Saturday, August 31, 2019

03.04.072 - சிவன் - மைசூர்ப்பாகு - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-20

3.4.72 - சிவன் - மைசூர்ப்பாகு - சிலேடை - 1

-------------------------------------------------------

பல்லோர் மிகவிரும்பிப் பார்ப்பர் ஒருசிலர்க்குக்

கல்லாகக் காணும் கரத்தினில் - வில்லை

உடைய வலிமிகும் நெய்யாடும் என்பார்

சடையன்மை சூர்ப்பாகு தான்!


சொற்பொருள் :

பல்லோர் - 1. பல் உள்ளவர்கள்; / 2. பலர்;

விரும்புதல் - 1. ஆசைப்படுதல்; / 2. மிகவும் கருதுதல்;

பார்த்தல் - 1. கண்ணால் பார்த்தல்; / 2. ஆராய்தல்; வணங்குதல்;

காணுதல் - தென்படுதல்;

வில்லை - 1. துண்டம்; / 2. வில்லினை;

உடைதல் - தகர்தல்; பிளத்தல்;

உடைய - பெற்ற; கொண்டுள்ள;

வலி - 1. நோவு; / 2. வலிமை; சக்தி;

நெய் - 1. நெய்; / 2. தேன்; உதிரம்;

ஆடுதல் - 1. அளைதல்; / 2. நீராடுதல்;

என்பு - எலும்பு;

ஆர்தல் - பூணுதல்

என்பார் - 1. என்று சொல்வர்; / 2. என்பு ஆர் - எலும்பு அணியும்;

சடையன் - சடையை உடையவன்;

தான் - அசைச்சொல்;

மைசூர்ப்பாகு:

பல்லோர் மிக விரும்பிப் பார்ப்பர் - பல் உள்ளவர்கள் (-அல்லது- பலரும்) மிக ஆசையோடு (அதனைப்) பார்ப்பார்கள்.

ஒரு சிலர்க்குக் கல்லாகக் காணும் - ஒரு சிலருக்கு அது கல்லைப் போலத் தென்படும்.

கரத்தினில் வில்லை உடைய வலி மிகும் - கையில் (அந்த) வில்லை உடைய, (அதற்குச் செய்த முயற்சியால் உடைத்தவர்க்கு) மிகுந்த நோவாகும்.

நெய் ஆடும் என்பார் - அது நெய்யில் அளையும் (அதிக நெய் இருக்கும்) என்று சொல்வார்கள்.

மைசூர்ப்பாகுதான் - மைசூர்ப்பாகு.


சிவன்:

பல்லோர் மிக விரும்பிப் பார்ப்பர் - பலரும் (திருவுருவை) மிகப் பக்தியோடு தரிசிப்பார்கள். (-அல்லது-- பலரும் மிகப் பக்தியோடு வணங்குவார்கள்).

ஒரு சிலர்க்குக் கல்லாகக் காணும் - நாஸ்திகர்களுக்குக் கல்லாகத் தென்படும்.

கரத்தினில் வில்லை உடைய - (திரிபுரம் எரித்த சமயத்தில் அல்லது அருச்சுனனோடு காட்டில் மோதிய சமயத்தில்) கையில் வில்லை உடைய;

வலி மிகும் - மிகுந்த ஆற்றல் உடைய;

நெய் ஆடும் - நெய் அபிஷேகம் மகிழ்கின்ற;

என்பு ஆர் - எலும்பைப் பூண்ட;

சடையன் - சடையை உடையவன் - சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment