Sunday, August 25, 2019

03.05.049 – பொது - தேவைகள் எத்தனை - (வண்ணம்)

03.05.049 – பொது - தேவைகள் எத்தனை - (வண்ணம்)

2007-05-14

3.5.49) தேவைகள் எத்தனை - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானன தத்தன தத்தன தத்தன

தானன தத்தன தத்தன தத்தன

தானன தத்தன தத்தன தத்தன .. தனதான )

(கோமள வெற்பினை - திருப்புகழ் - சுவாமிமலை)


தேவைகள் எத்தனை இச்சைகள் எத்தனை

... ... தேடுப ணத்தைநி னைத்துநி னைத்திழை

.. .. தீமைகள் எத்தனை இப்படி இப்புவி .. உழலாமல்

.. தேனினி னித்திடு சொற்றமி ழைக்கொடு

... ... சேவடி யைத்தின(ம்) நச்சிவ ழுத்திடு

.. சீரிய நற்குணம் உற்றிடு தற்கருள் .. புரியாயே

மூவர ணத்தினர் நித்தமி ழைத்திடு

... ... மாவிட ருற்றவர் அத்துயர் அற்றிட

.. .. மூவரின் முற்படும் அத்தவெ னத்தொழ .. அவர்வாழ

.. மூரிமி குத்தசி லைக்கொரு வெற்பினை

... ... ஆரவ ளைத்தர வத்தையி ணைத்தெயில்

.. .. மூளெரி பற்றிவி ழக்கணை தொட்டருள் .. ஒருவீரா

காவல ரைக்கணை உய்த்தவ னைப்பொடி

... ... ஆகிட நெற்றியி லுற்றக ணைக்கொடு

.. .. காதிய ரற்றிர திக்கென மற்றுயிர் .. தருவோனே

.. காதல்மி குத்தடி யைத்தொழு நற்றவ

... ... மாணித னைக்கொல உற்றவி ரக்கமில்

.. .. காலனி ரத்தமு குத்தழி வுற்றிட .. உதைகாலா

பாவலர் செப்பிய நற்றமிழ் மெச்சிய

... ... காவல புற்றர வைத்தரி அற்புத

.. .. பாவைத னக்கொரு பக்கம ளித்திடு .. மணவாளா

.. பாய்நதி எற்றிடு பொற்சடை யிற்பல

... ... நாண்மல ரைப்பிறை யைப்புனை பொற்பின

.. .. பாரினர் அட்டுப லிக்குவி ருப்புறு .. பெருமானே.


பதம் பிரித்து:

தேவைகள் எத்தனை, இச்சைகள் எத்தனை,

... ... தேடு பணத்தை நினைத்து நினைத்து இழை

.. .. தீமைகள் எத்தனை, இப்படி இப்புவி .. உழலாமல்,

.. தேனின் இனித்திடு சொற்றமிழைக்கொடு

... ... சேவடியைத் தின(ம்) நச்சி வழுத்திடு

.. சீரிய நற்குணம் உற்றிடுதற்கு அருள் .. புரியாயே;

மூவரணத்தினர் நித்தம் இழைத்திடு

... ... மாவிடர் உற்றவர் அத்துயர் அற்றிட,

.. .. "மூவரின் முற்படும் அத்த" எனத் தொழ, .. அவர் வாழ

.. மூரி மிகுத்த சிலைக்கு ஒரு வெற்பினை

... ... ஆர வளைத்து அரவத்தை இணைத்து எயில்

.. .. மூள்-எரி பற்றி விழக் கணை தொட்டருள் .. ஒரு வீரா;

கா-அலரைக் கணை உய்த்தவனைப் பொடி

... ... ஆகிட நெற்றியில் உற்ற கணைக்கொடு

.. .. காதி, அரற்று இரதிக்கு என மற்று-உயிர் .. தருவோனே;

.. காதல் மிகுத்து அடியைத் தொழு நற்றவ

... ... மாணிதனைக் கொல உற்ற இரக்கம்-இல்

.. .. காலன் இரத்தம் உகுத்து அழிவுற்றிட .. உதை காலா;

பாவலர் செப்பிய நற்றமிழ் மெச்சிய

... ... காவல; புற்றரவைத் தரி அற்புத;

.. .. பாவைதனக்கு ஒரு பக்கம் அளித்திடு .. மணவாளா;

.. பாய்-நதி எற்றிடு பொற்சடையிற் பல

... ... நாண்மலரைப் பிறையைப் புனை பொற்பின;

.. .. பாரினர் அட்டு பலிக்கு விருப்புறு .. பெருமானே.


தேவைகள் எத்தனை இச்சைகள் எத்தனை தேடு பணத்தை நினைத்து நினைத்து இழை தீமைகள் எத்தனை இப்படி இப்புவி உழலாமல் - தேவைகளும் ஆசைகளும் தேடும் பொருளை எண்ணி எண்ணிச் செய்யும் தீமைகளும் எண்ணற்றவை; இப்படி இந்த உலகில் உழலாமல்;

தேனின் இனித்திடு சொற்றமிழைக்கொடு சேவடியைத் தினம் நச்சி வழுத்திடு சீரிய நற்குணம் உற்றிடுதற்கு அருள் புரியாயே - தேனைவிட இனிக்கின்ற சொற்கள் பொருந்திய தமிழால் உன் சிவந்த திருவடியைத் தினமும் விரும்பி வழிபடும் உயர்ந்த நற்குணத்தைப் பெறுவதற்கு அருள்வாயாக; (நச்சுதல் - விரும்புதல்); (வழுத்துதல் - துதித்தல்); (சீரிய - சிறப்பான);

மூவரணத்தினர் நித்தம் இழைத்திடு மார் உற்றவர் அத்துயர் அற்றிட மூவரின் முற்படும் அத்தனத் தொழ அவர் வாழ - முப்புரத்து அசுரர்கள் தினமும் செய்யும் பெரும் துன்பங்களுக்கு ஆளான தேவர்கள் அந்தத் துன்பம் தீரும்படி, "பிரமன், திருமால், உருத்திரன் என்ற மூவரினும் மேலான தந்தையே" என்று உன்னைத் தொழ, அவர்கள் உய்யும்படி; (மூ அரணம் - மூன்று கோட்டைகள் - முப்புரம்); (அத்தன் - தந்தை);

மூரி மிகுத்த சிலைக்கு ஒரு வெற்பினை ஆர வளைத்து அரவத்தை இணைத்து எயில் மூள் எரி பற்றி விழக் கணை தொட்டுஅருள் ஒரு வீரா - வலிமை மிக்க வில்லாக ஒரு மலையை நன்கு வளைத்து ஒரு பாம்பை நாணாகக் கட்டி முப்புரங்களும் மூளும் தீப்பற்றி அழியும்படி ஒரு கணையை எய்து அருள்செய்த ஒப்பற்ற வீரனே; (மூரி - வலிமை); (சிலை - வில்); (வெற்பு - மலை); (ஆர - மிக); (ஒரு - ஒப்பற்ற);

காலரைக் கணை உய்த்தவனைப் பொடி ஆகிட நெற்றியில் உற்ற கணைக்கொடு காதிரற்று இரதிக்கு என மற்று உயிர் தருவோனே - (சோலையில் பூக்கும் மலர்களைக் கணையாக ஏவிய மன்மதன் சாம்பல் ஆகும்படி அவனை நெற்றிக்கண்ணால் அழித்துப், பின் புலம்பிய இரதிக்கு இரங்கி அவளுக்காக அவனுக்கு மீண்டும் உயிரைத் தந்தவனே; (கா- சோலை); (அலர் - பூ); (உய்த்தல் - ஆயுதம் பிரயோகித்தல்); (கணைக்கொடு - கண்ணைக்கொண்டு - கண்ணால்); (காதுதல் - கொல்லுதல்); (மற்று - மீண்டும்);

காதல் மிகுத்து அடியைத் தொழு நற்றவ மாணிதனைக் கொல உற்ற இரக்கம்-ல் காலன் இரத்தம் உகுத்து அழிவுற்றிட உதை காலா - பக்தி மிகுந்து திருவடியைத் தொழுத நல்ல தவமுடைய மார்க்கண்டேயரைக் கொல்ல அடைந்த இரக்கமற்ற காலன் இரத்தம் சிந்தி இறக்குமாறு அவனை உதைத்த காலனே (காலகாலனே); (மாணி - அந்தணச் சிறுவன்; மார்க்கண்டேயர்); (கொல - கொல்ல); (உறுதல் - அடைதல்); (உகுத்தல் - சிந்துதல்);

பாவலர் செப்பிய நற்றமிழ் மெச்சிய காவல - புலவர்கள் பாடிய நல்ல தமிழை விரும்பிய காவலனே; (காவலன் - அரசன்);

புற்றரவைத் தரி அற்புத - புற்றில் வாழும் தன்மையை உடைய பாம்பை மாலையாகத் தரித்தவனே;

பாவைதனக்கு ஒரு பக்கம் அளித்திடும் மணவாளா - உமைக்குத் திருமேனியில் ஒரு பக்கத்தை அளித்த மணவாளனே;

பாய்நதி ற்றிடு பொற்சடையிற் பல நாண்மலரைப் பிறையைப் புனை பொற்பின - பாயும் கங்கை மோதும் பொற்சடையில் பல புதுமலர்களையும் பிறைச்சந்திரனையும் அணிந்த அழகனே; (எற்றுதல் - மோதுதல்); (பொற்பு - அழகு);

பாரினர் அட்டு பலிக்கு விருப்புறு பெருமானே - உலகோர் இடும் பிச்சைக்கு விருப்பம் உடைய பெருமானே; (பார் - உலகம்); (அட்டுதல் - இடுதல்); (பலி - பிச்சை); (அகம் - மனம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment