Friday, August 16, 2019

03.05.044 – பொது - காரிகையர்மேல் மிகுந்த - (வண்ணம்)

03.05.044 – பொது - காரிகையர்மேல் மிகுந்த - (வண்ணம்)

2007-05-05

3.5.44 - காரிகையர்மேல் மிகுந்த - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானதன தான தந்த .. தானதன தான தந்த

.. தானதன தான தந்த .. தனதான )

(வாதமொடு சூலை கண்ட - திருப்புகழ் - சுவாமிமலை)


காரிகையர் மேல்மி குந்த .. காதலத னாலு ழன்று

.. .. காமவினை யேபு ரிந்து .. வயதாகிக்

.. காலொடுகை ஓய நொந்து .. காயம்விழ ஊர்சு மந்து

.. .. கானிலிட வேஎ ரிந்து .. கழிவேனோ

மாரியென நீர்வ ழிந்த .. மாநயன மாணி அன்று

.. .. வாசமலர் தூவி நின்று .. தொழுபோது

.. வாதைதரு காலன் நெஞ்சில் .. வீசியுயிர் பால னஞ்செய்

.. .. வார்கழலை நாடும் அன்பை .. அருளாயே

வாரிகடை நாளெ ழுந்த .. மாவிடம தோடி வந்து

.. .. வானுலகு சூழ உம்பர் .. புகல்நீயே

.. வாளரவ மாலை தங்கு .. மார்பவென ஓத நஞ்சை

.. .. வாரியமு தாக உண்ட .. அருளாளா

நாரியொரு கூறி லங்க .. ஞானவடி வாகி நின்ற

.. .. நாயகநி லாவி ளங்கு .. சடையானே

.. நாரணனு(ம்) நாபி வந்த .. நான்முகனு(ம்) நேட நின்ற

.. .. நாதமறை ஓது கின்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

காரிகையர்மேல் மிகுந்த காதல்-அதனால் உழன்று

.. .. காமவினையே புரிந்து, வயது ஆகிக்,

.. காலொடு கை ஓய நொந்து, காயம் விழ, ஊர் சுமந்து

.. .. கானில் இடவே எரிந்து கழிவேனோ;

மாரி என நீர் வழிந்த மா நயன மாணி அன்று

.. .. வாசமலர் தூவி நின்று தொழுபோது,

.. வாதை தரு காலன் நெஞ்சில் வீசி உயிர் பாலனம் செய்,

.. .. வார்கழலை நாடும் அன்பை அருளாயே;

வாரி கடைநாள் எழுந்த மாவிடம்அது ஓடி வந்து

.. .. வானுலகு சூழ, உம்பர் "புகல் நீயே,

.. வாள் அரவ மாலை தங்கு மார்ப" என, ஓத நஞ்சை

.. .. வாரி அமுதாக உண்ட அருளாளா;

நாரி ஒரு கூறு இலங்க, ஞானவடிவு ஆகி நின்ற

.. .. நாயக; நிலா விளங்கு சடையானே;

.. நாரணனும் நாபி வந்த நான்முகனும் நேட நின்ற

.. .. நாத; மறை ஓதுகின்ற பெருமானே.


காரிகையர்மேல் மிகுந்த காதல் அதனால் உழன்று, காமவினையே புரிந்து வயது ஆகிக் - பெண்கள் மேல் மிகுந்த ஆசைகொண்டு மனம் சுழன்று, ஆசைகளைப் பூர்த்திசெய்யவே செயல்கள் செய்து, முதுமை அடைந்து;

காலொடு கை ஓய நொந்து, காயம் விழ, ஊர் சுமந்து கானில் இடவே எரிந்து கழிவேனோ - கையும் காலும் தளர்ந்துபோக, மனம் வருந்தி, ஆவிபோய் உடல் கீழே விழப், பலரும் சுமந்து சுடுகாட்டில் இட, எரிந்து சாம்பலாகி ஒழிந்துபோவேனோ? (காயம் - உடம்பு );

மாரின நீர் வழிந்த மா நயன மாணி அன்று வாசமலர் தூவி நின்று தொழுபோது - மழைபோலக் கண்ணீர் சொரிந்த அழகிய கண்களையுடைய மார்க்கண்டேயர் முன்னர் வாசமலர்களைத் தூவித் தொழுதபொழுது; (மாணி - அந்தணச்சிறுவன்); (நயனம் - கண்); (தொழுபோது - தொழுத சமயத்தில்);

வாதை தரு காலன் நெஞ்சில் வீசியிர் பாலனம் செய் வார்கழலை நாடும் அன்பை அருளாயே - அவருக்குத் துன்பம் தந்த கூற்றுவனது மார்பில் வீசி மார்க்கண்டேயரது உயிரைக் காத்தருளிய நீள்கழல் அணிந்த திருவடியை விரும்பும் பக்தியை எனக்கு அருள்வாயாக; (பாலனம் - பாதுகாவல்);

வாரி கடைநாள் எழுந்த மாவிடம்அது டி வந்து வானுலகு சூழ - பாற்கடலைக் கடந்த அன்று தோன்றிய கொடிய விடம் பெருகிப் பரவித் தேவலோகத்தைச் சூழவும்; (வாரி - கடல்);

உம்பர் "புகல் நீயே, வாள் அரவ மாலை தங்கு மார்ப" ஓத - தேவர்கள் "எம் புகல் நீயே! கொடிய பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவனே" என்று இறைஞ்சித் துதிக்க; (புகல் - சரண்; அடைக்கலம்; பற்றுக்கோடு); (வாள் - கொடுமை; கொடிய); (ஓதுதல் - சொல்லுதல்; பாடுதல்); ("ஓத" என்ற சொல் இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளுமாறு நின்றது);

ஓத நஞ்சை வாரிமுதாக உண்ட அருளாளா - அவர்களுக்கு இரங்கிக் கடல்நஞ்சை அள்ளி அமுதம்போல் உண்ட அருளாளனே; (ஓதம் - கடல்);

நாரிரு கூறு இலங்க, ஞானவடிவு ஆகி நின்ற நாயக - உமை ஒரு பாகத்தில் திகழ, ஞானத்தின் வடிவம் ஆகிய நாயகனே;

நிலா விளங்கு சடையானே - சந்திரன் ஒளிவீசுகின்ற சடையை உடையவனே;

நாரணனும் நாபி வந்த நான்முகனும் நேட நின்ற நாத - திருமாலும் திருமாலின் நாபியில் தோன்றிய பிரமனும் தேடும்படி சோதியாகி நின்ற நாதனே;

மறை ஓதுகின்ற பெருமானே - வேதங்களைப் பாடியருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment