2018-11-26
T.212 - கோயில் (சிதம்பரம்) - ஞாலம் அடைந்து
-----------------
(வண்ணவிருத்தம்;
தானன தந்த தானன தந்த
தானன தந்த .. தனதான)
(Can also be seen as - தான தனந்த x3 .. தனதான)
(மாலையில் வந்து - திருப்புகழ் - இலஞ்சி)
ஞாலம டைந்து மாடுவி ரும்பி
.. .. நாளுமு ழன்று .. மடியாமல்
.. நாவினில் உன்றன் நாமம ணிந்து
.. .. நாடிடு(ம்) நெஞ்சை .. அருளாயே
கோலமி லங்கு கோணிய திங்கள்
.. .. கோளர வொன்று(ம்) .. முடிமீது
.. கூவிளம் வம்பு நாறிய கொன்றை
.. .. கோடல ணிந்து .. மகிழ்வோனே
பாலன டுங்க ஓடிய டைந்து
.. .. பாசமெ றிந்த .. நமன்மார்பில்
.. பாதம ழுந்த வீசிய பண்ப
.. .. பாடியி றைஞ்சு .. சுரர்வாழ
ஆலம துண்ட மாமணி கண்ட
.. .. ஆயிழை பங்க .. புலியூரில்
.. ஆடக மன்றில் நேயர்வ ணங்க
.. .. ஆடலு கந்த பெருமானே.
பதம் பிரித்து:
ஞாலம் அடைந்து, மாடு விரும்பி
.. .. நாளும் உழன்று .. மடியாமல்,
.. நாவினில் உன்றன் நாமம் அணிந்து
.. .. நாடிடு(ம்) நெஞ்சை .. அருளாயே;
கோலம் இலங்கு கோணிய திங்கள்
.. .. கோளரவு ஒன்று(ம்) .. முடிமீது
.. கூவிளம், வம்பு நாறிய கொன்றை,
.. .. கோடல் அணிந்து .. மகிழ்வோனே;
பாலன் நடுங்க ஓடி-அடைந்து
.. .. பாசம் எறிந்த .. நமன்-மார்பில்
.. பாதம் அழுந்த வீசிய பண்ப;
.. .. பாடி இறைஞ்சு .. சுரர் வாழ
ஆலமது உண்ட மா-மணி கண்ட;
.. .. ஆயிழை பங்க; .. புலியூரில்
.. ஆடக-மன்றில் நேயர் வணங்க
.. .. ஆடல் உகந்த பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
ஞாலம் அடைந்து மாடு விரும்பி நாளும் உழன்று மடியாமல் - பூமியில் பிறந்து, பொருளை விரும்பி எந்நாளும் அலைந்து திரிந்து அழிந்துபோகாமல்; (மாடு - செல்வம்);
நாவினில் உன்றன் நாமம் அணிந்து நாடிடும் நெஞ்சை அருளாயே - என் நாக்கில் உன் திருநாமத்தை அணிந்து உன்னை விரும்பும் மனத்தை அருள்வாயாக;
கோலம் இலங்கு கோணிய திங்கள், கோளரவு ஒன்றும் முடிமீது - அழகிய வளைந்த பிறையும் கொடிய பாம்பும் ஒன்றாக இருக்கும் திருமுடியின்மேல்; (கோணுதல் - வளைதல்); (கோள் - கொலை; கொடுமை);
கூவிளம், வம்பு நாறிய கொன்றை, கோடல் அணிந்து மகிழ்வோனே - வில்வம், வாசனை கமழும் கொன்றைமலர், வெண்காந்தள்-மலர் இவற்றையெல்லாம் சூடி மகிழ்ந்தவனே; (வம்பு - வாசனை); (நாறுதல் - மணம் கமழ்தல்); (கோடல் - வெண்காந்தள்-மலர்); (சம்பந்தர் தேவாரம் - 2.95.1 - "கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி");
பாலன் நடுங்க ஓடி அடைந்து பாசம் எறிந்த நமன்-மார்பில் பாதம் அழுந்த வீசிய பண்ப – மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரிடம் ஓடிவந்து பாசம் வீசிய இயமனது மார்பில் உன் திருப்பாதம் பதியும்படி வீசி உதைத்தவனே;
பாடி இறைஞ்சு சுரர் வாழ ஆலம்அது உண்ட மா மணிகண்ட – துதித்து வணங்கிய தேவர்கள் வாழ்வதற்காக ஆலகாலத்தை உண்ட அழகிய நீலகண்டம் உடையவனே;
ஆயிழை பங்க – உமைபங்கனே; (ஆயிழை - பெண்);
புலியூரில் ஆடக-மன்றில் நேயர் வணங்க ஆடல் உகந்த பெருமானே - பெரும்பற்றப்-புலியூரில் (தில்லையில்) பொன்னம்பலத்தில் பக்தர்கள் வணங்க ஆடுகின்ற பெருமானே; (ஆடகம் - பொன்); (மன்று - மன்றம் - சபை); (திருவாசகம் - 8.21.5 - "அரைசே பொன்னம்பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment