03.05.043 – பொது - தீதினைப் புரிந்து - (வண்ணம்)
2007-05-03
3.5.43 - தீதினைப் புரிந்து - (பொது)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தானனத் தனந்த .. தனதான )
(காமியத் தழுந்தி யிளையாதே - திருப்புகழ் - சுவாமிமலை)
தீதினைப் புரிந்து .. திரியாமல்
.. தேவுனைப் பணிந்து .. மகிழ்வேனோ
போதினைச் சொரிந்து .. தொழுவார்தம்
.. பூசனைக் கிரங்கி .. அருள்வோனே
சோதியுட் பிறங்கும் .. ஒளியானாய்
.. சோமனைப் புனைந்த சடையானே
மாதிடத் தமர்ந்த .. மணவாளா
.. மாரனைக் கடிந்த .. பெருமானே.
தீதினைப் புரிந்து திரியாமல் - தீய செயல்களை விரும்பிச் செய்து உழலாமல்; (புரிதல் - விரும்புதல்; செய்தல்);
தே உனைப் பணிந்து மகிழ்வேனோ - இறைவனான உன்னை வழிபட்டு மகிழ்வேனோ? (தே - தெய்வம்);
போதினைச் சொரிந்து தொழுவார்தம் பூசனைக்கு இரங்கி அருள்வோனே - பூக்களைத் தூவி வணங்கும் அன்பர்களது பூசனையை ஏற்று அவர்களுக்கு இரங்கி அருள்பவனே; (போது - பூ);
சோதியுள் பிறங்கும் ஒளி ஆனாய் - சூரியன் முதலாகிய சோதிகளுள் ஒளியாக இருப்பவன்; (பிறங்குதல் - விளங்குதல்; ஒளிவீசுதல்); (அப்பர் தேவாரம் - 4.30.3 - "சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுட் சோதி வைத்தார்");
சோமனைப் புனைந்த சடையானே - சந்திரனைச் சடைமேல் அணிந்தவனே;
மாது இடத்து அமர்ந்த மணவாளா - உமையை இடப்பாகமாக விரும்பிய மணவாளனே; (அமர்தல் - விரும்புதல்);
மாரனைக் கடிந்த பெருமானே - மன்மதனை நெற்றிக்கண்ணால் நோக்கி எரித்து அழித்த பெருமானே; (மாரன் - காமன்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment