Tuesday, September 16, 2025

T.213 - ஏடகம் (திருவேடகம்) - ஆழமிகுந்த

2018-11-30

T.213 - ஏடகம் (திருவேடகம்) - ஆழமிகுந்த

-----------------

(வண்ணவிருத்தம்;

தானன தந்த தானன தந்த

தானன தந்த .. தனதான)

(Can also be seen as - தான தனந்த x3 .. தனதான)

(மாலையில் வந்து - திருப்புகழ் - இலஞ்சி)


ஆழ(ம்)மி குந்த தீவினை என்ற

.. .. ஆழியி னின்று .. கரையேற

.. யானுனி ரண்டு பாதம்வி ரும்பி

.. .. ஆகவி ரங்கி .. அருளாயே

சூழுல கங்கள் வாழவி ளங்கு

.. .. சோதிகள் என்ற .. வடிவோனே

.. தூயவர் நெஞ்சில் மேவிய அன்ப

.. .. தோடதி லங்கு .. செவியானே

வீழுமு யர்ந்த வானதி துன்று

.. .. வேணியில் என்றும் .. அணிவோனே

.. வேலையு மிழ்ந்த மாவிடம் உண்ட

.. .. வீரதி ரண்ட .. பலர்காண

ஏழுசு ரங்கள் ஆரமொ ழிந்த

.. .. ஏர்மலி சண்பை .. நகராளி

.. ஏடெதிர் சென்ற ஆறுவ ளஞ்செய்

.. .. ஏடக(ம்) நின்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

ஆழ(ம்) மிகுந்த தீவினை என்ற

.. .. ஆழியின்-நின்று .. கரையேற,

.. யான் உன் இரண்டு பாதம் விரும்பி

.. .. ஆக இரங்கி .. அருளாயே;

சூழ்-உலகங்கள் வாழ விளங்கு

.. .. சோதிகள் என்ற .. வடிவோனே;

.. தூயவர் நெஞ்சில் மேவிய அன்ப;

.. .. தோடது இலங்கு .. செவியானே;

வீழும் உயர்ந்த வானதி துன்று-

.. .. வேணியில் என்றும் .. அணிவோனே ;

.. வேலை உமிழ்ந்த மா-விடம் உண்ட

.. .. வீர; திரண்ட .. பலர் காண

ஏழு-சுரங்கள் ஆர(ம்) மொழிந்த

.. .. ஏர் மலி சண்பை .. நகராளி

.. ஏடு எதிர் சென்ற ஆறு வளஞ்செய்

.. .. ஏடக(ம்) நின்ற .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

ஆழம் மிகுந்த தீவினை என்ற ஆழியின்-நின்று கரையேற – தீவினை என்ற ஆழம் மிகுந்த கடலிலிருந்து கரையேறி உய்யும்படி; (ஆழி - கடல்); (நின்று - ஐந்தாம்வேற்றுமைப்பொருளில் வரும் ஓர் இடைச்சொல்);

யான் உன் இரண்டு பாதம் விரும்பி ஆக இரங்கி அருளாயே - நான் உன் இரு-திருவடிகளை விரும்பும் பக்தன் ஆகும்படி இரங்கி அருள்வாயாக; (உனிரண்டு - உன் இரண்டு; சந்தம் நோக்கி ன் மிகாது வந்தது); (விரும்பி - விரும்புபவன்);

சூழ் உலகங்கள் வாழ விளங்கு சோதிகள் என்ற வடிவோனே - சுற்றியுள்ள உலகமெல்லாம் வாழும்படி ஒளிவீசும் சூரியன் சந்திரன் நெருப்பு என்ற சுடர்களின் வடிவை உடையவனே; (சோதிகள் - சூரியன், சந்திரன், நெருப்பு - இவை சிவபெருமானது அஷ்டமூர்த்தங்களுள் சில); (சோதி - நட்சத்திரம் என்றும் பொருள்கொண்டு, பிரபஞ்சத்திலுள்ள பல நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள உலகங்களை வாழ்விப்பவன் என்றும் கொள்ளலாம்);

தூயவர் நெஞ்சில் மேவிய அன்ப – தூய அடியார்களது நெஞ்சே இடமாக விரும்பி உறையும் அன்பனே;

தோடு-அது இலங்கு செவியானே - ஒரு காதில் தோடு அணிந்தவனே; (அது - பகுதிப்பொருள்விகுதி);

வீழும் உயர்ந்த வானதி துன்று வேணியில் என்றும் அணிவோனே - வானிலிருந்து கீழே பாய்ந்த கங்கையை அடர்ந்த சடையில் என்றும் அணிபவனே; (வானதி - கங்கை); (துன்றுதல் - நெருங்குதல்); (வேணி - சடை);

வேலை உமிழ்ந்த மா-விடம் உண்ட வீர – கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட வீரனே; (வேலை - கடல்);

திரண்ட பலர் காண, ஏழு-சுரங்கள் ஆர(ம்) மொழிந்த ர் மலி சண்பை-நகராளி - குழுமியிருந்த பலரும் காண, ஏழிசை பொருந்திய பாமாலை பாடிய அழகிய சண்பைநகர்த் தலைவரான திருஞான சம்பந்தரது (= அவர் நதியில் இட்ட); (ஆரமொழிந்த = 1. ஆர மொழிந்த; 2. ஆரம் மொழிந்த); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (ஆரம் - ஹாரம் - மாலை - பாமாலை); (சண்பைநகராளி - சண்பைநகர் என்ற பெயரை உடைய சீகாழியில் அவதரித்தவர் - திருஞான சம்பந்தர்); (நம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் - 11.38.8 - "வன்குண்டர் கழுவேற முன்கண்ட செறிமாட வண்சண்பை நகராளி என்தந்தை");

ஏடு எதிர் சென்ற ஆறு வளம் செய் ஏடகம் நின்ற பெருமானே - திருப்பதிக ஏடானது நீரை எதிர்த்துச் சென்ற வைகைநதி வளம் சேர்க்கின்ற திருவேடகத்தில் நீங்காமல் உறைகின்ற பெருமானே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment