Saturday, August 24, 2019

03.05.048 – பொது - உலக மயலெனும் - (வண்ணம்)

03.05.048 – பொது - உலக மயலெனும் - (வண்ணம்)

2007-05-13

3.5.48 - உலக மயலெனும் - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தனதன தனன தனதன

தனன தனதன .. தனதான )

(குமர குருபர முருக சரவண - திருப்புகழ் - சுவாமிமலை)


உலக மயலெனும் வலையில் அனுதினம்

.. .. உழலு(ம்) மனமுடை .. அடியேனும்

.. உவகை மிகவுற உனது திருவடி

.. .. உருகி வழிபட .. அருளாயே

இலயம் இசைபல கணமும் ஒலிசெய

.. .. இருளில் அருநடம் .. இடுவோனே

.. இலையை அடியவர் இடினும் அதுமகிழ்

.. .. இறைவ விடைமிசை .. வருவோனே

அலையும் எயிலவை எரிய ஒருகணை

.. .. அதுவு(ம்) மிகையென .. நகுவோனே

.. அமரர் உயிர்பெற வலிய கடல்விடம்

.. .. அமுது செயு(ம்)மணி .. மிடறானே

தலைவ மண(ம்)மலி இதழி குளிர்நதி

.. .. தழுவு பிறைமதி .. இளநாகம்

.. சடையில் விரவிடும் அழக மலையிறை

.. .. தனயை இட(ம்)மகிழ் .. பெருமானே.


பதம் பிரித்து:

உலகமயல் எனும் வலையில் அனுதினம்

.. .. உழலு(ம்) மனமுடை .. அடியேனும்

.. உவகை மிக-உற உனது திருவடி

.. .. உருகி வழிபட .. அருளாயே;

இலயம் இசை பல-கணமும் ஒலிசெய,

.. .. இருளில் அருநடம் .. இடுவோனே;

.. இலையை அடியவர் இடினும், அது மகிழ்

.. .. இறைவ; விடைமிசை .. வருவோனே;

அலையும் எயிலவை எரிய ஒரு-கணை

.. .. அதுவு(ம்) மிகை என .. நகுவோனே;

.. அமரர் உயிர்-பெற, வலிய கடல்விடம்

.. .. அமுது செயு(ம்) மணி .. மிடறானே;

தலைவ; மண(ம்)மலி இதழி, குளிர்-நதி

.. .. தழுவு பிறைமதி, .. இளநாகம்

.. சடையில் விரவிடும் அழக; மலை-இறை

.. .. தனயை இட(ம்) மகிழ் .. பெருமானே.


உலகமயல் எனும் வலையில் அனுதினம் உழலும் மனமுடை அடியேனும் - உலகமயக்கம் என்ற வலையில் சிக்கி எந்நாளும் உழலும் மனத்தை உடைய அடியேனும்;

உவகை மிக உற உனது திருவடி உருகி வழிபட அருளாயே - மகிழ்ச்சி பொங்க உன் திருவடியை உருகி வழிபடுமாறு அருள்வாயாக;

இலயம் இசை பல கணமும் ஒலிசெய இருளில் அருநடம் இடுவோனே - தாளம் இசை இவற்றைப் பல பூதகணங்கள் ஒலிக்க இருளில் அரிய கூத்தை ஆடுபவனே; (இலயம் - லயம்);

இலையை அடியவர் இடினும் அது மகிழ் இறைவ - அடியவர்கள் இலையையே இட்டாலும் அதனை விரும்பி ஏற்கும் இறைவனே;

விடைமிசை வருவோனே - இடபவாகனனே;

அலையும் எயிலவை எரிய ஒரு கணை அதுவும் மிகை என நகுவோனே - எங்கும் அலைந்துதிரிந்த முப்புரங்களை எரிக்க ஒரு கணையும் அதிகம் என்று சிரித்தவனே;

அமரர் உயிர் பெற வலிய கடல்விடம் அமுதுசெயும் மணி மிடறோனே - தேவர்கள் உயிர்வாழக் கொடிய ஆலகால விடத்தை உண்ட நீலகண்டனே;

தலைவ - தலைவனே;

மணம் மலி இதழி, குளிர்நதி தழுவு பிறைமதி இளநாகம் சடையில் விரவிடும் அழக - வாசம் மிக்க கொன்றை, குளிர்ச்சி பொருந்திய கங்கை தழுவுகின்ற பிறைச்சந்திரன் இளம்பாம்பு இவையெல்லாம் சடையில் பொருந்தும் அழகனே; (இதழி - கொன்றை);

மலைஇறை தனயை இடம் மகிழ் பெருமானே - இமவான் மகளை இடப்பாகமாக விரும்பிய பெருமானே; (இறை - அரசன்); (தனயை - மகள்); (அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு

17 - கடைக்கணியல் வகுப்பு - "மலையிறை மடந்தை பெற்ற ஒருமதலை");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment