03.07.002 – காரைக்கால் அம்மையார் துதி - கனிவுடைய மங்கை - (வண்ணம்)
2007-04-10
3.7.2 - காரைக்கால் அம்மையார் துதி
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத் .. தனதான);
(கறைபடுமு டம்பி ராதெனக் - திருப்புகழ் - சுவாமிமலை)
கனிவுடைய மங்கை வாயிலிற்
... ... கறைமிடறன் அன்பர் சேர்தரக்
.. .. கழலிணைவ ணங்கி மாதவர்க் .. குணவோடு
.. கறியெனம கிழ்ந்து போடவப்
... ... பொழுதெதுவும் அங்கி லாதுநற்
.. .. கனிதனைஅ ரிந்து சோறிடப் .. பகல்வேளை
புனிதவதி அன்பு நாதனுக்
... ... கமுதையிடு கின்ற போதிலிப்
.. .. புசிகனியும் நன்று கூறெனக் .. குளவாறே
.. புனிதவதி என்று கூறமுக்
... ... கணனடிவ ணங்கி ஓர்புதுக்
.. .. கனிவரவி யந்து மாதினைப் .. பிரிவானே
தனியளென நின்ற நாளினிற்
... ... சருமவெழில் விண்டு போயிடத்
.. .. தனிஉருவம் என்று பேயுருப் .. பெறுமாறே
.. சரணகம லங்கள் ஓதிடத்
... ... தழலெனவி ளங்கு மேனிமுத்
.. .. தலைவடியி லங்கு வேலனப் .. பரிசீவான்
பனிமலைஅ டைந்த நாளினிற்
... ... பரமனிடம் என்று கால்வரைப்
.. .. படமிகவும் அஞ்சி ஏறிடப் .. பெருமானும்
.. பரியுமமை என்று பேசிடப்
... ... பிறவிதொறும் அன்ப றாமையைப்
.. .. பணியெனவி ரந்த தாயவர்க் .. கடியேனே.
பதம் பிரித்து:
கனிவுடைய மங்கை வாயிலில் .. கறைமிடறன் அன்பர் சேர்தரக்,
.. .. கழலிணை வணங்கி, மாதவர்க்கு .. உணவோடு
.. கறி என மகிழ்ந்து போட அப் ... பொழுது எதுவும் அங்கு இலாது, நற்-
.. .. கனிதனை அரிந்து சோறிடப், .. பகல்வேளை
புனிதவதி அன்பு நாதனுக்கு ... அமுதை இடுகின்ற போதில், "இப்-
.. .. புசி-கனியும் நன்று; கூறு எனக்கு .. உளவாறே
.. புனிதவதி" என்று கூற, முக் ... கணன் அடி வணங்கி ஓர் புதுக்-
.. .. கனி வர, வியந்து மாதினைப் .. பிரிவானே;
தனியள் என நின்ற நாளினில், ... சரும-எழில் விண்டு போயிடத்,
.. .. தனி-உருவம் என்று பேய்-உருப் .. பெறுமாறே
.. சரண-கமலங்கள் ஓதிடத், ... தழல் என விளங்கு மேனி முத்-
.. .. தலை-வடி-இலங்கு வேலன் அப் .. பரிசு ஈவான்;
பனிமலை அடைந்த நாளினில் ... பரமன்-இடம் என்று கால் வரைப்-
.. .. பட மிகவும் அஞ்சி ஏறிடப், .. பெருமானும்
.. "பரியும் அமை" என்று பேசிடப், ... "பிறவிதொறும் அன்பு அறாமையைப்
.. .. பணி" என இரந்த தாய்-அவர்க்கு .. அடியேனே.
கனிவு உடைய மங்கை வாயிலிற் கறைமிடறன் அன்பர் சேர்தரக் - மிகவும் கனிவை உடைய மங்கையான புனிதவதியாரது வீட்டுவாயிலில் சிவனடியார் ஒருவர் வரவும்; (கறைமிடறன் - நீலகண்டன்); (சம்பந்தர் தேவாரம் - 1.19.2 - "மணிபடு கறைமிடறனை நலம்மலி கழலிணை தொழல் மருவுமே");
கழல்-இணை வணங்கி மாதவர்க்கு உணவோடு கறி என மகிழ்ந்து போட அப்பொழுது எதுவும் அங்கு இலாது நற்கனிதனை அரிந்து சோறு இடப் - அவரது இரு-பாதங்களை வணங்கி, அந்தப் பெரும்-தவசியார்க்கு உணவோடு இடுவதற்கு அச்சமயத்தில் கறி எதுவும் சமைத்திலாததால், ஒரு நல்ல மாம்பழத்தை நறுக்கி அவர் இலையில் இட்டு உணவு-படைத்து;
பகல்வேளை புனிதவதி அன்பு நாதனுக்கு அமுதை இடுகின்ற போதில் "இப் புசி கனியும் நன்று; கூறு எனக்கு உளவாறே புனிதவதி" என்று கூற - உச்சிப்பொழுதில் தன் கணவனுக்கு உணவிட்டபொழுது, (அவன் ஒரு கனியை உண்டு இரண்டாம் கனியையும் கேட்க, ஈசன் அருளால் அரிய கனி ஒன்றைப் புனிதவதியார் பெற்று இட, அதனை உண்ட அவன்) "இந்த உண்ட பழம் மிக அருமை; எனக்கு இதன் உண்மையைக் கூறு" என்று சொல்லவும்;
முக்கணன் அடி வணங்கி ஓர் புதுக் கனி வர, வியந்து மாதினைப் பிரிவானே - (அவர் ஈசன் அருளால் பழம் வந்த உண்மையைச் சொல்லவும், அவன் இன்னொரு கனி வரவழைத்துக் காட்டு என்றதும்) புனிதவதியார் மீண்டும் சிவபெருமானை வேண்டியதும் இன்னொரு புதுப்பழம் கையில் வரக்கண்டு ஆச்சரியம் அடைந்து (இவர் தெய்வப்பெண் என்று எண்ணி) அவரைப் பிரிந்து சென்றான்;
தனியள் என நின்ற நாளினில் சரும எழில் விண்டு போயிடத் தனி உருவம் என்று பேய் உருப் பெறுமாறே - கணவன் பிரிந்து சென்றதால் தனியளான அவர் தமது வடிவழகு நீங்கி ஒப்பற்ற பேய்வடிவத்தைப் பெறும்படி; (தனி - ஒப்பற்ற);
சரண-கமலங்கள் ஓதிடத், தழல் என விளங்கு மேனி முத்தலை-வடி-இலங்கு வேலன் அப்பரிசு ஈவான் - திருவடித்தாமரையைப் போற்றி வணங்கியதும், தீப் போல் திகழும் திருமேனியையும் மூன்று நுனிகளும் கூர்மையும் பொருந்திய சூலத்தை ஏந்தியவனுமான சிவபெருமான் அவர் விரும்பிய அந்த வரத்தை அருள்செய்தான்; (முத்தலைவேல் - திரிசூலம்); (வடி - கூர்மை); (சம்பந்தர் தேவாரம் - 1.44.2 - "பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற இலைபுனைவேலரோ" - இலை புனை வேலர் - இலைவடிவாகப் புனையப்பெற்ற வேலினையுடையவர்);
பனிமலை அடைந்த நாளினில் பரமன்-இடம் என்று கால் வரைப்-பட மிகவும் அஞ்சி ஏறிடப், பெருமானும் "பரியும் அமை" என்று பேசிடப் - கயிலைமலையை அடைந்தபொழுது, இது பரமன் உறையும் புனித மலை என்று தமது கால்கள் அந்த மலையின்மேல் படக்கூடாது என்று தலையால் ஏறித் தொழவும், சிவபெருமான் (உமாதேவியிடம்) "இவள் நம்மைப் பேணும் அம்மை" என்று கூறக் கேட்டு அப்பெருமானிடம்; (வரை - மலை); (அமை - அம்மை - இடைக்குறை விகாரம்);
பிறவிதொறும் அன்பு அறாமையைப் பணி என இரந்த தாய் அவர்க்கு அடியேனே - "இனிப் பிறவிகள் உண்டு என்றால் உன்னை என்றும் மறவாமையை அருள்" என்று வேண்டிய காரைக்கால் அம்மையார்க்கு நான் அடியேன்;
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1. பெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - 12.24.58 -
வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.
2. பெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - 12.24.60 -
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment