03.05.034 – பொது - எரியெனவே சுடு பழவினை - (வண்ணம்)
2007-04-17
3.5.34 – எரியெனவே சுடு பழவினை (பொது)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதன தானன தனதன தானன
தனதன தானன .. தனதான )
(பரவரி தாகிய வரையென நீடிய - திருப்புகழ் - சுவாமிமலை)
எரியென வேசுடு பழவினை நாடொறும்
.. .. இடரவை யேதர .. அதனாலே
.. இருநில(ம்) மீதுழல் நிலையுடை யேனையும்
.. .. இணையடி பாடிட .. அருள்வாயே
அரியயன் நேடிட அழலுரு வாயுயர்
.. .. அரியவ னேமறை .. உரைநாவா
.. அடிதொழு மாணியின் உயிர்கொல ஓடிய
.. .. அடல்நமன் மார்பினில் .. உதைகாலா
திரிபுர(ம்) நீறெழ ஒருகணை ஏவிய
.. .. சிலையுடை யாய்ஒரு .. தருநீழல்
.. திருமணி வாசகர் வருவழி மேவிய
.. .. திகழொளி யேஅடர் .. வனமாரும்
நரிகளை மாபரி எனவொரு நாடக(ம்)
.. .. நலமுற ஆடிய .. குழகாவான்
.. நதியொடு கூவிள(ம்) மதிபுனை வேணிய
.. .. நரைவிடை ஏறிய .. பெருமானே.
பதம் பிரித்து:
எரி எனவே சுடு பழவினை நாள்தொறும்
.. .. இடரவையே தர, அதனாலே
.. இருநிலம் மீது உழல் நிலை உடையேனையும்
.. .. இணையடி பாடிட அருள்வாயே;
அரி அயன் நேடிட அழல்-உருவாய் உயர்
.. .. அரியவனே; மறை உரை-நாவா;
.. அடிதொழு மாணியின் உயிர் கொல ஓடிய
.. .. அடல்-நமன் மார்பினில் உதை-காலா;
திரிபுரம் நீறெழ ஒரு கணை ஏவிய
.. .. சிலையுடையாய்; ஒரு தரு-நீழல்
.. திருமணி வாசகர் வரு-வழி மேவிய
.. .. திகழ்-ஒளியே; அடர் வனம் ஆரும்
நரிகளை மா-பரி என ஒரு நாடகம்
.. .. நலமுற ஆடிய குழகா; வான்
.. நதியொடு கூவிளம் மதி புனை வேணிய;
.. .. நரை-விடை ஏறிய பெருமானே.
எரி எனவே சுடு பழவினை நாள்தொறும் இடர் அவையே தர அதனாலே - தீப் போலச் சுடுகின்ற பழைய வினைகள் தினமும் துன்பத்தையே தர, அதனால்;
இருநிலம் மீது உழல் நிலை உடையேனையும் இணையடி பாடிட அருள்வாயே - இந்தப் பூமியின்மேல் வாடி உழல்கின்ற என்னையும் உன் இருதிருவடிகளைப் பாடுமாறு அருள்வாயாக; (இருநிலம் - பூமி);
அரி அயன் நேடிட அழல் உருவாய் உயர் அரியவனே - திருமால் பிரமன் இவர்கள் தேடும்படி சோதி வடிவில் உயர்ந்த அரியவனே;
மறை உரை நாவா - வேதங்களைப் பாடியருளியவனே;
அடிதொழு மாணியின் உயிர் கொல ஓடிய அடல்-நமன் மார்பினில் உதை காலா - உன் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் கொல்வதற்காக ஓடிய கொடிய வலிய கூற்றுவனது மார்பில் உதைத்த காலனே; (அடல் - கொல்லுதல்; வலிமை);
திரிபுரம் நீறு எழ ஒரு கணை ஏவிய சிலையுடையாய் - முப்புரங்களும் சாம்பலாகும்படி ஒரு கணையை எய்த வில்லை ஏந்தியவனே; (சிலை - வில்; மலை);
ஒரு தரு-நீழல் திருமணிவாசகர் வருவழி மேவிய திகழ் ஒளியே - ஒரு (குருந்த) மரத்தடியில் திருவுடைய மாணிக்கவாசகர் வரும் வழியில் ஞானஒளி வீசும் குருவாகி வீற்றிருந்தவனே;
அடர் வனம் ஆரும் நரிகளை மா பரி என ஒரு நாடகம் நலமுற ஆடிய குழகா - அடர்ந்த காட்டில் இருக்கும் நரிகளைச் சிறந்த குதிரைகள் ஆக்கித் திருவிளையாடல் புரிந்த அழகனே; (குழகன் - அழகன்; இளைஞன்); (இதனைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க);
வான்நதியொடு கூவிளம் மதி புனை வேணிய - கங்கை, வில்வம், திங்கள் இவற்றையெல்லாம் சடையில் அணிந்தவனே; (வானதி - வான் நதி - கங்கை); (கூவிளம் - வில்வம்); (வேணி - சடை);
நரைவிடை ஏறிய பெருமானே - வெள்ளை இடபத்தை வாகனமாக உடைய பெருமானே; (நரை - வெண்மை);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment