2018-12-20
P.461 - பொது - "பாவைப் பதிகம்"
-------------------------
(12 பாடல்கள்)
(எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா - வெண்டளை பயின்று வரும்)
(திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.1 – "ஆதியும் அந்தமும் இல்லா")
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
ஆதிரை நாயகன் அண்ணா மலையண்ணல்
மாதிரையார் கங்கையை வார்சடையில் தாங்கியவன்
நாதியவன் சீர்பாடி நாம்வந்தோ(ம்) நங்காய்உன்
காதில் விழுந்திலவோ? காதல் மலரணைக்கோ?
வேதியனை வித்தகனை வெற்பரையன் பாவையொரு
பாதியனைப் பத்தர் பழவினையைத் தீர்த்தருளு(ம்)
நீதியனை எம்மோடு நீயும் உடனாகி
ஓதி வழிபட் டுருகேலோர் எம்பாவாய்.
ஆதிரை நாயகன் அண்ணாமலை அண்ணல் - திருவாதிரை என்ற நட்சத்திரத்திற்கு நாயகன், திருவண்ணாமலை இறைவன்; (அப்பர் தேவாரம் - 5.100.1 - "ஆதி நாயகன் ஆதிரை நாயகன்");
மா-திரை ஆர் கங்கையை வார்-சடையில் தாங்கியவன் - பெரிய அலை மிக்க கங்கையை நீள்சடையில் தாங்கியவன்; (வார்தல் - நீள்தல்);
நாதிஅவன் சீர் பாடி நாம் வந்தோம் - நம்மைக் காக்கும் அப்பெருமான் புகழைப் பாடி நாங்கள் வந்தோம்; (நாதி - உறவினன்; காப்பாற்றுவோன்);
நங்காய் உன் காதில் விழுந்திலவோ? - பெண்ணே, நாங்கள் பாடுகின்ற அப்பாடல்கள் உன் காதில் விழவில்லையோ? (நங்காய் - நங்கையே என்ற விளி);
காதல் மலரணைக்கோ? - உன் அன்பு மலர்மெத்தைக்குத்தானா? (அணை - மெத்தை; படுக்கை); (திருவெம்பாவை - 8.7.2 - "இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ");
வேதியனை வித்தகனை - வேதப்பொருள் ஆனவனை, எல்லாம் அறிந்தவனை, சர்வ-வல்லமை உடையவனை;
வெற்பு-அரையன் பாவை ஒரு பாதியனைப் - மலைக்கு அரசனான இமவானுக்கு மகளைத் திருமேனியில் ஒரு பாதியாக உடையவனை;
பத்தர் பழவினையைத் தீர்த்தருளும் நீதியனை - பக்தர்களது பழைய வினைகளைத் தீர்த்து அருளும் அறவடிவினனை; (சம்பந்தர் தேவாரம் - 2.33.7 - "நீதியர் நெடுந்தகையர் நீண்மலையர் பாவை பாதியர்");
எம்மோடு நீயும் உடனாகி ஓதி வழிபட்டு உருகு - எங்களோடு நீயும் கூடிப் பாடி வழிபட்டு உருகுவாயாக;
ஏல் ஓர் எம் பாவாய் - பாவைப் பாடல்களில் இச்சொற்றொடர் வருதல் மரபு; அப்படிப் பாடலை நிரப்பி நிற்பதன்றி வேறு பொருள்படாமையால், அசைநிலை போலவே கொள்ளப்படும்.
2)
மின்னல் கொடியன்ன மெல்லிடை மங்கையே
இன்னும் துயில்தானோ? இங்கேபார் எத்தனைபேர்
உன்னில்லின் முன்னே உனக்காகக் காத்துள்ளோம்
பொன்னனைய மேனிமிசைப் பூதியணி மேன்மையினான்
சென்னிமிசைப் பாம்பையும் திங்களையும் சேர்த்துவைத்த
மன்னனவன் வானோரு(ம்) மண்ணோரும் கூவிளம்
வன்னிகொடு போற்றிசெயு(ம்) மாதேவன் சீர்வாயால்
பன்னி அவன்தாள் பணியேலோர் எம்பாவாய்.
மின்னல் கொடியன்ன மெல்லிடை மங்கையே - மின்னல் போன்றதும் கொடி போன்றதுமான மெல்லிடையை உடைய பெண்ணே; (மின்னல் கொடி - உம்மைத்தொகை - மின்னலும் கொடியும்);
இன்னும் துயில்தானோ? - இன்னுமா உறங்குகின்றாய்?
இங்கே பார், எத்தனை பேர் உன் இல்லின்முன்னே உனக்காகக் காத்துள்ளோம் - இங்கே பார், உன் வீட்டின்முன் எத்தனை பேர் உனக்காகக் காத்துக்கொண்டு நிற்கின்றோம்.
பொன் அனைய மேனிமிசைப் பூதி அணி மேன்மையினான் - பொன் போன்ற திருமேனியின்மேல் திருநீற்றைப் பூசிய மேன்மை உடையவன்; (அப்பர் தேவாரம் - 6.51.12 - "பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்");
சென்னிமிசைப் பாம்பையும் திங்களையும் சேர்த்துவைத்த மன்னன்அவன் - திருமுடிமேல் நாகத்தையும் சந்திரனையும் ஒன்றாகச் சேர்த்துவைத்த தலைவன்; (அவன் - பகுதிப்பொருள்விகுதி);
வானோரும் மண்ணோரும் கூவிளம் வன்னி கொடு போற்றிசெயும் மாதேவன் - தேவர்களும் மனிதர்களும் வில்வம் வன்னி இவற்றால் வழிபாடு செய்யும் மகாதேவன்;
சீர் வாயால் பன்னி அவன் தாள் பணி - அப்பெருமானது புகழை வாயால் பாடி அவன் திருவடியைப் பணிவாயாக; (பன்னுதல் - பாடுதல்; புகழ்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.106.1 - "வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே");
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
3)
நாடே அறியு(ம்) நரைவிடையான் நற்கழலை
நாடோறும் ஏத்திடுவேன் நானென்றாய்; நம்பிவந்தோம்
தோடாரும் காதுடையோம்; சொல்லாய்நீ எங்குள்ளாய்?
காடே இடமாக் கருதிநடம் ஆடுமிறை
ஓடே கலனாக உண்பலி தேர்ந்துழல்வான்
வீடே தரவல்ல வீறுடையான் வெங்கணையால்
கூடார் புரமெய்த குன்றவில்லி தாள்மலரை
வாடாத மாலைகளால் வாழ்த்தேலோர் எம்பாவாய்.
நாடே அறியும் நரைவிடையான் நற்கழலை நாள்தோறும் ஏத்திடுவேன் நான் என்றாய் - உலகமே அறிந்த வெள்விடை-வாகனனான சிவபெருமானது நல்ல திருவடியைத் தினந்தோறும் புகழ்ந்து வழிபடுவேன் நான் என்று (முன்பு / நேற்று) எல்லாரும் அறியும்படி சொன்னாய்; ("நாடே அறியும்" என்ற சொற்றொடரை இப்படி இருவிதமாகவும் பொருத்திப் பொருள்கொள்ளல் ஆம்);
நம்பி வந்தோம் தோடு ஆரும் காது உடையோம் - அந்தப் பேச்சை நம்பி நாங்கள் வந்தோம்; காதில் தோடு அணிந்தவர்கள் நாங்கள்; (நம்பிவந்தோம் = உன் பேச்சை இதுவரை நம்பிக்கொண்டிருந்தோம்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (தோடு ஆரும் காது உடையோம் = நாங்கள் ஏற்கெனவே காதுகுத்தித் தோடு அணிந்திருக்கின்றோம். "இப்போது நீ புதிதாகக் காதுகுத்தப் பார்க்கின்றாயோ?" என்றும் தொனிக்கப் பொருள்கொள்ளல் ஆம்; காதுகுத்துதல் = வஞ்சித்தல்);
சொல்லாய் நீ எங்கு உள்ளாய்? - நீ எங்கே இருக்கின்றாய், சொல்லு!
காடே இடமாக் கருதி நடம் ஆடும் இறை - சுடுகாடே திருநடம் செய்யும் இடமாக விரும்பிக் கூத்தாடும் இறைவன்; (இடமா - இடமாக); (சம்பந்தர் தேவாரம் - 1.48.5 - "பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்");
ஓடே கலனாக உண்பலி தேர்ந்து உழல்வான் - மண்டையோட்டையே உண்கலனாக ஏந்திப் பிச்சைக்குத் திரிபவன்;
வீடே தரவல்ல வீறு உடையான் - முக்தியே கொடுக்கவல்ல பெருமை உடையவன்;
வெங்கணையால் கூடார் புரம் எய்த குன்றவில்லி - மேருமலையை வில்லாக ஏந்திச் சுடுகணை ஒன்றால் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (கூடார் - பகைவர்);
தாள்மலரை வாடாத மாலைகளால் வாழ்த்து - அப்பெருமானது திருவடித்தாமரையை வாடாத பாமாலைகளால் வாழ்த்துவாயாக;
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
4)
எண்திசையும் நின்ற இருள்நீங்கும் வேளையிது;
விண்தனிலே தாரகைகள் மின்மங்கி நீங்கினகாண்;
கண்டுநாம் சொன்னோம்; கருங்குழலாய் தாழ்நீக்காய்;
பண்டு பலதேவர் பாதம் தொழநஞ்சை
உண்டமணி கண்டன், உலகங்கட் கோர்தலைவன்,
கெண்டையங் கண்ணியுமை கேள்வனறுஞ் சாந்தமென
வெண்திரு நீறணிந்த வேந்தன் வியன்புகழைப்
பண்திகழப் பாடிப் பரவேலோர் எம்பாவாய்.
எண்திசையும் நின்ற இருள் நீங்கும் வேளையிது - எட்டுத் திக்கிலும் இருந்த இருள் நீங்கும் வேளை இது;
விண்தனிலே தாரகைகள் மின் மங்கி நீங்கின காண் - ஆகாயத்தில் நட்சத்திரங்கள் ஒளி குன்றி மறைந்தன; (மின் - ஒளி); (காண் - முன்னிலை அசைச்சொல்);
கண்டு நாம் சொன்னோம் - அதனைப் பார்த்து நாங்கள் உனக்குச் சொன்னோம்;
கருங்குழலாய் தாழ் நீக்காய் - கரிய கூந்தலை உடையவளே; உன் கதவின் தாழை நீக்கி வெளியே வா;
பண்டு பல தேவர் பாதம் தொழ நஞ்சை உண்ட மணிகண்டன் - முன்பு பல தேவர்கள் திருவடியை வணங்க, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;
உலகங்கட்கு ஓர் தலைவன் - எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவன்;
கெண்டை அம் கண்ணி உமை கேள்வன் - கெண்டைமீன் போல் அழகிய கண்களையுடைய உமைக்குக் கணவன்; (சுந்தரர் தேவாரம் - 7.61.4 - "கெண்டையந் தடங்கண் உமைநங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற");
நறும்-சாந்தம் என வெண்-திருநீறு அணிந்த வேந்தன் - மணம் மிக்க சந்தனம் போல வெண்ணிறத் திருநீற்றை அணிந்த அரசன்;
வியன்-புகழைப் பண் திகழப் பாடிப் பரவு - அப்பெருமானது பெரும்புகழை இசையோடு பாடி வழிபடுவாயாக; (சுந்தரர் தேவாரம் - 7.56.7 - "வீடிலாத வியன்புகழானைக்");
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
5)
புள்ளினங்கள் ஆர்த்தன பூம்பொழிலில் வண்டறையக்,
கள்ளுகுபூ வாசமது காற்றில் கமழ்ந்துவர,
வெள்ளெனக்கீழ் வானம் விளங்கியதே; இன்னுந்தான்
உள்ளே உறக்கமோ? ஒற்றை விடையேறும்
வள்ளல், மழுவாளன், மங்கையொரு பங்குடையான்,
தெள்ளுபுனற் கங்கைதனைச் செஞ்சடையில் தேக்கியவன்,
கள்ளமிலா அன்பர்க்குக் காவலவன் சீர்தன்னை
உள்ளத்தில் எண்ணி உருகேலோர் எம்பாவாய்.
புள்ளினங்கள் ஆர்த்தன பூம்பொழிலில் - பூஞ்சோலைகளில் பறவைகள் ஒலித்தன;
பூம்பொழிலில் வண்டு அறையக் கள் உகு பூ வாசம்அது காற்றில் கமழ்ந்துவர - பூஞ்சோலைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்ய, மதுவைச் சொரியும் பூக்களின் வாசனை காற்றில் கமழ்ந்துவர; (பூம்பொழிலில் - என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்); (சம்பந்தர் தேவாரம் - 2.33.1 - "கோடுமலி ஞாழல் குரவேறு சுரபுன்னை நாடுமலி வாசமது வீசிய நள்ளாறே.");
வெள்ளெனக் கீழ்வானம் விளங்கியதே - கீழ்வானம் வெளுத்துவிட்டது;
இன்னுந்தான் உள்ளே உறக்கமோ? - இன்னுமா உள்ளே உறங்குகின்றாய்?
ஒற்றை-விடை ஏறும் வள்ளல் மழுவாளன் - ஒப்பற்ற இடபத்தை வாகனமாக உடைய வள்ளல், மழு ஏந்தியவன்;
மங்கை ஒரு பங்கு உடையான் - உமையை ஒரு பாகமாக உடையவன்;
தெள்ளு-புனல் கங்கைதனைச் செஞ்சடையில் தேக்கியவன் - தெளிந்த நீரை உடைய கங்கையைச் சிவந்த சடையில் அடைத்தவன்;
கள்ளம் இலா அன்பர்க்குக் காவலவன் - தூய மனம் உடைய தொண்டர்களுக்குக் காவலாக இருப்பவன்; (காவல் - பாதுகாப்பு; காவலவன் - காப்பவன்; அரசன்); (சம்பந்தர் தேவாரம் - 2.56.11 - "கழுமலத்தார் காவலவன்");
சீர்தன்னை உள்ளத்தில் எண்ணி உருகு - அப்பெருமானது புகழை உள்ளத்தில் எண்ணி உருகுவாயாக;
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
6)
அல்லும் அகன்ற தடிவானில் செஞ்சுடர்
மெல்ல எழுந்தது; வெண்முத்துப் போலொளிரும்
பல்லினளே, பஞ்சணைக்கே பற்றுமிக வைத்தாயோ?
சொல்லு; தெருவினிலுன் தோழிகள்நாம் காத்துள்ளோம்;
வெல்லரு மன்மதனை வெண்பொடிசெய் கண்ணுதலான்,
கல்லொருவில் ஆக்கிக் கடியரண்மூன் றெய்தபிரான்,
தொல்லைவினை யெல்லாம் தொலைந்தொழிய ஈசனவன்
நல்லதிரு நாம(ம்) நவிற்றேலோர் எம்பாவாய்.
அல்லும் அகன்றது - இருள் நீங்கியது; (அல் - இருள்);
அடிவானில் செஞ்சுடர் மெல்ல எழுந்தது - கீழ்வானத்தில் செஞ்சூரியன் மெல்ல உதித்தது;
("அல்லும் அகன்ற தடிவானில்" என்ற சொற்றொடரில் "அடி" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்; = 1. "அல்லும் அகன்றதடி; வானில்.." 2. "அல்லும் அகன்றது; அடிவானில்.."; (அடி - ஒரு மகடூஉமுன்னிலைச் சொல்; - ஒரு பெண்ணை விளிக்கும் சொல்);
வெண்முத்துப் போல் ஒளிரும் பல்லினளே, - வெண்முத்துப்போல் ஒளிவீசும் பற்கள் உடையவளே;
பஞ்சணைக்கே பற்று மிக வைத்தாயோ? சொல்லு; - பஞ்சுமெத்தைக்கே மிகவும் அன்பு கொண்டாயோ? சொல்வாயாக;
தெருவினில் உன் தோழிகள் நாம் காத்துள்ளோம் - வீதியில் உன் தோழிகளாகிய நாங்கள் உனக்காகக் காத்திருக்கின்றோம்;
வெல்லரு மன்மதனை வெண்பொடிசெய் கண்ணுதலான் - வெல்வதற்கு அரிய மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணன்; (வெல்லருமன்மதனை - வெல்ல அரு-மன்மதனை; தொகுத்தல் விகாரம்);
கல் ஒரு வில் ஆக்கிக் கடி-அரண் மூன்று எய்த பிரான் - மேருமலையை ஒரு வில்லாக ஏந்திக் காவல் மிக்க முப்புரங்களை எய்த தலைவன்; (கடி - காவல்);
தொல்லைவினை எல்லாம் தொலைந்தொழிய – பழவினை எல்லாம் அடியோடு அழியும்படி; (தொல்லை - பழமை; துன்பம்);
ஈசன்அவன் நல்ல திருநாமம் நவிற்று - ஈசனது நல்ல திருப்பெயரைச் சொல்வாயாக; (நவிற்றுதல் - சொல்லுதல்);
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
7)
காமரம் பாடிக் கருவண்டு சூழ்கின்ற
தாமரை பூத்த தடம்பொய்கைத் தண்ணீரில்
நா(ம்)மகிழ ஆடி நமது மல(ம்)நீங்க
மாமறைகள் நாலும் வழுத்திடு(ம்) மெய்ப்பொருள்
கோமள வல்லியைக் கூர்வேல்போற் கண்ணியை
வாம(ம்) மகிழ்ந்தபிரான் மாணிக்காக் கூற்றுதைத்தான்
நாமம் பலவுடைய நம்பெருமான் பாதத்தில்
பாமலர்கள் இட்டுப் பரவேலோர் எம்பாவாய்.
காமரம் பாடிக் கருவண்டு சூழ்கின்ற தாமரை பூத்த தடம்பொய்கைத் தண்ணீரில் - சீகாமரம் முதலிய பண்கள் பொருந்தும் இனிய இசையை எழுப்பிக் கரிய வண்டுகள் சூழ்கின்ற தாமரைப்பூக்கள் பூத்த பெரிய பொய்கையின் குளிர்ந்த நீரில்; (காமரம் - இசை; சீகாமரம் என்ற பண்);
நாம் மகிழ ஆடி நமது மலம் நீங்க – நாம் மகிழுமாறும் நம் மாசுகள் நீங்குமாறும் குளித்து; (ஆடுதல் - குளித்தல்);
மாமறைகள் நாலும் வழுத்திடும் மெய்ப்பொருள் - நால்வேதங்களும் போற்றும் மெய்ப்பொருள் ஆனவன்;
கோமள-வல்லியைக் கூர்வேல் போல் கண்ணியை வாமம் மகிழ்ந்த பிரான் - அழகிய இளமென்கொடி போன்றவளைக், கூரிய வேல் போன்ற கண்களையுடைய உமையை, இடப்பக்கம் பாகமாக மகிழ்ந்த பெருமான்; (கோமளம் - மென்மை; இளமை; அழகு); (வல்லி - கொடி);
மாணிக்காக் கூற்று உதைத்தான் - மார்க்கண்டேயருக்காக நமனை உதைத்தவன்;
நாமம் பல உடைய நம்பெருமான் - பல பெயர்களை உடைய நம் பெருமான்;
பாதத்தில் பாமலர்கள் இட்டுப் பரவு - அவன் திருவடியில் பாடல்களாகிய மலர்களைத் தூவிப் போற்றுவோமாக;
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
8)
பத்துமுடி வாளரக்கன் பண்டு மலைவீச
எத்தனிக்கத் தாளை இறையூன்றித் தோள்நெரித்துக்
கத்தியழ வைத்தவனே கைதொழு தொன்றிரந்தோம்
புத்தம் புதியமலர் போற்பொலியும் நின்னடிக்குப்
பத்தியுடை யாரேஎம் கைத்தலம் பற்றிடுக
நித்தலும் எம்கைகள் நின்பணியே செய்திடுக
கைத்த விடந்தன்னைக் கண்டத்தில் இட்டவனே
இத்தனையே வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
பத்துமுடி வாளரக்கன் பண்டு மலைவீச எத்தனிக்கத் - பத்துத்தலைகளையுடைய கொடிய அரக்கனான இராவணன் முன்னர்க் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்றபோது; (வாள் - கொடுமை); (எத்தனித்தல் - முயல்தல்);
தாளை இறை ஊன்றித் தோள் நெரித்துக் கத்தி அழவைத்தவனே - திருப்பாதத்தைச் சிறிதளவு ஊன்றி அவனது புஜங்களை நசுக்கி, அவனை ஓலமிட்டு அழச்செய்தவனே;
கைதொழுது ஒன்று இரந்தோம் - உன்னைக் கைகூப்பி வணங்கி ஒரு வரம் யாசித்தோம்;
புத்தம்புதிய மலர்போல் பொலியும் நின் அடிக்குப் பத்தி உடையாரே எம் கைத்தலம் பற்றிடுக – மிகப் புதிய மலர் போன்ற அழகிய உன் திருவடிக்குப் பக்தி உடைய அன்பர்களே எம் கணவர்கள் ஆகுக;
நித்தலும் எம் கைகள் நின் பணியே செய்திடுக – நாள்தோறும் எங்கள் கைகள் உன் திருத்தொண்டே செய்யட்டும்;
கைத்த விடந்தன்னைக் கண்டத்தில் இட்டவனே - கசந்த ஆலகாலத்தை உண்டு கண்டத்தில் வைத்தவனே; (கைத்தல் - கசத்தல்);
இத்தனையே வேண்டும் எமக்கு - இந்த வரமே எங்களுக்கு வேண்டும்;
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
9)
பன்றியுருக் கொண்டகழ்ந்தும் புள்ளாய்ப் பறந்துயர்ந்தும்
சென்றஅரி வேதனிவர் தேடவருந் தீயாகி
நின்றவனே கண்திகழும் நெற்றியனே தில்லைதனுள்
மன்றுதனில் கூத்தாடும் மன்னவனே காலனையும்
வென்றவனே வேதத்தின் மெய்ப்பொருளே கங்கைநதி
கொன்றைமலர் கூவிளம் கொக்கிறகு பாம்புமதி
துன்றிய செஞ்சடையாய் தொல்வினையைத் தீர்ப்பவனே
என்றுபுகழ் பாடிமகிழ்ந் தாடேலோர் எம்பாவாய்.
பன்றி-உருக் கொண்டு அகழ்ந்தும், புள்ளாய்ப் பறந்து உயர்ந்தும், சென்ற – பன்றி வடிவில் அகழ்ந்தும் அன்னப்பறவை வடியில் உயரப் பறந்தும் சென்ற;
அரி வேதன் இவர் தேட அருந்-தீயாகி நின்றவனே - திருமால் பிரமன் இவர்கள் தேடிக்காண அரிய ஜோதியாகி அங்கே வந்து ஓங்கியவனே; (சென்றவரி - சென்ற அரி); (தேடவருந் தீயாகி = 1. தேட அருந்-தீ ஆகி; 2. தேட வரும் தீ ஆகி);
கண் திகழும் நெற்றியனே - நெற்றிக்கண்ணனே;
தில்லைதனுள் மன்றுதனில் கூத்தாடும் மன்னவனே - தில்லை அம்பலத்தில் திருநடம் செய்யும் அரசனே;
காலனையும் வென்றவனே - இயமனை உதைத்தவனே; (காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - 11.4.80 - "காலனையும் வென்றுதைத்த கால்");
வேதத்தின் மெய்ப்பொருளே - வேதங்கள் போற்றும் மெய்ப்பொருளே;
கங்கைநதி கொன்றைமலர் கூவிளம் கொக்கிறகு பாம்பு மதி துன்றிய செஞ்சடையாய் - கங்கை, கொன்றைப்பூ, வில்வம், கொக்கின் இறகு, பாம்பு, சந்திரன் இவையெல்லாம் நெருங்கி இருக்கும் சிவந்த சடையினனே; (கொக்கிறகு - 1.கொக்கிறகு என்ற பூ; 2.கொக்குவடிவம் உடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்); (அப்பர் தேவாரம் - 5.55.4 - "கொக்கின் தூவலும் கூவிளங் கண்ணியும் மிக்க வெண்டலை மாலை விரிசடை");
தொல்வினையைத் தீர்ப்பவனே - பழவினையைத் தீர்ப்பவனே;
என்று புகழ் பாடி மகிழ்ந்து ஆடு - என்றெல்லாம் ஈசன் புகழைப் பாடி இப்பொய்கையில் மகிழ்ந்து நீராடுவோமாக;
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
10)
கைதவமே நற்றவமாக் கைக்கொண்டு நாள்தோறும்
பொய்களையே சொல்லியுழல் புல்லர்கட் கெட்டாத
செய்யவனே தில்லைநகர்ச் சிற்றம் பலத்தாடல்
செய்பவனே மாலையெனச் செத்தார்தம் என்பணிந்தாய்
நெய்திகழும் சூலத்தாய் நீள்மதியத் துண்டத்தாய்
மைதிகழும் கண்டத்தாய் மார்பினில்வெண் ணூலினனே
பைதிகழும் பாம்பார்த்தாய் பாசுபதா என்றேத்திக்
கைதொழுது வாழ்வோம் களித்தேலோர் எம்பாவாய்.
"கைதவமே நற்றவமாக் கைக்கொண்டு நாள்தோறும் பொய்களையே சொல்லி உழல் புல்லர்கட்கு எட்டாத செய்யவனே - "வஞ்சனையையே சிறந்த தவம் போல மேற்கொண்டு தினமும் பொய்களையே சொல்லித் திரிகின்ற கீழோர்களால் அடையப்படாதவனே, செம்மேனியனே; நடுநிலைமையை உடையவனே; (செய்யவன் - செய்யன் - 1. செந்நிறம் உடையவன்; 2. நடுநிலை தவறாதவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.51.1 - "செய்யனே திருஆலவாய் மேவிய ஐயனே"); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்");
தில்லைநகர்ச் சிற்றம்பலத்து ஆடல் செய்பவனே - தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடம் புரிபவனே;
மாலையெனச் செத்தார்தம் என்பு அணிந்தாய் - இறந்த பிரமவிஷ்ணுக்களின் எலும்பை மாலையாக அணிந்தவனே; (கங்காளன்);
நெய் திகழும் சூலத்தாய் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவனே; (ஆயுதங்களுக்கு எண்ணெய் பூசிவைப்பது வழக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 3.60.4 - "நெய்யணி சூலமொடு");
நீள்மதியத் துண்டத்தாய் - நீண்ட பிறையை அணிந்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.109.4 - "நீள்மதியோடு ஆறணி சடையினன்");
மை திகழும் கண்டத்தாய் - கரிய கண்டத்தை உடையவனே;
மார்பினில் வெண்ணூலினனே - மார்பில் வெண்மையான பூணூலை அணிந்தவனே;
பை திகழும் பாம்பு ஆர்த்தாய் - படம் உடைய பாம்பை அரைநாணாகக் கட்டியவனே; (பை - பாம்பின் படம்); (ஆர்த்தல் - கட்டுதல்);
பாசுபதா" என்று ஏத்திக் - பாசுபதனே" என்றெல்லாம் புகழ் பாடி;
கைதொழுது வாழ்வோம் களித்து - கைகூப்பி வணங்கி இன்புற்று வாழ்வோமாக;
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
11)
பாரினைச் சூழ்ந்து பரந்து விளங்குகின்ற
வாரிதியின் நீருண்டு வானெழுந்து மாதேவன்
ஏரிலகு கண்டநிறம் ஏற்றவன்பூண் முப்புரிநூல்
நேரொளிர மின்னிமதில் நீறுசெய்தான் தன்னகைபோல்
பேரிடி ஆர்த்துப் பினாகம்போல் வில்காட்டி
நாரிபங்கன் நாமமுரை நாவர் மகிழஅவர்
கோரியன நல்கிக் குறைதீர்க்கும் நாதனருள்
மாரியெனப் பெய்யாய் மழையேலோர் எம்பாவாய்.
பாரினைச் சூழ்ந்து பரந்து விளங்குகின்ற வாரிதியின் நீர் உண்டு வான் எழுந்து - உலகத்தைச் சுற்றிப் பரந்து இருக்கின்ற கடலின் நீரைப் பருகி வானில் உயர்ந்து; (வாரிதி - கடல்);
மாதேவன் ஏர் இலகு கண்ட நிறம் ஏற்று - மகாதேவனது அழகிய கண்டத்தின் நிறத்தை ஏற்று; (ஏர் - அழகு); (ஏர் - அழகு); (இலகுதல் - விளங்குதல்);
அவன் பூண் முப்புரிநூல் நேர் ஒளிர மின்னி - அவன் அணிந்த பூணூல் போல ஒளிவீச மின்னி; (நேர்தல் - ஒத்தல்);
மதில் நீறுசெய்தான்-தன் நகை போல் பேரிடி ஆர்த்துப் - முப்புரங்களைச் சாம்பலாக்கிய பெருமானது சிரிப்பினைப் போல் பேரொலியுடைய இடிகள் முழக்கி; (அட்டஹாஸம் - பெருநகை); (ஆர்த்தல் - ஒலித்தல்);
பினாகம் போல் வில் காட்டி - சிவபெருமானது வில்லான பினாகம் போல் வானவில் காட்டி;
நாரிபங்கன் நாமம் உரை நாவர் மகிழ அவர் கோரியன நல்கிக் குறைதீர்க்கும் - உமைபங்கனது திருநாமத்தை நாவால் சொல்லும் பக்தர்கள் மகிழும்படி அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அளித்துக் குறைதீர்க்கின்ற;
நாதன் அருள் மாரி எனப் பெய்யாய் மழை - அப்பெருமானது அருள்மழை போல, மழையே, நீ பெய்வாயாக;
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
12)
ஆற்றைச் சடைக்கரந்த அண்ணல் அடிபோற்றி
கீற்று மதிசூடி கேடில் அடிபோற்றி
ஏற்றுக் கொடியுடைய ஏந்தல் அடிபோற்றி
நீற்றன் உமைமங்கை நேயன் அடிபோற்றி
தோற்றம் முடிவில்லாத் தூயன் அடிபோற்றி
காற்றுநீர் தீவெளிபார் ஆனான் கழல்போற்றி
கூற்றை உதைசெய்த கூத்தன் கழல்போற்றி
போற்றிநாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.
ஆற்றைச் சடைக் கரந்த அண்ணல் அடி போற்றி - கங்கையைச் சடையில் ஒளித்த பெருமான் திருவடிக்கு வணக்கம்; (கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்);
கீற்று மதிசூடி கேடு இல் அடி போற்றி - பிறையைச் சூடியவனது அழிவற்ற திருவடிக்கு வணக்கம்;
ஏற்றுக்-கொடி உடைய ஏந்தல் அடி போற்றி - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய தலைவனது திருவடிக்கு வணக்கம்;
நீற்றன் உமைமங்கை நேயன் அடி போற்றி - திருநீற்றைப் பூசியவனும் உமாதேவிக்கு அன்பனுமான ஈசன் திருவடிக்கு வணக்கம்;
தோற்றம் முடிவு இல்லாத் தூயன் அடி போற்றி - ஆதியும் அந்தமும் இல்லாத நின்மலனது திருவடிக்கு வணக்கம்;
காற்று நீர் தீ வெளி பார் ஆனான் கழல் போற்றி - நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆனவனது திருவடிக்கு வணக்கம்; (யாப்புக் கருதி ஐம்பூதங்களின் வரிசை மாறி வந்தது);
கூற்றை உதைசெய்த கூத்தன் கழல் போற்றி - காலனை உதைத்து அழித்தவனும் நடராஜனும் ஆன பெருமானது திருவடிக்கு வணக்கம் ;
போற்றி நாம் மார்கழிநீர் ஆடு - இவ்வாறு பன்முறை ஈசன் திருவடிகளைப் போற்றி மார்கழி நீராடல் செய்வோமாக;
ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment