Monday, September 15, 2025

P.453 - பட்டீச்சரம் (பட்டீஸ்வரம்) - அரவினைப் பற்றி

2018-09-27

P.453 - பட்டீச்சரம் (பட்டீஸ்வரம்)

-------------------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா மா விளம் விளம் - வாய்பாடு)


1)

அரவினைப் பற்றிப் பெருமலை மத்தால் .. அன்று பாற்கடல் கடைந்தவர்

வெருவிடப் பெருகு விடமமு துண்டு .. மிடற்றில் வைத்தருள் விமலனே

இரவினில் ஆடும் எம்பெரு மானே .. ஈச னேதுணை நீயெனப்

பரவிய அன்பர் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"அரவினைப் பற்றிப் பெருமலை மத்தால் அன்று பாற்கடல் கடைந்தவர் வெருவிடப் பெருகு விடம் அமுது உண்டு மிடற்றில் வைத்து அருள் விமலனே - "பாம்பைக் கயிறாகக் கொண்டு பெரிய மலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த தேவரகள் அஞ்சும்படி பெருகிய ஆலகாலத்தை அமுதாக உண்டு கண்டத்தில் வைத்து அருளிய தூயனே;

இரவினில் ஆடும் எம் பெருமானே - நள்ளிருளில் கூத்தாடும் எம் பெருமானே;

ஈசனே துணை நீ" எனப் - ஈசனே, நீயே துணை" என்று;

பரவிய அன்பர் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - போற்றி வழிபடும் பக்தர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்; (அருளும் - அருள்வான்; செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று);


2)

மதுகரம் நாடும் வார்குழல் மங்கை .. வாமம் பங்குடை மன்னனே

மதகரி கதறப் பிடித்துரி செய்தாய் .. மார்பில் முப்புரி நூலனே

நித(ம்)மணம் ஆரும் சொற்றமிழ் பாடி .. நிருத்த னேதுணை நீயெனப்

பதமலர் தொழுதார் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"மதுகரம் நாடும் வார்-குழல் மங்கை வாமம் பங்குடை மன்னனே - "வண்டினம் விரும்பும் நீண்ட கூந்தலையுடைய உமையை இடப்பக்கம் பங்காக உடைய மன்னவனே;

மதகரி கதறப் பிடித்து உரிசெய்தாய் - யானை கதறும்படி அதனைப் பற்றி அதன் தோலை உரித்தவனே;

மார்பில் முப்புரி நூலனே - திருமார்பில் பூணூலை அணிந்தவனே;

நிதம் மணம் ஆரும் சொற்றமிழ் பாடி - நாள்தோறும் மணம் கமழும் தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி;

நிருத்தனே துணை நீ" எனப் - கூத்தனே, நீயே துணை" என்று;

பதமலர் தொழுதார் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - திருவடித்-தாமரையைப் போற்றி வழிபடும் பக்தர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்;


3)

அங்கமும் மறையும் அருளிய நாவா .. அம்பை ஏவிய காமனை

அங்கமில் லானென் றாக்கிய தேவா .. அரிவை ஓர்புடை ஆயினாய்

பொங்கழல் மேனி மீதுவெண் பொடியைப் .. பூசி னாய்துணை நீயெனப்

பைங்கழல் தொழுதார் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"அங்கமும் மறையும் அருளிய நாவா - "நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பாடியருளியவனே;

அம்பை ஏவிய காமனை அங்கம் இல்லான் என்று ஆக்கிய தேவா - மலர்க்கணை எய்த மன்மதனை உடல்-அற்றவனாகச் செய்த தேவனே;

அரிவை ஓர் புடை ஆயினாய் - உமையை ஒரு பக்கத்தில் உடையவனே;

பொங்கு-அழல் மேனி மீது வெண்பொடியைப் பூசினாய் துணை நீ" எனப் - தீப்-போன்ற செம்மேனிமேல் வெண்ணிறத் திருநீற்றைப் பூசியவனே, நீயே துணை" என்று;

பைங்கழல் தொழுதார் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - அழகிய திருவடியைப் போற்றி வழிபடும் பக்தர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்;


4)

திணிந்தநெஞ் சுடைய சலந்தரன் தன்னைச் .. செற்ற ஆழிமாற் கருளினாய்

தணிந்தவர் நெஞ்சம் தனைப்பிரி யாத .. சங்க ராமலர்க் கொன்றையை

அணிந்திடும் மார்பில் அரவையும் பூண்ட .. ஐய னேதுணை நீயெனப்

பணிந்தெழும் அன்பர் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"திணிந்த நெஞ்சுடைய சலந்தரன் தன்னைச் செற்ற ஆழி மாற்கு அருளினாய் - "கல்மனம் உடைய (/ வலிய மார்பை உடைய) ஜலந்தராசுரனை அழித்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு ஈந்தவனே;

தணிந்தவர் நெஞ்சம்-தனைப் பிரியாத சங்கரா - (ஆசை, கோபம், இத்யாதிகள்) அடங்கிய மனத்தில் என்றும் நீங்காமல் உறைகின்ற சங்கரனே;

மலர்க்-கொன்றையை அணிந்திடும் மார்பில் அரவையும் பூண்ட ஐயனே துணை நீ" னப் - மார்பில் கொன்றைமலரையும் பாம்பையும் அணிந்த தலைவனே, நீயே துணை" என்று;

பணிந்து எழும் அன்பர் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - போற்றி வழிபடும் பக்தர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்;


5)

ஆடிய கழலுக் கன்புடை மாணி .. அஞ்ச ஆருயிர் கொன்றிட

ஓடிய டைந்த இரக்கமில் நமனை .. உதைத்த காலனே ஒண்மதி

சூடிய சடைமேற் பாம்பையும் சேர்த்த .. சுந்த ராதுணை நீயெனப்

பாடிய அன்பர் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"ஆடிய கழலுக்கு அன்புடை மாணி அஞ்ச ஆருயிர் கொன்றிட ஓடி அடைந்த"கூத்தாடும் திருவடிக்கு அன்புடைய மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரது அரிய உயிரைக் கொல்வதற்கு ஓடி வந்து அடைந்த;

இரக்கம் இல் நமனை உதைத்த காலனே - இரக்கமற்ற கூற்றுவனை உதைத்த காலகாலனே;

ஒண்மதி சூடிய சடைமேள் பாம்பையும் சேர்த்த சுந்தரா துணை நீ" எனப் - ஒளி வீசும் சந்திரனைச் சூடிய சடையின்மேல் பாம்பையும் சேர்த்தவனே, நீயே துணை" என்று;

பாடிய அன்பர் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - பாடி வழிபடும் பக்தர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்;


6)

நெற்றியில் எரியார் நேத்திரம் உடையாய் .. நீலம் ஏறிய கண்டனே

வெற்றிவெள் விடையை விரும்பிய வேந்தே .. விரிசெஞ் சடைமிசைத் திங்களைச்

சுற்றிய ராவும் திகழ்ந்திடு மாறு .. சூடி னாய்துணை நீயெனப்

பற்றிய அன்பர் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"நெற்றியில் எரி ஆர் நேத்திரம் உடையாய் - "தீப் பொருந்திய நெற்றிக்கண்ணை உடையவனே;

நீலம் ஏறிய கண்டனே - நீலகண்டனே;

வெற்றி வெள்-விடையை விரும்பிய வேந்தே - வெற்றியுடைய வெள்ளை இடபத்தை வாகனமாக விரும்பிய அரசனே;

விரி-செஞ்சடைமிசைத் திங்களைச் சுற்றி அராவும் திகழ்ந்திடுமாறு சூடினாய் துணை நீ" எனப் - விரிந்த செஞ்சடைமேல் சந்திரனைச் சுற்றி பாம்பும் விளங்கும்படி சூடியவனே, நீயே துணை" என்று;

பற்றிய அன்பர் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - புகலடைந்த பக்தர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்;


7)

கண்புனை நெற்றிக் கடவுளே என்று .. கருதிக் கடிமலர் பலகொடு

விண்பணிந் தேத்த அவர்களுக் கிரங்கி .. வெற்பை வில்லென ஏந்தியே

திண்புரம் மூன்றைத் தீப்புகச் செய்த .. சிவனே என்றடி போற்றிடும்

பண்புடை யார்தம் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"கண் புனை நெற்றிக் கடவுளே" என்று - "நெற்றிக்கண்ணுடைய கடவுளே" என்று;

கருதிக் கடிமலர் பல-கொடு விண் பணிந்து ஏத்த அவர்களுக்கு இரங்கி - பக்தியோடு வாசமலர்கள் பலவற்றால் தேவர்கள் வணங்கவும் அவர்களுக்கு இரங்கி;

வெற்பை வில்லென ஏந்தியே திண்-புரம் மூன்றைத் தீப்-புகச் செய்த சிவனே என்று - மேருமலையை வில்லாக ஏந்தி வலிய முப்புரங்களை எரித்த சிவனே என்று;

அடி போற்றிடும் பண்பு உடையார்தம் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - திருவடியைப் போற்றும் அன்பர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்;


8)

கோங்கொடு குரவம் கூவிளம் மத்தம் .. குலவும் செஞ்சடை மேல்மதி

தாங்கிய அழகா சதுர்மறைப் பொருளே .. தடவெற் பிடந்தவன் தானழ

ஆங்கொரு விரலால் அடர்த்தருள் செய்த .. அரனே என்றடி போற்றிடும்

பாங்குடை யார்தம் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"கோங்கொடு குரவம் கூவிளம் மத்தம் குலவும் செஞ்சடைமேல் மதி தாங்கிய அழகா - "கோங்கம், குரவம், ஊமத்தை முதலிய மலர்களும் வில்வ-இலையும் திகழும் செஞ்சடைமேல் சந்திரனைத் தாங்கிய அழகனே;

சதுர்மறைப் பொருளே - நால்வேதப் பொருள் ஆனவனே;

தட-வெற்பு இடந்தவன்தான் அழ ஆங்கு ஒரு விரலால் அடர்த்தருள் செய்த அரனே" என்று - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி அங்கு ஒரு விரலால் அவனை நசுக்கியருளிய ஹரனே" என்று;

அடி போற்றிடும் பாங்கு உடையார்தம் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - திருவடியைப் போற்றும் அன்பர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்;


9)

அத்தினம் அயன்மால் அடிமுடி அறியா .. அளவில் எரியென ஓங்கினாய்

முத்தன நகையாள் பங்கென உடையாய் .. முக்கண் காட்டிடும் முதல்வனே

அத்தியின் உரிவை மூடிய மார்பா .. அத்தா என்றடி போற்றிடும்

பத்திமை உடையார் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"அத்-தினம் அயன் மால் அடிமுடி அறியா அளவு இல் எரி என ஓங்கினாய் - "முன்பு பிரமன் திருமால் இவர்களால் அடிமுடி அறிய ஒண்ணாத எல்லையற்ற ஜோதி என்று உயர்ந்தவனே;

முத்து அன நகையாள் பங்கு என உடையாய் - முத்துப் போன்ற பற்களை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;

முக்கண் காட்டிடும் முதல்வனே - மூன்று கண்களை உடைய முதல்வனே;

அத்தியின் உரிவை மூடிய மார்பா, அத்தா" என்று - யானையின் தோலை மார்பில் போர்த்தவனே, தந்தையே" என்று;

அடி போற்றிடும் பத்திமை உடையார் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - திருவடியைப் போற்றும் பக்தி உடைய அன்பர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்;


10)

கடிகமழ் நீறு பூசிட அஞ்சும் .. கையர் கூறிடும் புன்னெறி

மிடிதனில் ஆழ்த்தும் என்றுணர்ந் தார்கள் .. விரும்பி வழிபடும் மெய்யனே

துடியினை ஏந்திச் சுடலையில் ஆடும் .. தூய னேதுணை நீயெனப்

படியுறப் பணிந்தார் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"கடி கமழ் நீறு பூசிட அஞ்சும் கையர் கூறிடும் புன்னெறி மிடிதனில் ஆழ்த்தும் என்று உணர்ந்தார்கள் விரும்பி வழிபடும் மெய்யனே - "வாசனை கமழும் திருநீற்றைப் பூச அஞ்சும் கீழோர் சொல்லும் சிறுநெறிகள் துன்பத்தில் ஆழ்த்தும் என்று உணர்ந்தவர்கள் விரும்பி வழிபடுகின்ற மெய்ப்பொருளே; (கையர் - கீழோர்); (மிடி - துன்பம்);

துடியினை ஏந்திச் சுடலையில் ஆடும் தூயனே துணை நீ" எனப் - உடுக்கையை ஏந்திச் சுடுகாட்டில் திருநடம் செய்யும் தூயனே, நீயே துணை" என்று;

படி-உறப் பணிந்தார் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - நிலத்தில் விழுந்து வணங்கும் அன்பர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்; (படி - நிலம்);


11)

நீருறு சடைமேல் நீள்மதி உடையாய் .. நீலக் கடல்விடம் உண்டதால்

காருறு கண்டா கனல்மழு வாளா .. கையில் மான்மறி ஏந்தினாய்

வாருறு முலையாள் மலைமகள் கணவா .. மைந்த னேதுணை நீயெனப்

பாருறப் பணிந்தார் பகைகெடுத் தருளும் .. பட்டீச் சரத்துறை பரமனே.


"நீர் உறு சடைமேல் நீள்மதி உடையாய் - "கங்கை இருக்கும் சடையின்மேல் வளர்மதியை அணிந்தவனே;

நீலக்-கடல்விடம் உண்டதால் கார் உறு கண்டா - கரிய கடல்-நஞ்சை உண்டதால் மேகம் போலக் கருமை திகழும் கண்டனே; (கார் - 1. கருமை; 2. மேகம்); (உறுதல் - 1. இருத்தல்; 2. ஒத்தல்); (காருறு - "கார் உறு கார் உறு" - இச்சொற்றொடரை இப்படி இருமுறை இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);

கனல் மழுவாளா கையில் மான்மறி ஏந்தினாய் - கையில் ஒளிவீசும் மழுவாளையும் மான்கன்றையும் ஏந்தியவனே; ("கையில்" என்ற சொல்லை இடைநிலைத்-தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);

வார் உறு முலையாள் மலைமகள் கணவா - கச்சு அணிந்த முலைகளை உடைய உமைக்குக் கணவனே;

மைந்தனே துணை நீ" எனப் - வீரனே, நீயே துணை" என்று; (மைந்தன் - வீரன்);

பார்-உறப் பணிந்தார் பகை கெடுத்து அருளும் பட்டீச்சரத்து உறை பரமனே - நிலத்தில் விழுந்து வணங்கும் அன்பர்களது பகையையெல்லாம் அழித்து அருள்வான் பட்டீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment