Friday, August 16, 2019

03.05.045 – பொது - கார்முகில் நிறத்தை ஒத்த - (வண்ணம்)

03.05.045 – பொது - கார்முகில் நிறத்தை ஒத்த - (வண்ணம்)

2007-05-08

3.5.45 - கார்முகில் நிறத்தை ஒத்த - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானன தனத்த தத்த .. தானன தனத்த தத்த

தானன தனத்த தத்த .. தனதான )

(தானதன தத்த தத்த x3 .. தனதான ?)

(கோடுசெறி மத்த கத்தை - திருப்புகழ் - திருவண்ணாமலை - திருவருணை)


கார்முகில் நிறத்தை ஒத்த .. மாமணி மிடற்ற சொக்க

.. .. காமனை விழித்தெ ரித்த .. அரனேமுன்

.. காலனை உதைத்தொ ழித்த .. தாளின இடத்தொ ருத்தி

.. .. காதல எனக்க ருத்தி .. அருளாயே

பார்பல படைத்த ழித்து .. மாநடம் இயற்று(ம்) நித்த

.. .. பால்மதி தனைத்த ரித்த .. சடையானே

.. பாமலர் தொடுத்து நித்தல் .. ஓதிடு பவர்க்கி னித்த

.. .. பாகென அகத்தில் நிற்கும் .. மிகுநேயா

பேர்பல களித்த மத்த .. மானொரு கரத்த மிக்க

.. .. பேரொளி எறிக்கும் ஒப்பில் .. வடிவானே

.. பீரிடும் இரத்த(ம்) நிற்க .. ஓர்விழி உனக்க ளித்த

.. .. பேரளி கணப்பர் பத்தி .. மகிழ்வோனே

நீர்மலி குளத்தில் அத்தன் .. மூழ்கவு(ம்) நினைக்க லுற்று

.. .. நேடிய மகற்கு ளத்தில் .. உறைவானாய்

.. நீர்மையை உரைக்க அற்றை .. பாலடி சிலைக்கொ டுக்க

.. .. நீள்நய னியைப்ப ணித்த .. பெருமானே.


பதம் பிரித்து:

கார்முகில் நிறத்தை ஒத்த மாமணி மிடற்ற; சொக்க;

.. .. காமனை விழித்து எரித்த அரனே; முன்

.. காலனை உதைத்து ஒழித்த தாளின; இடத்து ஒருத்தி

.. .. காதல; எனக்கு அருத்தி அருளாயே;

பார் பல படைத்து அழித்து, மா நடம் இயற்றும் நித்த;

.. .. பால்மதிதனைத் தரித்த சடையானே;

.. பா-மலர் தொடுத்து நித்தல் ஓதிடுபவர்க்கு இனித்த

.. .. பாகு என அகத்தில் நிற்கும் மிகு-நேயா;

பேர் பல களித்த மத்த; மான் ஒரு கரத்த; மிக்க

.. .. பேரொளி எறிக்கும் ஒப்பு-இல் வடிவானே;

.. பீரிடும் இரத்தம் நிற்க ஓர் விழி உனக்கு அளித்த

.. .. பேர்-அளி கணப்பர் பத்தி மகிழ்வோனே;

நீர் மலி குளத்தில் அத்தன் மூழ்கவும் நினைக்கலுற்று

.. .. நேடிய மகற்கு உளத்தில் .. உறைவானாய்

.. நீர்மையை உரைக்க அற்றை பால்-அடிசிலைக் கொடுக்க

.. .. நீள்நயனியைப் பணித்த பெருமானே.


கார்முகில் நிறத்தை ஒத்த மாமணி மிடற் - கரிய மேகம் போன்ற நிறத்தை உடைய அழகிய நீலமணி கண்டனே;

சொக்க - அழகனே; (சொக்கன் - அழகன்; சிவன் திருநாமம்);

காமனை விழித்து எரித்த அரனே - மன்மதனை நெற்றிக்கண்ணால் பார்த்து எரித்த ஹரனே;

முன் காலனை உதைத்து ஒழித்த தாளின – முன்பு காலனை உதைத்து அழித்த திருவடியினனே;

இடத்து ஒருத்தி காதல – இடப்பாகத்தில் இருக்கும் உமைக்குக் கணவனே; (காதலன் - கணவன்);

எனக்கு அருத்தி அருளாயே - எனக்குப் பக்தியை அருள்வாயாக; (அருத்தி - அன்பு); (அப்பர் தேவாரம் - 5.59.10 – "மாற்பேறு அருத்தியால் தொழுவார்க்கில்லை அல்லலே");


பார் பல படைத்து அழித்து, மா நடம் இயற்றும் நித்த - பல உலகங்களையும் படைத்து அழித்துப் பெருநடம் செய்யும் நித்தியனே;

பால்மதிதனைத் தரித்த சடையானே - வெண்பிறைச் சந்திரனை அணிந்த சடையானே;

பாமலர் தொடுத்து நித்தல்திடுபவர்க்கு இனித்த பாகு என அகத்தில் நிற்கும் மிகு நேயா - பாமாலைகள் தொடுத்துத் தினமும் ஓதி வழிபடும் பக்தர்களுக்கு அவர்கள் உள்ளத்தில் பாகுபோல் இனிமை அளித்து உறையும் மிகுந்த அன்பு உடையவனே;


பேர் பல களித் மத்த - பல திருநாமங்களை ஏற்று மகிழ்ந்தவனே, ஊமத்த மலரை அணிந்தவனே;

மான் ஒரு கரத் - ஒரு கையில் மானைத் தரித்தவனே;

மிக்க பேரொளி எறிக்கும் ஒப்பு-இல் வடிவானே - மிகுந்த பெரிய ஒளியை வீசும் ஒப்பற்ற திருவடிவம் உடையவனே; (எறித்தல் - ஒளிவீசுதல்);

பீரிடும் இரத்தம் நிற்க ஓர் விழி உனக்கு அளித்த பேர்-அளி கணப்பர் பத்தி கிழ்வோனே - உன் கண்ணீல் பீரிட்ட இரத்தம் நிற்கத் தம் ஒப்பற்ற கண்ணைத் தோண்டி உனக்கு அளித்த பேரன்பு உடைய கண்ணப்பரது பக்தியை மகிழ்ந்தவனே; (ஓர் - ஒப்பற்ற; ஒரு); (அளி - அன்பு); (பத்தி - பக்தி);


நீர் மலி குளத்தில் அத்தன் மூழ்கவும் நினைக்கலுற்று நேடிய மகற்கு உளத்தில் உறைவானாய் - நீர் நிறைந்த குளத்தில் தந்தை மூழ்கிக் குளித்தபோது தந்தையை எண்ணித் தேடிய மகனான ஞானசம்பந்தருக்கு உள்ளத்தில் உறைபவன் ஆகி; (அத்தன் - தந்தை); (நேடுதல் - தேடுதல்); (மகற்கு - மகன்+கு - மகனுக்கு)

நீர்மையை உரைக்க அற்றை பால்-அடிசிலைக் கொடுக்க நீள்நயனியைப் பணித்த பெருமானே - உன் குணங்களைப் பாடும்படி அன்று ஞானப்பாலைக் கொடுக்க நீண்ட கண்களையுடைய உமையைச் சொல்லி அருளியவனே; (நீர்மை - தன்மை; குணம்); (அற்றை - அன்று; அத்தினம்); (அற்றை பால்அடிசில் - "அற்றைப் பால்அடிசில்" என்று வரவேண்டியது, ஓசை கருதி "ப்" கெட்டது);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment