Wednesday, September 3, 2025

P.449 - இடையாறு - சுழலார் கங்கை

2018-09-06

P.449 - இடையாறு

-------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - வாய்பாடு)

(ஈற்றடியில் 1-5 சீர்களிடையே எதுகை)

(சம்பந்தர் தேவாரம் - 1.73.1 - "வானார் சோதி மன்னு சென்னி")

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")


1)

சுழலார் கங்கை உலவு சடைமேல் தூய மதிசூடி

அழலார் மேனி அதன்மேல் எங்கும் அரவம் அணியண்ணல்

கழலார் பாதம் தொழுதார் தம்மைக் காக்கும் அருளாளர்

எழிலார் சோலை இடையா றமர்ந்த அழியாப் புகழாரே.


சுழல் ஆர் கங்கை உலவு சடைமேல் தூய மதி சூடி - சுழல்கள் பொருந்திய கங்கைநதி உலவுகின்ற சடைமீது தூய திங்களைச் சூடியவர்;

அழல் ஆர் மேனி அதன்மேல் எங்கும் அரவம் அணி அண்ணல் - தீப் போன்ற செம்மேனியின்மேல் பல பாம்புகள் அணிந்த தலைவர்; (அழல் - தீ); (ஆர்தல் - ஒத்தல்);

கழல் ஆர் பாதம் தொழுதார்தம்மைக் காக்கும் அருளாளர் - கழல் அணிந்த திருவடியை வணங்கியவர்களைக் காக்கின்ற அருளாளர்;

எழில் ஆர் சோலை இடையாறு அமர்ந்த – அழகிய பொழில் சூழ்ந்த திருஇடையாற்றில் உறைகின்ற;

அழியாப் புகழாரே - அழியாத புகழை உடைய சிவபெருமானார்;


2)

வாரார் கொங்கை மங்கை தன்னை வாமம் மகிழீசர்

காரார் கண்டர் மார்பில் நூலர் கையில் மழுவாளர்

சீரார் பாதம் தொழுதார் வினையைத் தீர்க்கும் அருளாளர்

ஏரார் சோலை இடையா றமர்ந்த நீரார் சடையாரே.


வார் ஆர் கொங்கை மங்கை-தன்னை வாமம் மகிழ் ஈசர் - கச்சு அணிந்த ஸ்தனங்களையுடைய உமையை இடப்பாகமாக விரும்பிய ஈசர்; (வார் - முலைக்கச்சு); (வாமம் - இடப்பக்கம்);

கார் ஆர் கண்டர் - மேகம் போன்ற கரிய கண்டம் உடையவர்; (கார் - கருமை; மேகம்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; ஒத்தல்);

மார்பில் நூலர் - மார்பில் பூணூலை அணிந்தவர்;

கையில் மழுவாளர் - கையில் மழுவாளை ஏந்தியவர்;

சீர் ஆர் பாதம் தொழுதார் வினையைத் தீர்க்கும் அருளாளர் - நன்மையும் அழகும் பொருந்திய திருவடியை வணங்கியவர்களது வினையைத் தீர்க்கின்ற அருளாளர்;

ஏர் ஆர் சோலை இடையாறு அமர்ந்த – அழகிய பொழில் சூழ்ந்த திருஇடையாற்றில் உறைகின்ற;

நீர் ஆர் சடையாரே - கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானார்;


3)

அசையா தனவும் அசையும் எவையும் ஆன ஒருதேவர்

தசையார் தலையில் பலிதேர் தலைவர் சடைமேற் பிறையாளர்

நசையால் நாளும் தொழுதார்க் கன்பர் நறையுண் டளிபாடும்

இசையார் சோலை இடையா றமர்ந்த விசையார் விடையாரே.


அசையாதனவும் அசையும் எவையும் ஆன ஒரு தேவர் - எல்லாப் பொருள்களிலும் எல்லா உயிர்களிலும் கலந்து இருப்பவர்; (சுந்தரர் தேவாரம் - 7.1.7 - "ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்");

தசை ஆர் தலையில் பலிதேர் தலைவர் - புலால் பொருந்திய மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் தலைவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.25.8 - "ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை ஆனான்");

சடைமேற் பிறையாளர் - சடைமீது சந்திரனைச் சூடியவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.60.10 - "துளங்கும் இளம்-பிறையாளன் திருநாமம்");

நசையால் நாளும் தொழுதார்க்கு அன்பர் - அன்பால் தினமும் வணங்கும் பக்தர்களுக்கு அன்பர்; (நசை - விருப்பம்; அன்பு); (அப்பர் தேவாரம் - 4.29.5 - "அன்பருக் கன்பர் போலும்");

நறை உண்டு அளி பாடும் இசை ஆர் சோலை இடையாறு அமர்ந்த(பூக்களில்) தேனை உண்டு வண்டுகள் பாடுகின்ற இசை பொருந்திய பொழில் சூழ்ந்த திருஇடையாற்றில் உறைகின்ற; (நறை - தேன்); (அளி - வண்டு);

விசை ஆர் விடையாரே - விரைந்து செல்லும் இடபவாகனத்தை உடைய சிவபெருமானார்; (விசை - வேகம்); (அப்பர் தேவாரம் - 4.66.8 - "வேகமார் விடையர் போலும்");


4)

தலையே கலனாப் பலிதேர் சதுரர் அலைமூ வெயில்வேவ

மலையே சிலையா வளைவித் தெய்த மைந்தர் மலர்தூவி

அலையார் சடையாய் அருளென் பாரை அஞ்சல் எனுமீசர்

இலையார் சோலை இடையா றமர்ந்த தொலையாப் புகழாரே.


தலையே கலனாப் பலிதேர் சதுரர் - பிரமனது மண்டையோடே பிச்சைப்பாத்திரமாகக்கொண்டு பிச்சையேற்கும் ஆற்றல் மிக்கவர்; (தலை - மண்டையோடு); (கலனா - கலனாக); (பலிதேர்தல் - பிச்சையெடுத்தல்); (சதுரன் - சமர்த்தன்);

அலை-மூ-எயில் வேவ மலையே சிலையா வளைவித்து எய்த மைந்தர் - தேவர்களை வருத்திய, எங்கும் திரிந்த முப்புரங்களும் வெந்து அழியும்படி மேருமலையையே வில்லாக வளைத்து எய்த வீரர்; (அலைதல் - திரிதல்); (அலைத்தல் - வருத்துதல்); (சிலை - வில்); (மைந்தன் - வீரன்);

மலர் தூவி, "அலை ஆர் சடையாய் அருள்" என்பாரை "அஞ்சல்" எனும் ஈசர் - "கங்கையைச் சடையில் உடையவனே! அருள்வாயாக" என்று பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்களுக்கு அபயம் தரும் ஈசர்;

இலை ஆர் சோலை இடையாறு அமர்ந்த – இலைகள் நிறைந்த பொழில் சூழ்ந்த திருஇடையாற்றில் உறைகின்ற;

தொலையாப் புகழாரே - அழியாத புகழை உடைய சிவபெருமானார்;


5)

வெருளார் மனத்து விண்ணோர் வந்து விரையார் கழலேத்த

அருளால் அன்று நஞ்சை உண்டார் ஆல நிழல்வேதப்

பொருளோ தியவர் போற்றும் அடியார் பொல்லா வினைதீர்ப்பார்

இருளார் சோலை இடையா றமர்ந்த சுருளார் சடையாரே.


வெருள் ஆர் மனத்து விண்ணோர் வந்து விரை ஆர் கழல் ஏத்த – அச்சம் மிகுந்த மனத்தை உடைய தேவர்கள் வந்து மணம் கமழும் திருவடியை வணங்க; (வெருள் - அச்சம்);

அருளால் அன்று நஞ்சை உண்டார் - அவர்களுக்கு இரங்கிக் கருணையால் ஆலகால விடத்தை உண்டவர்;

லநிழல் வேதப்பொருள் ஓதியவர் - கல்லால-மரத்தின்கீழ் நான்மறைப்பொருளை உபதேசித்தவர்;

போற்றும் அடியார் பொல்லா வினை தீர்ப்பார் - போற்றுகின்ற அடியவர்களது தீவினையைத் தீர்ப்பவர்;

இருள் ஆர் சோலை இடையாறு அமர்ந்த – இருண்ட (அடர்ந்த) பொழில் சூழ்ந்த திருஇடையாற்றில் உறைகின்ற;

சுருள் ஆர் சடையாரே - சுருண்ட சடையை உடைய சிவபெருமானார்;


6)

உம்ப ரெல்லாம் ஒன்று கூடி உரைத்த மொழிகேட்டு

வம்பு நாறு வாளி எய்த மதனைப் பொடிசெய்தார்

நம்பி வாழ்த்து மாணி வாழ நமனை உதைபாதர்

இம்பர் ஏத்த இடையா றமர்ந்த செம்பொற் சடையாரே.


உம்பர் எல்லாம் ஒன்று கூடி உரைத்த மொழி கேட்டு - தேவரெல்லாம் திரண்டு வந்து சொன்ன பேச்சைக் கேட்டு; (உம்பர் - தேவர்);

வம்பு நாறு வாளி எய்த மதனைப் பொடிசெய்தார் - மணம் கமழும் அம்பினை எய்த மன்மதனைச் சாம்பலாக்கியவர்; (வம்பு - வாசனை); (நாறுதல் - மணம் கமழ்தல்); (வாளி - அம்பு);

நம்பி வாழ்த்து மாணி வாழ நமனை உதை பாதர் - விரும்பி வழிபாடு செய்த மார்க்கண்டேயர் என்றும் வாழும்படி கூற்றுவனைத் திருவடியால் உதைத்தவர்; (நம்புதல் - விரும்புதல்);

இம்பர் ஏத்த இடையாறு அமர்ந்த – இவ்வுலகோர் வழிபடத் திருஇடையாற்றில் உறைகின்ற; ( இம்பர் - இவ்வுலகம்);

செம்பொற்-சடையாரே - சிவந்த பொன் போன்ற சடையை உடைய சிவபெருமானார்;


7)

ஆற்றும் செயல்கள் அரனுக் கென்றே அன்பால் அடிநாளும்

போற்றும் அவர்கள் பொல்லா வினையைப் போக்கி அருளீசர்

நீற்றைப் பூசும் நெற்றிக் கண்ணர் நித்த மணவாளர்

ஏற்றுக் கொடியர் இடையா றமர்ந்த ஆற்றுச் சடையாரே.


ஆற்றும் செயல்கள் அரனுக்கு என்றே அன்பால் - செய்யும் எல்லாச் செயல்களும் ஈசன் தொண்டே ஆகும் பக்தியோடு; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.19 - "எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க");

அடி நாளும் போற்றும் அவர்கள் பொல்லா வினையைப் போக்கி அருள் ஈசர் - திருவடியைத் தினமும் போற்றும் அன்பர்களது தீவினையைத் தீர்த்து அருளும் ஈசர்;

நீற்றைப் பூசும் நெற்றிக் கண்ணர் - திருநீற்றைப் பூசியவர், நெற்றிக்கண் உடையவர்;

நித்த மணவாளர் - அழியாத மணக்கோலம் உடையவன்; (அப்பர் தேவாரம் - 6.52.5 - "நித்தமணவாளன் என நிற்கின்றான்காண்");

ஏற்றுக்-கொடியர் - கொடிமேல் இடபச்சின்னத்தை உடையவர்;

இடையாறு அமர்ந்த – திருஇடையாற்றில் உறைகின்ற;

ஆற்றுச்-சடையாரே - சடையில் கங்கையை உடைய சிவபெருமானார்;


8)

கரிய அரக்கன் கயிலை மலைக்கீழ்க் கதற விரல்வைத்தார்

நரிகள் திரியும் சுடலை தன்னில் நட்டம் புரிநாதர்

கரியின் உரியைப் போர்த்த மார்பர் கருதார் புர(ம்)மூன்றும்

எரிய எய்தார் இடையா றமர்ந்த பெரிய விடையாரே.


கரிய அரக்கன் கயிலை மலைக்கீழ்க் கதற விரல் வைத்தார் - கரிய நிறம் உடைய இராவணன் கயிலைமலையின்கீழ் ஓலமிட்டு அழும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவர்;

நரிகள் திரியும் சுடலைதன்னில் நட்டம் புரி நாதர் - நரிகள் உலாவும் சுடுகாட்டில் திருக்கூத்து ஆடுகின்ற தலைவர்;

கரியின் உரியைப் போர்த்த மார்பர் - யானைத்தோலை மார்பில் போர்த்தவர்; (கரி - யானை); (உரி - தோல்);

கருதார் புரம் மூன்றும் எரிய எய்தார் - (தேவர்களைப்) பகைத்த அசுரர்களது முப்புரங்களும் எரியும்படி கணை எய்தவர்; (கருதார் - பகைவர்);

இடையாறு அமர்ந்த – திருஇடையாற்றில் உறைகின்ற;

பெரிய விடையாரே - பெரிய இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானார்;


9)

அரவத் தணையான் அலர்மேல் உறைவான் அன்று மிகநேடிப்

பரவச் சுடராய் ஓங்கு பரமர் படர்செஞ் சடைமீது

குரவம் மத்தம் கொன்றை சூடும் குழகர் இடுகாட்டில்

இரவில் ஆடி இடையா றமர்ந்த கரவில் சிவனாரே.


அரவத்து அணையான் அலர்மேல் உறைவான் அன்று மிக நேடிப் பரவச் சுடராய் ஓங்கு பரமர் - பாம்பைப் படுக்கையாக உடைய திருமால், தாமரைப்பூவின்மேல் உறையும் பிரமன் என்ற இவ்விருவரும் முன்பு அடிமுடியை மிகவும் தேடிப் பின் துதிக்கும்படி ஜோதியாகி ஓங்கிய பரமர்; (அணை - படுக்கை); (அலர் - பூ); (நேடுதல் - தேடுதல்); (பரவுதல் - துதித்தல்);

படர்-செஞ்சடைமீது குரவம் மத்தம் கொன்றை சூடும் குழகர் - படர்ந்த சிவந்த சடையின்மேல் குராமலர், ஊமத்தமலர், கொன்றைமலர் இவற்றையெல்லாம் சூடும் அழகர்; (குழகன் - இளமை உடையவன்; அழகன்);

இடுகாட்டில் இரவில் ஆடி - சுடுகாட்டில் நள்ளிருளில் திருநடம் செய்பவர்;

இடையாறு அமர்ந்த – திருஇடையாற்றில் உறைகின்ற;

கரவு இல் சிவனாரே - ஒளித்தல் இன்றி அருள்புரிகின்ற சிவபெருமானார்; (கரவு - வஞ்சனை; மறைத்தல்);


10)

மையை நெஞ்சில் வைத்த கையர் மந்தை மிகவேண்டிப்

பொய்யைச் சொல்லும் புல்லர் என்றும் புகலொன் றிலரானார்

கையிற் சூலன் கனலார் கணையால் கருதார் புர(ம்)மூன்றை

எய்ய வல்லான் இடையா றமர்ந்த செய்ய சடையானே.


மையை நெஞ்சில் வைத்த கையர் - கறுப்பை (வஞ்சத்தை) மனத்தில் தாங்கிய கீழோர்கள்; (மை - இருள்; குற்றம்; கருநிறம்); (கையர் - கீழோர்; வஞ்சகர்);

மந்தை மிகவேண்டிப் பொய்யைச் சொல்லும் புல்லர் - மந்தையைப் பெருக்குவதற்காகப் பல பொய்களைச் சொல்லும் அறிவீனர்கள்; (புல்லன் - அறிவீனன்; ஒழுக்கமற்றவன்);

என்றும் புகல் ஒன்று இலர் ஆனார் - அவர்கள் உய்யும் உபாயம் இல்லாதவர்கள்; (புகல் - பற்றுக்கோடு; சரண்); (ஒன்று இலர் - ஒன்றும் இல்லார்);

கையிற் சூலன் - கையில் திரிசூலத்தை ஏந்தியவன்;

கனல் ஆர் கணையால் கருதார் புரம் மூன்றை எய்ய வல்லான் - தீப் பொருந்திய ஒரு கணையால் பகைவர்களது முப்புரங்களை அழிக்க வல்லவன்; (கருதார் - பகைவர்); (எய்தல் - பாணம் பிரயோகித்தல்);

இடையாறு அமர்ந்த – திருஇடையாற்றில் உறைகின்ற;

செய்ய சடையானே - சிவந்த சடையை உடைய சிவபெருமான்; (செய்ய - சிவந்த);


11)

துங்கத் தமிழைப் பாடித் தொழுவன் தொண்டர் மகிழ்வெய்தச்

செங்கல் தன்னைச் செம்பொன் னாகச் செய்த புகலூரர்

அங்கை மழுவர் மங்கை பங்கர் அன்பர் வினைதீர்க்கும்

எங்கள் இறைவர் இடையா றமர்ந்த திங்கள் முடியாரே.


துங்கத் தமிழைப் பாடித் தொழு வன்தொண்டர் மகிழ்வு எய்தச் - உயர்ந்த தமிழைப் பாடி வழிபட்ட வன்தொண்டர் (சுந்தரர்) மகிழும்படி; (துங்கம் - உயர்ச்சி; பெருமை; தூய்மை);

செங்கல்-தன்னைச் செம்பொன்னாகச் செய்த புகலூரர் - செங்கல்லைப் பொன்னாக மாற்றி அருளிய திருப்புகலூர் ஈசர்; (இவ்வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

அங்கை மழுவர் - கையில் மழுவை ஏந்தியவர்;

மங்கை பங்கர் - மாதொருபாகர்;

அன்பர்-வினை தீர்க்கும் எங்கள் இறைவர் - பக்தர்களது பாவங்களைத் தீர்க்கின்ற எம் இறைவர்;

இடையாறு அமர்ந்த – திருஇடையாற்றில் உறைகின்ற;

திங்கள் முடியாரே - சந்திரசேகரர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment