Friday, August 9, 2019

03.05.037 – பொது - மனமும் ஆசை மிக்கு - (வண்ணம்)

03.05.037 – பொது மனமும் ஆசை மிக்கு - (வண்ணம்)

2007-04-24

3.5.37 - மனமும் ஆசை மிக்கு - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தான தத்த

தனன தான தத்த

தனன தான தத்த .. தனதான )

(மகர கேத னத்தன் - திருப்புகழ் - சுவாமிமலை)

மனமு மாசை மிக்கு மிகவு(ம்) மாசை யுற்று

.. .. வரைவி லாதி யக்க .. அதனாலே

.. மதியை மால ழிக்க நிலையி லாத வற்றை

.. .. மயலி னால்நி லைக்கும் .. எனவேநான்

தினமு(ம்) நாடி எய்த்து வடிவு போய்மி குத்த

.. .. திரைகள் தோலி ருக்க .. வயதாகித்

.. தெரிவை மார ரற்ற மறலி தூதர் பற்று

.. .. தினமு றாமு னட்ட .. மலராலே

உனது தாளி ரட்டை தொழுது சீர்ந விற்றி

.. .. உருகு மாறு பத்தி .. அருளாயே

.. ஒழிவி லாநி ருத்த கடலின் மாவி டத்தை

.. .. ஒளிர வேமி டற்றில் .. இடுவோனே

மினலின் நேரி ருக்கும் இடையி னாளி டத்து

.. .. விரவ ஆற டைத்த .. சடையானே

.. விடைய தேறும் அத்த அதளி னாடை சுற்றி

.. .. விடவ ராவ சைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மனமும் ஆசை மிக்கு, மிகவும் மாசை உற்று,

.. .. வரைவு இலாது இயக்க, அதனாலே

.. மதியை மால் அழிக்க, நிலையிலாதவற்றை

.. .. மயலினால் நிலைக்கும் எனவே நான்,

தினமும் நாடி எய்த்து, வடிவு போய், மிகுத்த

.. .. திரைகள் தோல் இருக்க வயதாகித்,

.. தெரிவைமார் அரற்ற மறலி தூதர் பற்று

.. .. தினம் உறாமுன், அட்ட-மலராலே

உனது தாள்-இரட்டை தொழுது, சீர் நவிற்றி

.. .. உருகுமாறு பத்தி அருளாயே;

.. ஒழிவு-இலா நிருத்த; கடலின் மா-விடத்தை

.. .. ஒளிரவே மிடற்றில் இடுவோனே;

மினலின் நேர் இருக்கும் இடையினாள் இடத்து

.. .. விரவ, ஆறு அடைத்த சடையானே;

.. விடையது ஏறும் அத்த; அதளின் ஆடை சுற்றி

.. .. விட-அரா அசைத்த பெருமானே.


மனமும் ஆசை மிக்கு மிகவும் மாசை ற்று வரைவு இலாது இயக்க அதனாலே - என் மனம் ஆசை மிகுந்து, மிகவும் அழுக்குகள் அடைந்து, வரம்பின்றி என்னை இயக்க அதனால்; (வரைவு - எல்லை);

மதியை மால்ழிக்க நிலையிலாதவற்றை மயலினால் நிலைக்கும் னவே நான் - என் அறிவை ஆணவம் கெடுக்க, நிலையற்றவற்றை நிலைக்கும் என்று அறியாமையால் எண்ணி நான்;

தினமும் நாடி எய்த்து வடிவு போய் மிகுத்த திரைகள் தோல் இருக்க வயது ஆகித் - நாள்தோறும் விரும்பி அலைந்து வருந்தி, உடலின் அழகு போய் மிகவும் தோற்சுருக்கம் இருக்குமாறு முதுமை அடைந்து;

தெரிவைமார் அரற்ற மறலி தூதர் பற்று தினம் உறாமுன் அட்ட மலராலே - இல்லத்துப் பெண்கள் அழும்படி காலதூதர்கள் என்னைப் பற்றுகின்ற நாள் அடைவதன்முன்னமே எட்டுவித மலர்களால்; (தெரிவை - பெண்); (மறலி - நமன்); (உறுதல் - அடைதல்); (அட்ட மலர் - அஷ்டபுஷ்பம்);

உனது தாள்இரட்டை தொழுது சீர் நவிற்றி உருகுமாறு பத்தி அருளாயே - உன் இரு திருவடிகளைத் தொழுது உன் புகழைப் பாடி உருகும்படி எனக்குப் பக்தி அருள்வாயாக; (இரட்டை - இரண்டு); (நவிற்றுதல் - சொல்லுதல்);

ஒழிவு இலா நிருத்த - எப்பொழுதும் கூத்தாடுபவனே;

கடலின் மா விடத்தை ஒளிரவே மிடற்றில் இடுவோனே - கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை நீலமணி போல் திகழும்படி கண்டத்தில் இட்டவனே; (மிடறு - கண்டம்);

மினலின் நேர் இருக்கும் இடையினாள் இடத்து விரவ ஆறு அடைத்த சடையானே - மின்னல் போல் இருக்கும் மெல்லிடை உமை இடப்பக்கம் பாகமாகப் பொருந்தக், கங்கையைச் சடையில் அடைத்தவனே; (மினல் - மின்னல் - இடைக்குறை விகாரம்);

விடையது ஏறும் அத்த - இடபத்தின்மேல் ஏறும் தந்தையே;

அதளின் ஆடை சுற்றி விடராசைத்த பெருமானே - புலித்தோல் ஆடையைச் சுற்றி ஒரு விஷப்பாம்பைக் கட்டிய பெருமானே; (அதள் - தோல்); (அசைத்தல் - கட்டுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment