Saturday, August 24, 2019

03.05.047 – துருத்தி (குத்தாலம்) - இருநிலனில் எழுபிறவி அலையால் - (வண்ணம்)

03.05.047 – துருத்தி (குத்தாலம்) - இருநிலனில் எழுபிறவி அலையால் - (வண்ணம்)

2007-05-12

3.5.47) இருநிலனில் எழுபிறவி அலையால் - துருத்தி (குத்தாலம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தனதனன தனனா தனத்ததன

தனதனன தனதனன தனனா தனத்ததன

தனதனன தனதனன தனனா தனத்ததன .. தனதான )

(தனதனன = தனனதன )

(குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி .. திருப்புகழ் - சுவாமிமலை)


இருநிலனில் எழுபிறவி அலையால் மிகுத்துவரும்

.. .. .. இடர்களவை நலிவுதர வினையே பெருக்கிமிகும்

.. .. இருளிலுழல் மடமையொடு பலநோய் களுக்குடலும் .. இடமாகி

.. எருமைமிசை வருமறலி தமரால் இறுக்கலுறு

.. .. .. கயிறுதனில் விழுநிலையும் வருநாள் எரித்தபொடி

.. .. எனுநிலையை அடையுமுனம் உயுமோர் நினைப்புதனை .. உறுவேனோ


ஒருமனையில் விழவினொலி யுடனே அடுத்தமனை

.. .. .. அதனிலழும் ஒலியுமெழ அவர்மா வருத்தமற

.. .. உதவிசெய இவர்மகனை அளியா யெனத்தொழுது .. பணிதோழர்

.. அருகிலொரு முதலைவர முனைநா ளழித்தவுட

.. .. .. லதுவுமுயிர் கொளஅருளு மரனே உனைப்பரவி

.. .. அனுதினமும் இனியதமிழ் மலரே தொடுக்குமனம் .. அருளாயே


இருடியர்கள் அடியவர்கள் தொழுமோர் பொருப்புதனை

.. .. .. எறியவரு தசமுகனை விரலால் நெரித்தருளி

.. .. இசையினொடு பரவியழ ஒருவாள் அவற்கருளும் .. இறைவாமுன்

.. இருபுறமும் அசுரர்சுரர் நிரலாய் அரக்கயிறு

.. .. .. கொடுகடையும் அலைகடலில் விடமே எழப்பதறி

.. .. இணையடியை இமையவர்கள் தொழுநாள் அவர்க்கமுது .. தருமாறு


கருமுகிலின் நிறமொளிரு(ம்) மணிசேர் கழுத்துடைய

.. .. .. கருணைமிகு தலைவமதி புனைவாய் எதிர்த்தமத

.. .. கரியுரிவை அணியழக கொடிபோல் இடைத்தெரிவை .. ஒருகூறா

.. அருவியென விழிசொரிய உனையே நினைத்துநிதம்

.. .. .. அடிபணியு(ம்) மனமுடைய அடியார் தமக்கருளி

.. .. அறையளிகள் உலவுமணி பொழிலார் துருத்தியுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

இருநிலனில் எழுபிறவி அலையால் மிகுத்து வரும்

.. .. .. இடர்களவை நலிவு தர, வினையே பெருக்கி மிகும்

.. .. இருளில் உழல் மடமையொடு பல நோய்களுக்கு உடலும் .. இடம் ஆகி,

.. எருமைமிசை வரு-மறலி தமரால் இறுக்கலுறு

.. .. .. கயிறுதனில் விழு-நிலையும் வரு-நாள் எரித்த-பொடி

.. .. எனு(ம்) நிலையை அடையுமுனம் உயும் ஓர் நினைப்புதனை .. உறுவேனோ;


ஒரு மனையில் விழவின் ஒலியுடனே அடுத்த மனை

.. .. .. அதனில் அழும் ஒலியும் எழ, அவர் மா வருத்தம் அற

.. .. உதவி-செய, "இவர் மகனை அளியாய்" எனத் தொழுது .. பணி-தோழர்

.. அருகில் ஒரு முதலை வர, முனை-நாள் அழித்த உடல்

.. .. .. அதுவும் உயிர் கொள அருளும் அரனே; உனைப் பரவி

.. .. அனுதினமும் இனிய தமிழ்-மலரே தொடுக்கு(ம்) மனம் .. அருளாயே


இருடியர்கள் அடியவர்கள் தொழும் ஓர் பொருப்புதனை

.. .. .. எறிய வரு தசமுகனை விரலால் நெரித்தருளி,

.. .. இசையினொடு பரவி அழ, ஒரு வாள் அவற்கு அருளும் .. இறைவா; முன்

.. இருபுறமும் அசுரர் சுரர் நிரலாய் அரக்-கயிறு

.. .. .. கொடு கடையும் அலைகடலில் விடமே எழப், பதறி

.. .. இணையடியை இமையவர்கள் தொழு-நாள், அவர்க்கு அமுது .. தருமாறு


கருமுகிலின் நிறம் ஒளிரு(ம்) மணி சேர் கழுத்து உடைய,

.. .. .. கருணை மிகு தலைவ; மதி புனைவாய்; எதிர்த்த மத-

.. .. கரி-உரிவை அணி அழக; கொடிபோல் இடைத்-தெரிவை .. ஒரு கூறா;

.. அருவி என விழி சொரிய, உனையே நினைத்து நிதம்

.. .. .. அடிபணியு(ம்) மனம் உடைய அடியார் தமக்கு அருளி,

.. .. அறை-அளிகள் உலவும் அணி பொழில் ஆர் துருத்தி உறை .. பெருமானே.


இருநிலனில் எழுபிறவி அலையால் மிகுத்து வரும் இடர்களவை நலிவு தர – பூமியில் தொடர்ந்து எழுகின்ற பிறவியலையால் பெருகி வரும் துன்பங்கள் என்னை வருத்த; (இருநிலன் - பூமி);

வினையே பெருக்கி மிகும் இருளில் உழல் மடமையொடு பல நோய்களுக்கு டலும் இடம் ஆகி - தீவியயையே பெருக்கிப் பேரிருளில் உழலும் அறியாமையோடு பல நோய்கள் இந்த உடலைப் பற்றிக்கொள்ள;

எருமைமிசை வரு-மறலி தமரால் இறுக்கலுறு கயிறுதனில் விழு-நிலையும் வரு-நாள் - எருமையின்மேல் வரும் இயமனது தூதர்களால் சுருக்குக்கயிற்றில் விழும் நிலை எனக்கு வரும் தினம்; (மறலி - இயமன்);

எரித்த-பொடி எனு(ம்) நிலையை அடையுமுனம் உயும் ஓர் நினைப்புதனை உறுவேனோ - சுட்ட சாம்பல் என்ற நிலையை அடைவதன்முன்னமே உய்யும் எண்ணத்தை நான் அடைவேனோ; (பொடி - சாம்பல்); (உயும் - உய்யும் - இடைக்குறை விகரம்);


ஒரு மனையில் விழவின் ஒலியுடனே அடுத்த மனை அதனில் அழும் ஒலியும் எ(புக்கொளியூர் அவிநாசியில்) ஒரு வீட்டில் விழாவின் மங்கல ஒலியும் பக்கத்தில் இன்னொரு வீட்டில் அழுகை ஒலியும் கேட்க; (விழ – விழா);

அவர் மா வருத்தம் அற உதவி-செய(விவரம் அறிந்துகொண்டு), அப்படி அழுகையொலி கேட்ட வீட்டிலுள்ளோரது பெருவருத்தம் தீர உதவி செய்ய;

"இவர் மகனை அளியாய்" னத் தொழுது பணி-தோழர் அருகில் ஒரு முதலை வர"(முன்பு முதலையால் உண்ணப்பட்டு அழிந்த) இவர்களது மகனைத் தந்தருள்க" என்று தொழுது வணங்கிய தம்பிரான் தோழரான சுந்தரர் அருகே ஒரு முதலை வந்து;

முனை-நாள் அழித்த ல் அதுவும் உயிர் கொள அருளும் அரனே - அது முன்னொரு நாள் உண்ட சிறுவனை உயிரோடு தருமாறு அருளிய ஹரனே; (முனைநாள் - முன்னைநாள் - முற்காலத்தில்); (சுந்தரர் வரலாற்றில் முதலை உண்ட பாலனை உயிர்ப்பித்த நிகழ்ச்சியைப் பெரியபுராணத்திற் காண்க); (சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "புக்கொளியூர் அவினாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே");

உனைப் பரவி அனுதினமும் இனிய தமிழ்-மலரே தொடுக்கு(ம்) மனம் அருளாயே - உன்னைத் துதித்துத் தினமும் இனிய தமிழ்ச்சொல்மலர்களைத் தொடுத்துப் பாமாலைகளைப் புனையும் மனத்தை எனக்கு அருள்வாயாக; (பரவுதல் - துதித்தல்);


இருடியர்கள் அடியவர்கள் தொழும் ஓர் பொருப்புதனை எறிய வரு தசமுகனை விரலால் நெரித்தருளி - ரிஷிகளும் பக்தர்களும் வழிபடும் ஒப்பற்ற கயிலைமலையைப் பெயர்த்து எறிய வந்த இராவணனைத் திருப்பாத விரலால் நசுக்கி; (இருடி - ரிஷி); (ஓர் - ஒப்பற்ற); (பொருப்பு - மலை);

இசையினொடு பரவி , ஒரு வாள் அவற்கு அருளும் இறைவா - (பின்) அவன் இசைபாடித் துதித்து அழுது இறைஞ்ச, அவனுக்கு இரங்கிச் சந்திரஹாஸம் என்ற என்ற வாளை அருளிய இறைவனே;

முன் இருபுறமும் அசுரர் சுரர் நிரலாய் அரக்-கயிறு கொடு கடையும் அலைகடலில் விடமே எழப் - முன்பு இருபக்கமும் அசுரர்களும் தேவர்களும் வரிசையாகி நின்று வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்த பாற்கடலில் ஆலகாலமே விளைய; (நிரல் - வரிசை); (அர – பாம்பு);

பதறி இணையடியை இமையவர்கள் தொழு-நாள், அவர்க்கு அமுது தருமாறு - தேவர்கள் பதறி இருதிருவடியை வணங்கிய பொழுது, அவர்களுக்கு அமுதத்தை தருவதற்காக;


கருமுகிலின் நிம் ஒளிரு(ம்) மணி சேர் கழுத்து டைய, கருணை மிகு தலைவ – கரிய மேகத்தின் நிறம் திகழும் மணியைக் கண்டத்தில் தாங்கிய, பெருங்கருணைத் தலைவனே;

மதி புனைவாய் - சந்திரனைச் சூடியவனே;

எதிர்த்த மத-கரி-உரிவை அணி அழக – போர்செய்த மதயானையின் தோலை மார்பில் போர்த்த அழகனே; (உரிவை - தோல்);

கொடிபோல் இடைத்-தெரிவை ஒரு கூறா - கொடி போன்ற சிற்றிடையை உடைய உமை ஒரு கூறு ஆனவனே; (தெரிவை - பெண்);

அருவி ன விழி சொரிய, உனையே நினைத்து நிதம் அடிபணியு(ம்) மனம் உடைய அடியார் தமக்கு அருளி - அருவி போலக் கண்கள் நீர் சொரிய, உன்னையே நினைத்துத் தினமும் வழிபடும் மனம் உடைய பக்தர்களுக்கு அருள்புரிந்து;

அறை-ளிகள் லவும் அணி பொழில் ஆர் துருத்தி றை பெருமானே - ஒலிக்கின்ற வண்டுகள் சஞ்சரிக்கும் அழகிய சோலை சூழ்ந்த திருத்துருத்தி (குத்தாலம்) என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;


பிற்குறிப்பு:

இப்பாடலில் மோனை வரும் இடங்களில் ஒரோவழி எதுகை வந்துள்ளது.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment