Saturday, August 10, 2019

03.05.038 – பொது - நாதி உனது இரு பாதமலர் - (வண்ணம்)

03.05.038 – பொது - நாதி உனது இரு பாதமலர் - (வண்ணம்)

2007-04-27

3.5.38 - நாதி உனது இரு பாதமலர் (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான )

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)

நாதி உனதிரு பாத மலரெனு(ம்)

.. .. ஞானம் உறுவழி .. அறியாது

.. நாளும் இழிவினை நாடி அழிவுறு

.. .. நானும் உயர்கதி .. பெறுவேனோ

காதில் ஒருகுழை பூணும் உனதடி

.. .. காதல் செயு(ம்)மனம் .. உறுவேனோ

.. காத வருநமன் வீழ அவனுயிர்

.. .. கால உதைதரு .. கழலானே

நீதி அதுவழு வாத இறைமனு

.. .. நீடு புகழ்பெற .. அருள்வோனே

.. நீறு திகழ்திரு மார்ப விடமொரு

.. .. நீல மணியென .. உடையானே

போதில் உறைபவன் மாயன் இருவரும்

.. .. ஓதி வழிபட .. உயர்சோதீ

.. போழ்வெண் மதியுடன் நாக(ம்) மணமிகு

.. .. பூவு(ம்) முடியணி .. பெருமானே.


பதம் பிரித்து:

நாதி உனது இரு பாதமலர் எனும்

.. .. ஞானம் உறு-வழி அறியாது,

.. நாளும் இழிவினை நாடி, அழிவுறு

.. .. நானும் உயர்கதி பெறுவேனோ;

காதில் ஒரு குழை பூணும் உனது அடி

.. .. காதல் செயும் மனம் உறுவேனோ;

.. காத வரு-நமன் வீழ, அவன் உயிர்

.. .. கால, உதை-தரு கழலானே;

நீதி அது வழுவாத இறை மனு

.. .. நீடு புகழ் பெற அருள்வோனே;

.. நீறு திகழ் திரு மார்ப; விடம் ஒரு

.. .. நீல மணி என உடையானே;

போதில் உறைபவன் மாயன் இருவரும்

.. .. ஓதி வழிபட உயர்-சோதீ;

.. போழ்-வெண் மதியுடன் நாகம் மண(ம்)மிகு

.. .. பூவும் முடி அணி பெருமானே.


நாதி உனது இரு பாதமலர் எனும் ஞானம் உறு வழி அறியாது - உன் இரு திருவடித்தாமரைகளே காக்கும் என்ற ஞானத்தைப் பெறும் மார்க்கத்தை அறியாமல்; (நாதி - காப்பாற்றுபவன்; காப்பாற்றுவது;)

நாளும் இழிவினை நாடி அழிவுறு நானும் உயர்கதி பெறுவேனோ - என்றும் இழிந்த செயல்களையே விரும்பிச் செய்து அழிகின்ற நானும் நற்கதி பெறுவேனோ?

காதில் ஒரு குழை பூணும் உனது அடி காதல் செய்யும் மனம் உறுவேனோ - ஒரு காதில் குழை (இன்னொரு காதில் தோடு) அணியும் உன் திருவடியைக் காதல் செய்யும் மனத்தை அடைவேனோ? அருள்வாயாக;

காத வரு நமன் வீழ அவன் உயிர் கால உதைதரு கழலானே - கொல்ல வரும் கூற்றுவன் தரையில் விழுந்து அவனது உயிரைக் கக்கும்படி உதைத்த கழல் அணிந்த திருவடியை உடையவனே; (காதுதல் - கொல்லுதல்); (கால்தல்- கக்குதல்);

நீதிஅது வழுவாத இறை மனு நீடு புகழ் பெற அருள்வோனே - சிறிதும் நீதி குன்றாத அரசனான மனுநீதிச்சோழன் நீண்ட புகழ் அடைய அருளியவனே; (மனுநீதிச் சோழன் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

நீறு திகழ் திரு மார்ப - மார்பில் திருநீற்றைப் பூசியவனே;

விடம் ஒரு நீலமணின உடையானே - ஆலகால விடத்தை ஒப்பற்ற மணியாகக் கண்டத்தில் உடையவனே;

போதில் உறைபவன் மாயன் இருவரும் ஓதி வழிபட உயர் சோதீ - பூவில் உறையும் பிரமனும் திருமாலும் உன்னைப் போற்றி வணங்கும்படி உயர்ந்த சோதியே; (போது - பூ);

போழ் வெண் மதியுடன் நாகம் மணம் மிகு பூவும் முடிணி பெருமானே - துண்ட வெண் திங்களோடு (பிறைச்சந்திரனோடு), பாம்பு, வாசமலர் இவற்றைத் திருமுடியில் அணிந்த பெருமானே. (போழ் - துண்டம்; போழ்தல் - பிளவுபடுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment