; (மிடறு - கண்டம்)
முதல்வா - முதல்வனே;
மடக்கொடியை ஒரு பாகம் வைத்து நதி முடிமீது வைத்த சிவபெருமானே - இளங்கொடி போன்ற உமையை ஒரு பாகமாக வைத்துக், கங்கையைத் திருமுடிமேல் வைத்த சிவபெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment