Thursday, August 29, 2019

03.05.051 – நாகை (நாகப்பட்டினம்) - இறாமலியும் ஓதம் - (வண்ணம்)

03.05.051 – நாகை (நாகப்பட்டினம்) - இறாமலியும் ஓதம் - (வண்ணம்)

2007-05-18

3.5.51) இறாமலியும் ம் - நாகை (நாகப்பட்டினம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனாதனன தான தனாதனன தான

தனாதனன தான .. தனதான )

(இந்த அமைப்பைப் பெரும்பாலும் ஒத்த அமைப்பு உடைய திருப்புகழ்:

இராவினிருள் போலும் - திருப்புகழ் - சுவாமிமலை)


இறாமலியும் ஓதம் அறாதொலிசெய் நாகை

..... யிலேஉறையும் ஈச .. உனைநாடா

.. திடாதவரை வீர உதாரகுண சீல

..... இராமனன தீர .. எனலாமோ

சுறாவுலவு வேலை யிலோர்கலமி லாது

..... துழாவிமிக வாடு .. வதுபோலத்

.. தொழாதுநித(ம்) மாலின் விடாதபிடி யோடு

..... சுலாவுமனை யோர்கள் .. அவர்மேலே

பொறாமைமிக வாகி விடாயிடைவி டாது

..... பொலாவினையை நாடி .. நலமேதும்

.. புகாதமன மாறி நிலாவணியு(ம்) நாத

..... புராணவென ஓத .. அருளாயே

அறாவினையு(ம்) மாள அடாதனவும் ஓட

..... அராமுடியில் ஏறும் .. உனையோதி

.. அவாவையறு மாணி படாமலுயிர் வாழ

..... அழாநமனை நூறு .. பெருமானே.


பதம் பிரித்து :

"இறா மலியும் ஓதம் அறாது ஒலி செய் நாகை

..... யிலே உறையும் ஈச .. உனை நாடாது,

.. இடாதவரை "வீர! உதார! குண சீல!

..... இராமன் அன தீர!" .. எனல் ஆமோ ?

சுறா உலவு வேலையில் ஓர் கலம் இலாது

..... துழாவி மிக வாடுவது போலத்,

.. தொழாது, நிதம் மாலின் விடாத பிடியோடு

..... சுலாவு மனையோர்கள் .. அவர் மேலே

பொறாமை மிக ஆகி, விடாய் இடைவிடாது,

..... பொலா வினையை நாடி .. நலம் ஏதும்

.. புகாத மனம் மாறி, "நிலா அணியும் நாத!

..... புராண!" என ஓத .. அருளாயே!

அறா வினையும் மாள, அடாதனவும் ஓட,

..... அரா முடியில் ஏறும் .. உனை ஓதி,

.. அவாவை அறு மாணி படாமல் உயிர் வாழ,

..... அழா நமனை நூறு .. பெருமானே.


இறா மலியும் ஓதம் அறாது ஒலி செய் நாகையிலே உறையும் ஈச உனை நாடாது - இறால்கள் நிறைந்திருக்கும் கடல் தொடர்ந்து ஒலி செய்யும் நாகப்பட்டினத்தில் உறையும் ஈசனே உன்னை நாடாமல்; (இறா - இறால் மீன்); (மலிதல் - மிகுதல்); (ஓதம் - அலை; கடல்); (அறாது - தொடர்ந்து; (அறுதல் - முடிதல்); (நாகை - நாகப்பட்டினம்);

இடாதவரை "வீர! உதார! குண சீல! இராமன் அன தீர!" எனல் ஆமோ ? - (இரந்தாலும் ஒன்றும்) கொடாதவரை "வீரனே ! கொடையாளியே! நற்குணம் உடையவனே! இராமனைப் போன்ற தீரனே !" என்று புகழ்ந்து உழலலாமோ? ; (இடுதல் - போடுதல்; கொடுத்தல்); (உதாரன் - கொடையாளி); (அன - அன்ன - ஒத்த);

சுறா உலவு வேலையில் ஓர் கலம் இலாது துழாவி மிக வாடுவது போலத் - சுறா மீன்கள் சஞ்சரிக்கும் கடலில் ஒரு படகு இல்லாமல் ( கையால் அளைந்து) தடுமாறி மிகவும் வருத்தம் அடைவது போல; (சுறா - சுறா மீன்); (உலவுதல் - சஞ்சரித்தல்); (வேலை - கடல்); (கலம் - படகு; கப்பல்); (துழாவுதல் - கையால் அளைதல்; தடுமாறுதல்);

தொழாது, நிதம் மாலின் விடாத பிடியோடு சுலாவு மனையோர்கள் அவர் மேலே பொறாமை மிக ஆகி, விடாய் இடைவிடாது, பொலா வினையை நாடி நலம் ஏதும் புகாத மனம் மாறி - (உன்னைத்) தொழாமல் தினமும் அறியாமையின் பிடியினால், சுற்றி உள்ள வீடுகளில் வசிப்போர் மீது பொறாமை கொண்டு, இடைவிடாத ஆசையால், எப்போதும் தீய வினைகளை நாடி, ஒருவித நல்ல தன்மையும் நுழையாத (என்) மனமானது திருந்தி; (மால் - அறியாமை; ஆணவம்); (பிடி - பற்றுகை); (சுலாவுதல் - சூழ்தல்; சுற்றி இருத்தல்); (மனை - வீடு); (விடாய் - தாகம்; ஆசை); (பொலா வினை - பொல்லா வினை);

"நிலா அணியும் நாத! புராண!" என ஓத அருளாயே! - "சந்திரனைச் சூடும் தலைவனே! பழமையானவனே!" என்று உன்னைப் போற்றிப் பாட அருள்வாயாக; (புராணன் - பழமை ஆனவன்; கடவுள்); (ஓதுதல் - சொல்லுதல்; செபித்தல்; பாடுதல்);

அறா வினையும் மா, அடாதனவும் ஓ, அரா முடியில் ஏறும் உனை ஓதி - தீரா வினையும் அழியப், பொருந்தாதவையும் விட்டு விலகப், பாம்பை முடிமீது உடைய உன்னைத் துதித்து; (அறுதல் - இல்லாமல் போதல்; தீர்தல்); (அறா - அறாத – தீராத); (மாளுதல் - அழிதல்; கழிதல்); (அடாதன - தகாதவை; பொருந்தாதவை); (அரா - பாம்பு);

அவாவை அறு மாணி படாமல் உயிர் வாழ அழா நமனை நூறு பெருமானே - ஆசைகளை வென்ற மார்க்கண்டேயர் சாவாமல் வாழவும், என்றும் யாருக்காகவும் அழாத காலனை அழித்த பெருமானே; (மாணி - மார்க்கண்டேயர்); (படுதல் - சாதல்; படாமல் - சாவாமல்); (நூறுதல் - அழித்தல்; கொல்லுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment