2018-11-01
P.456 - பேரூர்
-------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - தானதன தானதன தானதன தானா) (திருவிராகம் அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 2.29.1 - திருவிராகம் - "முன்னிய கலைப்பொருளும்")
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
1)
துள்ளுமறி மூவிலைய சூலமிவை ஏந்தி
வெள்ளைவிடை மீதுவரும் வேந்தனுமை பங்கன்
பிள்ளைமதி சூடுமிறை பீடுடைய பேரூர்
வள்ளலவன் வார்கழலை வாழ்த்தவரும் இன்பே.
துள்ளும் மறி, மூ-இலைய சூலம், இவை ஏந்தி - துள்ளும் மான்கன்றையும், மூன்று இலை போன்ற நுனிகளையுடைய சூலத்தையும், ஏந்தியவன்;
வெள்ளை-விடைமீது வரும் வேந்தன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய அரசன்;
உமைபங்கன் - உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்;
பிள்ளைமதி சூடும் இறை - இளந்திங்களை அணிந்த இறைவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.80.5 - "பிள்ளைமதியம் உடையார்");
பீடு உடைய பேரூர் வள்ளல் அவன் வார்-கழலை வாழ்த்த வரும் இன்பே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்ற வள்ளலான அப்பெருமானது நீண்ட கழல் அணிந்த திருவடியை வாழ்த்தினால், இன்பம் வந்து அடையும்; (வள்ளல்அவன் - அவன் - பகுதிப்பொருள்விகுதி);
2)
அன்னையென அத்தனென ஆனசிவன் எம்மான்
சென்னிமிசை வெண்பிறையன் முன்னவனும் ஆகிப்
பின்னவனும் ஆயவிறை பீடுடைய பேரூர்
மன்னனவன் வார்கழலை வாழ்த்தவரும் இன்பே.
அன்னை என அத்தன் என ஆன சிவன் எம்மான் - தாயும் தந்தையும் ஆனவன், சிவன், எம் தலைவன்;
சென்னிமிசை வெண்பிறையன் - திருமுடிமேல் வெண்திங்களை அணிந்தவன்;
முன்னவனும் ஆகிப் பின்னவனும் ஆய இறை - எல்லாம் தோன்றுவதன் முன்னும், எல்லாம் ஒடுங்கியதன் பின்னும் இருக்கின்ற இறைவன்; (அப்பர் தேவாரம் - 6.48.8 - "முன்னவன்காண் பின்னவன்காண்");
பீடு உடைய பேரூர் மன்னன் அவன் வார்கழல்கள் வாழ்த்த வரும் இன்பே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்ற அரசனான அப்பெருமானது நீண்ட கழல் அணிந்த திருவடியை வாழ்த்தினால், இன்பம் வந்து அடையும்;
3)
கார்மலியு(ம்) மாமிடறன் நெற்றியிலொர் கண்ணன்
போர்விடையன் வாச(ம்)மலி பூதியணி மார்பன்
பேர்பலவும் ஏற்றவிறை பீடுடைய பேரூர்
வார்சடையன் ஆர்கழலை வாழ்த்தவரும் இன்பே.
கார் மலியும் மா மிடறன் - கருமை திகழும் அழகிய நீலகண்டம் உடையவன்; (மிடறு - கண்டம்);
நெற்றியில் ஒர் கண்ணன் - நெற்றியில் ஒரு கண்ணை உடையவன்; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);
போர்-விடையன் - போர் செய்யவல்ல இடபத்தை வாகனமாக உடையவன்;
வாசம் மலி பூதி அணி மார்பன் - வாசனை கமழும் திருநீற்றை மார்பில் பூசியவன்; (பூதி - திருநீறு);
பேர் பலவும் ஏற்ற இறை - பல திருநாமங்களை உடைய இறைவன்;
பீடு உடைய பேரூர் வார்-சடையன் ஆர்-கழலை வாழ்த்த வரும் இன்பே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்ற நீள்சடையை உடைய அப்பெருமானது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்டால், இன்பம் வந்து அடையும்; (வார்தல் - நீள்தல்);
4)
நற்றவர்கள் நால்வர்தொழ நான்மறைவி ரித்தான்
நெற்றியில்நெ ருப்புமிழு(ம்) நேத்திரன்நி ருத்தன்
பெற்றமது பேணுமிறை பீடுடைய பேரூர்க்
கொற்றவன்அ டிப்பெருமை கூறவரும் இன்பே.
நற்றவர்கள் நால்வர் தொழ நான்மறை விரித்தான் - சனகாதி முனிவர்கள் நால்வருக்கு நால்வேதப்பொருளை உபதேசித்தவன்;
நெற்றியில் நெருப்பு உமிழும் நேத்திரன் நிருத்தன் - தீயைக் கக்கும் நெற்றிக்கண் உடையவன், கூத்தன்;
பெற்றமது பேணும் இறை - இடபத்தை வாகனமாக விரும்பிம் இறைவன்; (பெற்றம் - எருது; அது - பகுதிப்பொருள்விகுதி); (சம்பந்தர் தேவாரம் - 2.95.2 - "ஏறு பேணிய தேறி");
பீடு உடைய பேரூர்க் கொற்றவன் அடிப்பெருமை கூற வரும் இன்பே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்ற அரசனான அப்பெருமானது திருவடிப்-புகழைக் கூறினால், இன்பம் வந்து அடையும்;
5)
விண்ணவர்கள் வேண்டமலை வில்லதனை ஏந்தித்
திண்ணரணம் மூன்றையெரி செய்யநகை செய்தான்
பெண்ணையிடம் ஏற்றவிறை பீடுடைய பேரூர்
அண்ணலவன் நற்கழலை நண்ணமகிழ் வாமே.
விண்ணவர்கள் வேண்ட மலை-வில் அதனை ஏந்தித் - தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி மேருமலையை வில்லாக ஏந்தி;
திண்-அரணம் மூன்றை எரிசெய்ய நகைசெய்தான் - வலிய முப்புரங்களை எரிக்கச் சிரித்தவன்;
பெண்ணை இடம் ஏற்ற இறை - உமையை இடப்பக்கத்தில் பாகமாக ஏற்ற இறைவன்;
பீடு உடைய பேரூர் அண்ணல் அவன் நற்கழலை நண்ண மகிழ்வு ஆமே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்ற தலைவனான அப்பெருமானது நல்ல திருவடியை அடைந்தால், இன்பம் ஆகும்;
6)
வண்டுமகிழ் கொன்றையணி வார்சடையன் நஞ்சை
உண்டுகறை கொண்டுதிகழ் கண்டனழ கார்ந்த
பெண்திகழு(ம்) மேனியிறை பீடுடைய பேரூர்
அண்டனடி போற்றியவர் பண்டைவினை வீடே.
வண்டு மகிழ் கொன்றை அணி வார்-சடையன் - வண்டுகள் விரும்பும் கொன்றைமலரை நீள்சடையில் அணிந்தவன்;
நஞ்சை உண்டு கறை கொண்டு திகழ் கண்டன் - ஆலகாலத்தை உண்டு கறையை ஏற்று விளங்கும் கண்டத்தை உடையவன்;
அழகு ஆர்ந்த பெண் திகழும் மேனி இறை - அழகிய உமை ஒரு கூறாகத் திகழும் மேனியை உடைய இறைவன்; (பெண்டிகழும் = பெண் + திகழும்);
பீடு உடைய பேரூர் அண்டன் அடி போற்றியவர் பண்டைவினை வீடே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்ற கடவுளான அப்பெருமானது திருவடியை வழிபட்டவர்களது பழவினைகள் நீங்கும்; (சம்பந்தர் தேவாரம் - 1.54.11 - "ஞானசம்பந்தன்-சொல் விரும்புவார் வினை வீடே"); (வீடுதல் - நீங்குதல்; அழிதல்);
7)
மத்தமலர் ஆர்சடையில் வானதிக ரந்தான்
கத்துகடல் நஞ்சுதனை உண்டமணி கண்டன்
பித்தனெனு(ம்) நாமவிறை பீடுடைய பேரூர்
அத்தனடி போற்றிசெயும் அன்பர்வினை வீடே.
மத்தமலர் ஆர் சடையில் வானதி கரந்தான் - ஊமத்தமலரை அணிந்த சடையில் கங்கையை ஒளித்தவன்; (ஆர்தல் - அணிதல்; பொருந்துதல்);
கத்து-கடல் நஞ்சுதனை உண்ட மணிகண்டன் - ஒலிக்கும் கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட நீலமணிகண்டன்;
பித்தன் எனும் நாம-இறை - பித்தன் (பேரருளாளன்) என்ற திருநாமத்தை உடைய இறைவன்;
பீடு உடைய பேரூர் அத்தன் அடி போற்றிசெயும் அன்பர் வினை வீடே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்ற தந்தையான அப்பெருமானது திருவடியை வழிபடும் பக்தர்களது வினைகள் நீங்கும்;
8)
காய்மொழியு ரைத்துமலை பேர்த்தவனு(ம்) நைந்து
வாய்களிசை பாடியழு மாறுவிரல் வைத்தான்
பேய்களிடை ஆடுமிறை பீடுடைய பேரூர்
நாயகனின் நற்கழலை நண்ணநலம் ஆமே.
காய்-மொழி உரைத்து மலை பேர்த்தவனும் நைந்து வாய்கள் இசை பாடி அழுமாறு விரல் வைத்தான் - பல இழிமொழிகள் சொல்லித் திட்டிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை, அவன் மிக வாடிப் பத்துவாய்களால் அழுது இசைபாடி வணங்கும்படி, ஒரு விரலை அம்மலைமேல் ஊன்றி அவனை நசுக்கியவன்;
பேய்களிடை ஆடும் இறை - பேய்கள் சூழத் திருநடம் செய்யும் இறைவன்;
பீடு உடைய பேரூர் நாயகனின் நற்கழலை நண்ண நலம் ஆமே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்ற தலைவனான அப்பெருமானது நல்ல திருவடியை அடைந்தால் நன்மை ஆகும்;
9)
அச்சுதனு(ம்) நான்முகனும் அன்றுதொழ நின்றான்
உச்சிமிசை ஒண்பிறையன் ஓர்தலையை ஏந்திப்
பிச்சையிடும் என்னுமிறை பீடுடைய பேரூர்
நச்சரவன் நற்கழலை நண்ணநலம் ஆமே.
அச்சுதனும் நான்முகனும் அன்று தொழ நின்றான் - திருமாலும் பிரமனும் முன்பு (அடிமுடி தேடி) வணங்கும்படி ஜோதியாகி உயர்ந்தவன்;
உச்சிமிசை ஒண்-பிறையன் - ஒளிவீசும் சந்திரனைத் தலைமேல் அணிந்தவன்;
ஓர் தலையை ஏந்திப், "பிச்சை இடும்" என்னும் இறை - ஒரு மண்டையோட்டை ஏந்திவந்து, "பிச்சை இடுங்கள்" என்னும் இறைவன்;
பீடு உடைய பேரூர் நச்சரவன் நற்கழலை நண்ண நலம் ஆமே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்றவனும் விஷப்பாம்பை அணிந்தவனுமான அப்பெருமானது நல்ல திருவடியை அடைந்தால் நன்மை ஆகும்;
10)
போதனையெ னப்புறனை நாளுமுரை புல்லர்
ஆதரவர் சொல்லைவிடும் ஆலநிழல் அண்ணல்
பேதையிடம் ஏற்றவிறை பீடுடைய பேரூர்
நாதனவன் நற்கழலை நண்ணநலம் ஆமே.
போதனை எனப் புறனை நாளும் உரை- புல்லர் - போதனை என்று நாள்தோறும் பழிமொழிகள் உரைக்கின்ற கீழோர்கள்; (புறன் - புறம் - பழிச்சொல்);
ஆதர்-அவர் சொல்லை விடும் - அந்தக் குருடர்கள் (அறிவிலிகள்) பேசும் பேச்சைப் பொருட்படுத்தாது நீங்குங்கள்;
ஆலநிழல் அண்ணல் - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;
பேதை இடம் ஏற்ற இறை - உமாதேவியை இடப்பாகமாக ஏற்ற இறைவன்; (இறை - இறைவன்; கணவன்);
பீடு உடைய பேரூர் நாதன் அவன் நற்கழலை நண்ண நலம் ஆமே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்ற தலைவனான அப்பெருமானது நல்ல திருவடியை அடைந்தால் நன்மை ஆகும்;
11)
மாணியுயிர் காத்துநமன் மார்பிலுதை காலன்
வேணியிடை வானதியன் வெந்தபொடி தன்னைப்
பேணியணி கின்றவிறை பீடுடைய பேரூர்
ஆணியடி போற்றவினை அற்றுமகிழ் வாமே.
மாணி உயிர் காத்து, நமன் மார்பில் உதை காலன் - மார்க்கண்டேயரது உயிரைக் காத்தருளிக், கூற்றுவனது மார்பில் உதைத்த காலகாலன்;
வேணியிடை வானதியன் - சடையிடைக் கங்கையை உடையவன்; (வேணி - சடை); (வானதி - கங்கை);
வெந்தபொடி-தன்னைப் பேணி அணிகின்ற இறை - சுட்ட திருநீற்றை விரும்பி அணியும் இறைவன்;
பீடு உடைய பேரூர் ஆணி அடி போற்ற வினை அற்று மகிழ்வு ஆமே - பெருமைமிக்க பேரூரில் உறைகின்ற ஆணிப்பொன் போன்ற அப்பெருமானது திருவடியை வழிபட்டால் வினைகள் தீர்ந்து இன்பம் ஆகும்; (ஆணி - பொன்னின் மாற்று அறிதற்கு வைத்திருக்கும் மாற்றுயர்ந்த பொன்); (அப்பர் தேவாரம் - 5.2.4 - "என் ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற தாணுவை");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment