Friday, August 23, 2019

03.05.046 – பொது - நாமமும் உரைத்துப் பூக்கும் - (வண்ணம்)

03.05.046 – பொது - நாமமும் உரைத்துப் பூக்கும் - (வண்ணம்)

2007-05-09

3.5.46 - நாமமும் உரைத்துப் பூக்கும் - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானன தனத்தத் தாத்த .. தானன தனத்தத் தாத்த

தானன தனத்தத் தாத்த .. தனதான )

(வார்குழல் விரித்துத் தூக்கி - திருப்புகழ் - சுவாமிமலை)


நாமமும் உரைத்துப் பூக்கு(ம்) .. நாண்மலர் தொடுத்துச் சூட்டி

.. .. நாடொறு(ம்) நினைத்துப் போற்ற .. அறியேனும்

.. நாரினை அகத்திற் சேர்த்து .. மாதமிழ் எடுத்துக் கோத்து

.. .. நாயக நினக்குச் சாத்த .. அருளாயே

காமனொர் சரத்தைக் கோத்து .. வீசவும் விழித்துப் பார்த்த

.. .. காரண கறுப்பைக் காட்டு(ம்) .. மிடறானே

.. காய்கணை எடுத்துப் பூட்டி .. ஓர்விழி பறித்துச் சேர்த்த

.. .. கானவர் களிக்கப் பேற்றை .. அருள்வோனே

வாமன உருப்பெற் றோத்தை .. வாயினில் உரைத்துக் கேட்ட

.. .. மாயனு(ம்) மணத்தைக் காட்டு(ம்) .. மலரானும்

.. மாநிலம் இடக்கக் காற்றில் .. மேலெழ அயர்த்துப் போற்ற

.. .. வானுயர் நெருப்புத் தோற்றம் .. உடையானே

மாமழு வலத்திற் காட்டி .. வாரணி தனத்தைக் காட்டு(ம்)

.. .. மாதினை இடத்திற் காட்டு(ம்) .. மணவாளா

.. வானதி ஒலித்துத் தாக்கும் .. வார்சடை பிறைக்குக் காட்டி

.. .. வாழென அளித்துக் காத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

நாமமும் உரைத்துப், பூக்கும் .. நாண்மலர் தொடுத்துச் சூட்டி,

.. .. நாள்தொறும் நினைத்துப் போற்ற .. அறியேனும்,

.. நாரினை அகத்திற் சேர்த்து, .. மா-தமிழ் எடுத்துக் கோத்து,

.. .. நாயக, நினக்குச் சாத்த .. அருளாயே;

காமன் ஒர் சரத்தைக் கோத்து .. வீசவும் விழித்துப் பார்த்த

.. .. காரண; கறுப்பைக் காட்டும் .. மிடறானே;

.. காய்-கணை எடுத்துப் பூட்டி, .. ஓர் விழி பறித்துச் சேர்த்த

.. .. கானவர் களிக்கப் பேற்றை .. அருள்வோனே;

வாமன உருப் பெற்று, ஓத்தை .. வாயினில் உரைத்துக் கேட்ட

.. .. மாயனும், மணத்தைக் காட்டும் .. மலரானும்,

.. மா-நிலம் இடக்கக், காற்றில் .. மேல் எழ, அயர்த்துப் போற்ற,

.. .. வான்-உயர் நெருப்புத் தோற்றம் .. உடையானே;

மா-மழு வலத்திற் காட்டி, .. வார்-அணி தனத்தைக் காட்டும்

.. .. மாதினை இடத்திற் காட்டும் .. மணவாளா;

.. வானதி ஒலித்துத் தாக்கும் .. வார்-சடை பிறைக்குக் காட்டி

.. .. "வாழ்" என அளித்துக் காத்த .. பெருமானே.


நாமமும் உரைத்துப், பூக்கும் நாண்மலர் தொடுத்துச் சூட்டி, நாள்தொறும் நினைத்துப் போற்ற அறியேனும் - உன் திருப்பெயரை ஓதிப், புதுமலர்களைத் தொடுத்து உனக்குச் சூட்டித், தினமும் தியானித்து வழிபட அறியாத நானும்;

நாரினை அகத்திற் சேர்த்து, மா-தமிழ் எடுத்துக் கோத்து, நாயக, நினக்குச் சாத்த அருளாயே - அன்பை உள்ளத்தில் பெருக்கிச், சிறந்த தமிழ்ச்சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பாமாலைகள் கோத்து, நாயகனே, உனக்குச் சூட்ட அருள்வாயாக; (நார் - அன்பு ); (எடுத்தல் - தெரிந்தெடுத்தல்); (சாத்துதல் - அணிதல்);

காமன் ஒர் சரத்தைக் கோத்து வீசவும் விழித்துப் பார்த்த காரண - மன்மதன் ஒரு மலரம்பைக் கோத்து ஏவவும் அவனை நெற்றிக்கண்ணால் பார்த்து எரித்த காரணனே; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);

கறுப்பைக் காட்டும் மிடறானே - நீலகண்டனே; (கறுப்பு - கருமை); (மிடறு - கண்டம்);

காய்-கணை எடுத்துப் பூட்டி, ஓர் விழி பறித்துச் சேர்த்த கானவர் களிக்கப் பேற்றை அருள்வோனே - கொடிய அம்பை எடுத்துக் முகத்தில் வைத்து, ஒரு (/ ஒப்பற்ற) கண்ணைத் தோண்டி அப்பிய வேடரான கண்ணப்பர் மகிழ அவருக்கு அருள்புரிந்தவனே; (பூட்டுதல் - வைத்தல்); (கானவர் - வேடர்); (சம்பந்தர் தேவாரம் - 3.69.4 - "வாய்கலச மாகவழி பாடுசெய்யும் வேடன்மல ராகுநயனம் காய்கணை யினாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே.")

வாமன உருப் பெற்று, ஓத்தை வாயினில் உரைத்துக் கேட்ட மாயனும், மணத்தைக் காட்டும் மலரானும் - வாமன வடிவம் ஏற்று வேதத்தை வாயால் சொல்லி (மூவடி மண்) யாசித்த திருமாலும் வாசம் மிக்க தாமரைமலர்மேல் உறையும் பிரமனும்; (ஓத்து - வேதம்); (கேட்டல் - யாசித்தல்);

மா-நிலம் இடக்கக், காற்றில் மேல் எழ, அயர்த்துப் போற்ற, வான் உயர் நெருப்புத் தோற்றம் உடையானே - நிலத்தை அகழ்ந்தும் காற்றில் மேலே உயர்ந்தும் (அடிமுடி காணாது) தளர்ந்து வழிபடுமாறு வானில் ஓங்கிய சோதி வடிவத்தை உடையவனே;

மா மழு வலத்திற் காட்டி, வார் அணி தனத்தைக் காட்டும் மாதினை இடத்திற் காட்டும் மணவாளா - மழுவை வலக்கையில் ஏந்திக், கச்சு அணிந்த முலையையுடைய உமையை இடப்பக்கம் காட்டும் மணவாளனே;

வானதி ஒலித்துத் தாக்கும் வார்சடை பிறைக்குக் காட்டி, "வாழ்" என அளித்துக் காத்த பெருமானே - கங்கை ஒலித்து மோதும் நீள்சடையைப் பிறைச்சந்திரனுக்குக் காட்டி அங்கே வாழ் என்று கொடுத்துக் காத்த பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment