Monday, September 15, 2025

P.454 - நணா (பவானி) - நரைவிடை ஊர்தியை

2018-10-02

P.454 - நணா (பவானி)

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


1)

நரைவிடை ஊர்தியை நயந்த நாதனை

இரவினில் நடமிடும் இறையைக் காவிரித்

திரைபொரு கரையினில் திருந ணாவுறை

அரையனைத் தொழுதெழ அல்லல் இல்லையே.


நரைவிடை ஊர்தியை நயந்த நாதனை - வெள்ளை இடபத்தை வாகனமாக விரும்பிய தலைவனை;

இரவினில் நடமிடும் இறையைக் - இருளில் கூத்தாடும் இறைவனை;

காவிரித் திரை பொரு கரையினில் திருநணா உறை - காவிரியின் அலை மோதுகின்ற கரையில் திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;

அரையனைத் தொழுதெழ அல்லல் இல்லையே - அரசனான சிவபெருமானை வழிபட்டால் துன்பம் நீங்கும்;


2)

தண்புனற் கங்கையைச் சடையில் தாங்கியை

வெண்பிறை சூடிய வேந்தைக் காவிரித்

தெண்புனல் அடைதரு திருந ணாவுறை

கண்புனை நுதலனைக் கருத நன்மையே.


தண்புனல்-கங்கையைச் சடையில் தாங்கியை - குளிர்ந்த கங்கையாற்றைச் சடையில் தாங்கியவனை;

வெண்பிறை சூடிய வேந்தைக் - வெண்திங்களைச் சூடிய வேந்தனை;

காவிரித் தெண்-புனல் அடைதரு திருநணா உறை - காவிரியின் தெளிந்த நீர் அடைகின்ற திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;

கண் புனை நுதலனைக் கருத நன்மையே - நெற்றிக்கண்ணனான சிவபெருமானை விரும்பி வழிபட்டால் நன்மை வந்து அடையும்;


3)

ஏனவெண் கொம்பணி ஏர்கொள் மார்பனைக்

கானகத் தாடிடும் கரிய கண்டனைத்

தேனறை பைம்பொழில் திருந ணாவுறை

வானவர் தலைவனை வாழ்த்த நன்மையே.


ஏன வெண் கொம்பு அணி ஏர்கொள் மார்பனைக் - பன்றிக்கொம்பை அணிந்த அழகிய திருமார்பினனை; (ஏனம் - பன்றி); (ஏர் - அழகு);

கானகத்து ஆடிடும் கரிய கண்டனைத் - சுடுகாட்டில் ஆடும் நீலகண்டனை;

தேன் அறை பைம்பொழில் திருநணா உறை - வண்டுகள் ஒலிக்கும் அழகிய சோலை சூழ்ந்த திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;

வானவர் தலைவனை வாழ்த்த நன்மையே - தேவர்கள் தலைவனான சிவபெருமானை வழிபட்டால் நன்மை வந்து அடையும்;


4)

அன்றரு நஞ்சினை ஆர்ந்த கண்டனை

மன்றினில் ஆடியை மங்கை பங்கனைத்

தென்றலில் மணங்கமழ் திருந ணாவுறை

கொன்றையந் தாரனைக் குறுக நன்மையே.


அன்று அரு-நஞ்சினை ஆர்ந்த கண்டனை - முன்னர் அரிய விடத்தை உண்ட கண்டனை;

மன்றினில் ஆடியை - அம்பலத்தில் ஆடுபவனை;

மங்கை பங்கனைத் - உமைபங்கனை;

தென்றலில் மணம் கமழ் திருநணா உறை - தென்றலில் மணம் வீசும் திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;

கொன்றையந் தாரனைக் குறுக நன்மையே - கொன்றைமாலை சூடிய சிவபெருமானைச் சரணடைந்தால் நன்மை வந்து அடையும்; (குறுகுதல் - அணுகுதல்);


5)

மறிமழு வேந்தியை வாச வாளிகள்

எறிமதன் தனையுடல் இலனென் றாக்கியைச்

செறிபொழில் சூழ்தரு திருந ணாவுறை

பொறிகிளர் அரவனைப் போற்ற நன்மையே.


மறி மழு ஏந்தியை - மான்கன்றையும், மழுவையும் ஏந்தியவனை;

வாச-வாளிகள் எறி மதன்தனை உடல் இலன் என்று ஆக்கியைச் - மணம் கமழும் அம்புகளை எய்த மன்மதனை அனங்கன் என்று ஆக்கியவனை; (வாளி - அம்பு);

செறி பொழில் சூழ்தரு திருநணா உறை - அடர்ந்த சோலை சூழ்ந்த திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;

பொறி கிளர் அரவனைப் போற்ற நன்மையே - புள்ளிகள் திகழும் பாம்பை அணிந்த சிவபெருமானைப் போற்றினால் நன்மை வந்து அடையும்; (பொறி - புள்ளி); (அப்பர் தேவாரம் - 4.74.10 - "சடையிடைப் பொதியும் ஐவாய் அரவனை");


6)

நித்திய மூர்த்தியை நெற்றிக் கண்ணனை

முத்தலைச் சூலனை மொய்க்கும் வண்டினம்

தெத்தென எனவறை திருந ணாவுறை

அத்தனை அடிதொழ அல்லல் இல்லையே.


நித்திய மூர்த்தியை - அழிவற்ற கடவுளை;

நெற்றிக் கண்ணனை - முக்கண்ணனை;

முத்தலைச் சூலனை - திரிசூலத்தை ஏந்தியவனை;

மொய்க்கும் வண்டினம் தெத்தென என அறை திருநணா உறை - மொய்க்கின்ற வண்டுகள் தெத்தென என்று ஒலிக்கின்ற திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;

அத்தனை அடிதொழ அல்லல் இல்லையே - தந்தையான சிவபெருமான் திருவடிகளை வழிபட்டால் துன்பம் தீரும்;


7)

வென்றிவெள் விடையனை வெய்ய காலனை

அன்றுதை செய்தருள் அரனைக் காவிரி

சென்றடி போற்றிடு திருந ணாவுறை

பொன்றிகழ் சடையனைப் போற்ற நன்மையே.


வென்றி வெள்-விடையனை - வெற்றியுடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை; (வென்றி - வெற்றி);

வெய்ய காலனை அன்று உதைசெய்து அருள் அரனைக் - கொடிய கூற்றுவனை முன்பு உதைத்த ஹரனை; (வெய்ய - கொடிய);

காவிரி சென்று அடிபோற்றிடு திருநணா உறை - காவிரிநதி வந்து வணங்குகின்ற திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;

பொன் திகழ் சடையனைப் போற்ற நன்மையே - பொற்சடை உடைய சிவபெருமானைப் போற்றினால் நன்மை வந்து அடையும்; (பொன்றிகழ் = பொன் திகழ்);


8)

திருமலை பேர்த்தவன் சென்னி பத்திறத்

திருவிரல் ஊன்றிய சிவனை நஞ்சணி

திருமிடற் றீசனைத் திருந ணாவுறை

திருவனைத் தொழுதெழச் சேரும் நன்மையே.


திருமலை பேர்த்தவன் சென்னி பத்து இறத் திருவிரல் ஊன்றிய சிவனை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத்தலைகளும் இறும்படி ஒரு விரலை ஊன்றிய சிவனை;

நஞ்சு அணி திருமிடற்று ஈசனைத் - விஷத்தை அணிந்த திருநீலகண்டத்தை உடைய ஈசனை; (மிடறு - கண்டம்);

திருநணா உறை - திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;

திருவனைத் தொழுதெழச் சேரும் நன்மையே - திருவின் வடிவினனான பெருமானை வழிபட்டால் நன்மை வந்தடையும்;


9)

செங்கணன் அயனிவர் தேடிக் காணொணாப்

பொங்கழல் உருவனைப் பூத நாதனைச்

செங்கயல் பாய்புனல் திருந ணாவுறை

சங்கர னைத்தொழச் சாரும் நன்மையே;


செங்கணன் அயன் இவர் தேடிக் காணொணாப் பொங்கு அழல் உருவனைப் - திருமால் பிரமன் இவர்களால் தேடி அறிய இயலாத தீப்-பிழம்பாகி ஓங்கி நின்றவனை;

பூத-நாதனைச் - பூதகணத் தலைவனை;

செங்கயல் பாய்-புனல் திருநணா உறை - செங்கயல்மீன்கள் பாயும் ஆறு பாயும் திருநணாவில் (பவானியில்) உறைகின்ற; (பாய்புனற்றிருநணா = பாய்-புனல்-திருநணா);

சங்கரனைத் தொழச் சாரும் நன்மையே - சங்கரனை வழிபட்டால் நன்மை வந்தடையும்;


10)

வஞ்சகர் வலையினில் மயங்கி டேன்மினீர்

அஞ்செழுத் தோதிய அன்பர்க் கன்பனைச்

செஞ்சுடர் வண்ணனைத் திருந ணாவுறை

நஞ்சணி கண்டனை நண்ண நன்மையே.


வஞ்சகர் வலையினில் மயங்கிடேன்மின் நீர் - வஞ்சகர்கள் விரிக்கும் வலையில் நீங்கள் மயங்கிவிடாதீர்கள்;

அஞ்செழுத்து ஓதிய அன்பர்க்கு அன்பனைச் - பஞ்சாட்சரத்தை ஓதி வணங்கும் அன்பர்களுக்கு அன்பு உடையவனை;

செஞ்சுடர் வண்ணனைத் - செந்தீப் போல் செம்மேனியனை;

திருநணா உறை - திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;

நஞ்சு அணி கண்டனை நண்ண நன்மையே - நீலகண்டனை அடைந்து வழிபட்டால் நன்மை வந்தடையும்; (சம்பந்தர் தேவாரம் - 2.46.10 - "புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்");


11)

கொய்ம்மலர் இட்டுளம் குழையும் அன்பினர்

எம்மணி எம்மிறை என்னும் ஈசனைச்

செம்மணி வண்ணனைத் திருந ணாவுறை

நம்மணி கண்டனை நண்ண நன்மையே.


கொய்ம்-மலர் இட்டு உளம் குழையும் அன்பினர் - பறித்த மலர்களைத் தூவி வணங்கி உள்ளம் கசியும் பக்தர்கள்; (கொய்+மலர் = கொய்ம்மலர்; இங்கே புணர்ச்சியில் மெல்லின ஒற்று மிகும்);

"எம் மணி, எம் இறை" என்னும் ஈசனைச் - "எம் மணி, எம் இறைவன்" என்று போற்றும் ஈசனை;

செம்மணி வண்ணனைத் - செம்பவளம், மாணிக்கம் போன்ற செம்மேனியனை;

திருநணா உறை - திருநணாவில் (பவானியில்) உறைகின்ற;

நம் மணிகண்டனை நண்ண நன்மையே - நம் நீலகண்டனை அடைந்து வழிபட்டால் நன்மை வந்தடையும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment