03.05.040 – பொது - வானவர்க்கிரங்கி - (வண்ணம்)
2007-04-28
3.5.40 - வானவர்க்கிரங்கி - (பொது)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தான தத்த தந்த .. தான தத்த தந்த
தான தத்த தந்த .. தனதான )
(வார
முற்ற பண்பின் -
திருப்புகழ்
- சுவாமிமலை)
வான வர்க்கி ரங்கி .. மாவி டத்தை உண்டு
.. .. வாழ வைத்த உன்ற .. னொருநாமம்
.. மால ழிக்கு(ம்) முந்தை .. மாச றுக்கு மண்டர்
.. .. வான ளிக்கும் என்ப .. துணராமல்
நான வத்து ழன்று .. நானி லத்த லைந்து
.. .. நாண மற்றி ழிந்து .. கெடுவேனோ
.. நாண்ம லர்ப்ப தங்கள் .. நாடு ளத்தில் நின்ற
.. .. நாத பத்தி பொங்க .. அருள்வாயே
கான கத்தி ருந்து .. காத லித்த ளிந்து
,. .. காவ லுக்கு நின்ற .. திருவேடர்
.. காய முற்ற தென்று .. மாம லர்க்க ணொன்று
,. .. காண அப்ப இன்பம் .. அருள்வோனே
மீன வற்றுள் ஒன்றை .. வேலை இட்டு வந்த
,. .. மேன்மை மிக்க அன்பர் .. அணிநாகை
.. மீன வர்க்கு கந்து .. வீட ளித்த பண்ப
,. .. வேல னைப்ப யந்த .. பெருமானே.
பதம் பிரித்து:
வானவர்க்கு இரங்கி .. மா-விடத்தை உண்டு
.. .. வாழவைத்த உன்றன் .. ஒரு-நாமம்
.. மால் அழிக்கு(ம்); முந்தை .. மாசு அறுக்கும்; அண்டர்
.. .. வான் அளிக்கும் என்பது .. உணராமல்
நான் அவத்து உழன்று .. நானிலத்து அலைந்து
.. .. நாணமற்று இழிந்து .. கெடுவேனோ?
.. நாண்மலர்ப்பதங்கள் .. நாடு உளத்தில் நின்ற
.. .. நாத, பத்தி பொங்க .. அருள்வாயே;
கானகத்து இருந்து .. காதலித்து அளிந்து
,. .. காவலுக்கு நின்ற .. திருவேடர்
.. காயமுற்றது என்று .. மா-மலர்க்கண் ஒன்று
,. .. காண அப்ப, இன்பம் .. அருள்வோனே;
மீனவற்றுள் ஒன்றை .. வேலை இட்டு வந்த
,. .. மேன்மை மிக்க அன்பர் .. அணி-நாகை
.. மீனவர்க்கு உகந்து .. வீடு அளித்த பண்ப;
,. .. வேலனைப் பயந்த .. பெருமானே.
வானவர்க்கு இரங்கி மாவிடத்தை உண்டு வாழ வைத்த உன்றன் ஒரு நாமம் - தேவர்களுக்கு இரங்கி ஆலகால விஷத்தை உண்டு அவர்களைக் காத்த உன்னுடைய ஒப்பற்ற திருநாமம்;
மால் அழிக்கும் முந்தை மாசு அறுக்கும் அண்டர் வான் அளிக்கும் என்பது உணராமல் - அறியாமையை அழிக்கும், பழவினைகளைத் தீக்கும், தேவலோகத்தினும் உயர்ந்த சிவலோகத்தைத் தரும் என்பதை உணராமல் (உன் திருப்பெயரை ஓதாமல்);
நான் அவத்து உழன்று நானிலத்து அலைந்து நாணம் அற்று இழிந்து கெடுவேனோ - நான் பயனற்றவற்றில் உழன்று இவ்வுலகில் அலைந்துதிரிந்து இழிவடைந்து அழிவேனோ?
நாண்மலர்ப் பதங்கள் நாடு உளத்தில் நின்ற நாத - புதுமலர் போன்ற திருவடிகளை விரும்பும் உள்ளத்தில் நீங்காமல் உறையும் நாதனே;
பத்தி பொங்க அருள்வாயே - என் மனத்தில் பக்தி மிகும்படி அருள்வாயாக;
கானகத்து இருந்து காதலித்து அளிந்து காவலுக்கு நின்ற திருவேடர் - காட்டில் வாழ்ந்து உன்மேல் அன்புகொண்டு உருகி உனக்குக் காவலாகி (இரவில் கண்விழித்து) நின்ற வேடர்;
காயமுற்றது என்று மாமலர்க்கண் ஒன்று காண அப்ப இன்பம் அருள்வோனே - உன் கண் காயம் அடைந்தது என்று வருந்தித், தமது அழகிய மலர்போன்ற கண் ஒன்றைத் தோண்டி நீ காண அப்பியது கண்டு அவர்க்குப் பேரின்பம் அருளியவனே;
மீன் அவற்றுள் ஒன்றை வேலை இட்டு வந்த மேன்மை மிக்க அன்பர் அணி நாகை மீனவர்க்கு உகந்து வீடு அளித்த பண்ப - தினமும் தம் வலையில் விழுந்த மீன்களுள் ஒன்றை உனக்கு என்று மீண்டும் கடலில் இட்டு வந்த பெருமையுடைய பக்தரும் அழகிய நாகப்பட்டினத்து மீனவர் தலைவருமான அதிபத்தர்க்கு அவர் பக்தியை மெச்சி வீடுபேறு அளித்த பண்பனே;
வேலனைப் பயந்த பெருமானே. - முருகனை மகனாக அருளிய பெருமானே; (பயத்தல் - பெறுதல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment