2018-10-24
P.455 - நாவலூர்
-------------------------------
(எழுசீர்ச் சந்தவிருத்தம் - தனதான தான, தனதான தான, தனதான தான தனனா - சந்தம்; முதற்சீர் "தானான" என்றும் வரலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு")
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
1)
வடவால நீழல் இடமாக நாடி மறையோது ஞான முதல்வன்
படநாக(ம்) மார்பில் வடமாக ஆட மடமாது பாகம் உடையான்
உடையாக வேங்கை உரிபூண்ட தேவன் ஒளிநீறு பூசி இருளில்
நடமாடு நம்பி பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
வடவால நீழல் இடமாக நாடி மறை ஓது ஞான முதல்வன் - கல்லால-மரத்தடியை நல்ல இடம் என்று அடைந்து சனகாதியருக்கு மறைப்பொருளை உபதேசித்த ஞானகுரு;
படநாகம் மார்பில் வடமாக ஆட மடமாது பாகம் உடையான் - படம் திகழும் நாகப்பாம்பு மார்பில் அணியும் மணிவடம் (சரம் / சங்கிலி) போல அசைய, உமையை ஒரு பாகத்தில் உடையவன்;
உடையாக வேங்கை உரி பூண்ட தேவன் - அரையில் ஆடையாகப் புலித்தோலை அணிந்த கடவுள்; (உரி - தோல்);
ஒளிநீறு பூசி - ஒளி திகழும் வெண்ணீற்றைப் பூசியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.85.3 - "ஒளிநீ றணிந்து");
இருளில் நடம் ஆடு நம்பி பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - நள்ளிருளில் கூத்தாடுகின்ற பெருமான் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்; (நம்பி - ஆணிற் சிறந்தவன்; கடவுள்); (பதி - உறைவிடம்; கோயில்; ஊர்); (மல்குதல் - மிகுதல்); (நாவல் நகர் - திருநாவலூர்); (பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 12.183 - "என் அடியான் இந்-நாவல்நகர் ஊரன்");
2)
புகைகொண்டு நல்ல புனல்கொண்டு வாச மலர்கொண்டு போற்றும் அடியார்
பகைகொண்ட பண்டை வினையான விண்டு பலசெல்வம் எய்த அருள்வான்
மிகைசெய்த தக்கன் அவன்வேள்வி செற்ற விமலன்பு ரங்கள் அவிய
நகைசெய்த நம்பி பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
புகைகொண்டு, நல்ல புனல்கொண்டு, வாச மலர்கொண்டு, போற்றும் அடியார் - நல்ல தூபத்தாலும், நீராலும், மணம் மிக்க பூக்களாலும், வழிபாடு செய்யும் அடியவர்கள்; (புகை - தூபம்);
பகைகொண்ட பண்டை வினையான விண்டு பல செல்வம் எய்த அருள்வான் - அவர்களுக்குத் தீமை செய்யும் பழவினைகள் நீங்கிப், பல நலன்களையும் அடைந்து இன்புற அருள்பவன்; (விள்தல் - நீங்குதல்); (சுந்தரர் தேவாரம் - 7.48.7 - "வினைகளும் விண்டன");
மிகைசெய்த தக்கன் அவன் வேள்வி செற்ற விமலன் - ஆணவத்தால் ஈசனை இகழ்ந்த தக்கன் செய்த வேள்வியை அழித்த தூயன்; (தக்கன்அவன் - "அவன்" பகுதிப்பொருள்விகுதி);
புரங்கள் அவிய நகைசெய்த நம்பி பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - முப்புரங்களும் வெந்து அழியும்படி சிரித்த பெருமான் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்;
3)
நால்வாயை அன்று படவென்று ரித்து நடமாட வல்ல பெருமான்
மால்வாசம் ஆர்ந்த மலர்தூவி ஏத்த வடியார்ந்த ஆழி அருள்வான்
சேல்வேல்நி கர்த்த விழியாளி ணைந்த திருமேனி காட்டும் ஒருவன்
நால்வேதன் மேய பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
நால்வாயை அன்று பட வென்று உரித்து நடம் ஆட வல்ல பெருமான் - முன்பு யானையை வென்று கொன்று அதன் தோலை உரித்துக் கூத்தாடிய பெருமான்; (நால்வாய் - தொங்குகின்ற வாயை உடைய யானை); (படுதல் - இறத்தல்; அழிதல்);
மால் வாசம் ஆர்ந்த மலர் தூவி ஏத்த, வடி ஆர்ந்த ஆழி அருள்வான் - (திருவீழிமிழலையில்) திருமால் வாசனை மிகுந்த தாமரைப்பூக்களால் வழிபாடு செய்ய, மாலுக்கு இரங்கிக் கூர்மையான சக்கராயுதத்தை அளித்த பெருமான்; (ஆர்தல் - மிகுதல்); (வடி - கூர்மை); (ஆழி - சக்கரம்);
சேல் வேல் நிகர்த்த விழியாள் இணைந்த திருமேனி காட்டும் ஒருவன் - சேல்மீனையும் வேலையும் ஒத்த கண்ணை உடைய உமாதேவி திருமேனியில் இணைந்து இருக்கும் கோலத்தை உடைய ஒப்பற்றவன்;
நால்வேதன் மேய பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - நான்மறைகளைப் பாடியருளிய கடவுள் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்;
4)
அளிகின்ற நெஞ்சு தளியாக்கொ ளண்ணல் அடிபோற்று மாணி உயிரை
எளிதென்று வந்த நமனேயி றக்க உதைசெய்த எங்கள் இறைவன்
மிளிர்கொன்றை வன்னி வெறியார்ந்த மத்தம் விரவுஞ்சி வந்த சடைமேல்
நளிர்திங்கள் சூடி பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
அளிகின்ற நெஞ்சு தளியாக் கொள் அண்ணல் அடி போற்று மாணி உயிரை - அன்பால் குழைந்த மனமே கோயிலாகக் கொள்ளும் தலைவனது திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் கொல்வது;
எளிது என்று வந்த நமனே இறக்க உதைசெய்த எங்கள் இறைவன் - சுலபம் என்று கருதி அவரை அடைந்த காலனே இறக்கும்படி காலனது மார்பில் உதைத்தருளிய எம்பெருமான்;
மிளிர்-கொன்றை, வன்னி, வெறி ஆர்ந்த மத்தம், விரவும் சிவந்த சடைமேல் - மிளிர்கின்ற கொன்றைமலர், வன்னியிலை, வாசம் மிக்க ஊமத்தமலர் இவையெல்லாம் திகழும் செஞ்சடைமீது;
நளிர்-திங்கள் சூடி பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - குளிர்ந்த சந்திரனைச் சூடியவன் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்; (நளிர்தல் - குளிர்தல்);
5)
மிகுகின்ற அன்பு விரிகின்ற வேலை எனவேவி ளங்க அதனால்
நெகுகின்ற நெஞ்சம் உடையார்கள் வானில் நிலையாக வாழ அருள்வான்
தொகுகின்ற உம்பர் தொழுதேத்த மூன்று புரம்வேவ அம்பு தொடுவான்
நகுதிங்கள் சூடி பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
மிகுகின்ற அன்பு விரிகின்ற வேலை எனவே விளங்க – பொங்கும் அன்பு பரந்த கடல் போல விளங்க; (வேலை - கடல்);
அதனால் நெகுகின்ற நெஞ்சம் உடையார்கள் வானில் நிலையாக வாழ அருள்வான் - அதனால் உருகுகின்ற மனம் உடைய பக்தர்கள் சிவலோகத்தில் நிலைத்து வாழும்படி அருள்பவன்;
தொகுகின்ற உம்பர் தொழுதேத்த மூன்று புரம் வேவ அம்பு தொடுவான் - ஒன்றுதிரண்ட தேவர்கள் போற்ற, அவர்களுக்கு இரங்கி முப்புரங்களும் எரிந்து அழியும்படி ஒரு கணையை எய்தவன்;
நகு-திங்கள் சூடி பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - ஒளிவீசும் சந்திரனைச் சூடியவன் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்; (நகுதல் - பிரகாசித்தல்); (அப்பர் தேவாரம் - 4.12.1 - "முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னி");
6)
அறுமாமு கத்தன் அவனைப்ப யந்த அருளாளன் அங்கை அதனில்
சிறுமானை ஏந்து திருவாளன் என்று தினமேத்தும் அன்பர் அவரை
உறுகோளு(ம்) நாளு(ம்) நலியாது காக்கும் உமைபங்கன் எந்தை சடைமேல்
நறுமாலை சூடி பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
அறு-மா-முகத்தன் அவனைப் பயந்த அருளாளன் - அழகிய ஆறுமுகம் உடைய முருகனைப் பெற்றவன், அருளாளன்;
அங்கை-அதனில் சிறு-மானை ஏந்து திருவாளன் என்று - கையில் மான்கன்றை ஏந்திய திருவாளன் என்று போற்றி;
தினம் ஏத்தும் அன்பர் அவரை உறு-கோளும் நாளும் நலியாது காக்கும் உமைபங்கன் - தினமும் துதிக்கும் பக்தர்களை நவகிரகங்கள் நட்சத்திரங்கள் திதிகள் முதலியன வருத்தாதபடி காத்தருளும் மாதொருபாகன்; (சம்பந்தர் தேவாரம் - 2.85.11 - "தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்");
எந்தை - எம் தந்தை;
சடைமேல் நறுமாலை சூடி பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - சடையின்மீது மணம் கமழும் மாலையைச் சூடியவன் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்; (சம்பந்தர் தேவாரம் - 1.15.6 - "நறுமாலை சடை யுடையார்");
7)
பஞ்சன்ன பாத மடவார்கள் இட்ட பலிநாடு கின்ற பரமன்
மஞ்சண்ணு கின்ற மலையான்ம டந்தை மணவாளன் அங்கை மழுவான்
அஞ்சுண்ணம் என்று சுடுநீறு பூசும் அருளாளன் உம்பர் தொழவே
நஞ்சுண்ணி மேய பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
பஞ்சு அன்ன பாத மடவார்கள் இட்ட பலி நாடுகின்ற பரமன் - பஞ்சு போன்ற மென்மையான பாதத்தை உடைய பெண்கள் இட்ட பிச்சையை விரும்புகின்ற பரமன்; (பலி - பிச்சை);
மஞ்சு அண்ணுகின்ற மலையான்-மடந்தை மணவாளன் - மேகம் அடைகின்ற மலைக்கு மன்னனான இமவான் பெற்ற பார்வதிக்குக் கணவன்;
அங்கை மழுவான் - கையில் மழுவை ஏந்தியவன்;
அஞ்சுண்ணம் என்று சுடுநீறு பூசும் அருளாளன் - அழகிய சுண்ணப்பொடி போல வெந்த சாம்பலைப் பூசும் அருளாளன்; (அம் - அழகிய); (சுண்ணம் - சுண்ணப்பொடி - வாசனைப்பொடி);
உம்பர் தொழவே நஞ்சு-உண்ணி மேய பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - தேவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு இரங்கி விடத்தை உண்டவன் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்; (உண்ணி - உண்டவன்); (அப்பர் தேவாரம் - 4.8.1 - "அவனுமொர் ஐயம் உண்ணி");
8)
எதிராரும் இல்லை எனவென்று நாளும் இறுமாந்த பத்து முடியன்
மதியாமல் ஓடி மலைபேர்த்த ஞான்று மலரன்ன பாத விரலால்
மிதிசெய்து வாட்டி இசைகேட்டு வாளு(ம்) மிகுநாளும் ஈந்த விகிர்தன்
நதிசூடி மேய பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
எதிர் ஆரும் இல்லை என வென்று நாளும் இறுமாந்த பத்து முடியன் - தன்னை எதிர்ப்பவர் எவரும் இல்லை என்னும்படி எல்லாரையும் வென்று எந்நாளும் ஆணவத்தோடு இருந்த பத்துத்தலை இராவணன்;
மதியாமல் ஓடி மலை பேர்த்த ஞான்று - இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்த்த சமயத்தில்; (ஞான்று - நாள்; காலத்தில்);
மலர் அன்ன பாத-விரலால் மிதிசெய்து வாட்டி - தன் மலர்ப்பாத-விரலை ஊன்றி அவனை நசுக்கி வருத்தி;
இசை கேட்டு வாளும் மிகு-நாளும் ஈந்த விகிர்தன் - பின்னர் அவன் பாடிய கீதத்தைக் கேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளையும் நீண்ட ஆயுளையும் தந்த விகிர்தன்; (விகிர்தன் - சிவன் திருநாமம் - மாறுபட்ட செயலினன் என்ற பொருள்);
நதிசூடி மேய பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - கங்காதரன் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்;
9)
திரைமேல்து யின்ற திருமாலி னோடு பிரமன்தி கைக்க எதிரே
வரையேதும் இன்றி வளர்கின்ற சோதி வடிவேற்று வந்த பரமன்
தரைமேற்ப ணிந்து கழல்போற்றும் அன்பர் தளைநீக்கு கின்ற தலைவன்
நரையேற்றன் மேய பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
திரைமேல் துயின்ற திருமாலினோடு பிரமன் திகைக்க எதிரே - கடல்மேல் துயிலும் திருமாலும் பிரமனும் திகைக்கும்படி அவர்கள் எதிரே; (திரை - அலை; கடல்);
வரை ஏதும் இன்றி வளர்கின்ற சோதி வடிவு ஏற்று வந்த பரமன் - எல்லையின்றி வளர்ந்த ஜோதி வடிவத்தை ஏற்று நின்ற பரமன்;
தரைமேல் பணிந்து கழல் போற்றும் அன்பர் தளை நீக்குகின்ற தலைவன் - நிலத்தில் விழுந்து திருவடியை வணங்கும் பக்தர்களது பந்தங்களை நீக்கும் தலைவன்;
நரை-ஏற்றன் மேய பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - வெள்ளை ஏற்றை வாகனமாக உடைய சிவபெருமான் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்; (நரை - வெண்மை);
10)
கசிவில்ல தான மனமுள்ள கையர் கறைநெஞ்சர் வார்த்தை விடுமின்
நிசியில்வி ரும்பி நடமாடி தன்னை நினைவார்க்கு நன்மை அருள்வான்
பசியுள்ள தென்று தலையேந்தி வந்து பலிதேரு கின்ற பரமன்
நசிவில்லி மேய பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
கசிவு இல்லதான மனம் உள்ள கையர், கறை-நெஞ்சர் வார்த்தை விடுமின் - அன்பு இல்லாத கல்மனம் உடைய கீழோர்கள், குற்றம் படிந்த நெஞ்சினர்கள் சொல்கின்ற பொய்களை நீங்கள் பொருட்படுத்தாமல் நீங்குங்கள்; (கையர் - கீழோர்);
நிசியில் விரும்பி நடம்-ஆடி தன்னை நினைவார்க்கு நன்மை அருள்வான் - இரவில் மகிழ்ந்து கூத்தாடுபவன் தன்னைத் தியானித்து வழிபடும் அன்பர்களுக்கு நன்மைகள் அருள்பவன்;
பசி உள்ளது என்று தலை ஏந்தி வந்து பலி-தேருகின்ற பரமன் - பசி என்று சொல்லி ஒரு மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்கின்ற பரமன்;
நசிவு-இல்லி மேய பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - என்றும் அழிவற்றவனான சிவபெருமான் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்; (நசிவு - அழிவு);
11)
புகலென்ற டைந்து புகழ்நேயர் பண்டை வினைபோக்கு கின்ற புனிதன்
தகவின்றி அம்பு தனையெய்த காமன் உடலின்றி வாழ அருள்வான்
நிகரொன்று மில்லி நிரைகொன்றை சூடி மிகவாதை செய்த அவுணர்
நகரெய்த வில்லி பதிசோலை சூழ்ந்த நல(ம்)மல்கு நாவல் நகரே.
புகல் என்று அடைந்து புகழ்-நேயர் பண்டை வினை போக்குகின்ற புனிதன் - அடைக்கலம் புகுந்து திருவடியைப் புகழ்ந்து பாடும் பக்தர்களது பழவினையை நீக்குகின்ற தூயன்; (போக்குதல் - இல்லாமற் செய்தல்; அழித்தல்);
தகவு-இன்றி அம்புதனை எய்த காமன் உடல் இன்றி வாழ அருள்வான் - அறிவின்றிக் கணையை எய்த மன்மதனை அனங்கன் ஆக்கிய பெருமான்; (தகவு - தகுதி; அறிவு);
நிகர்-ஒன்றும் இல்லி - தனக்கு எவ்வொப்பும் இல்லாதவன்;
நிரை-கொன்றை சூடி - வரிசையாகத் தொடுக்கப்பெற்ற கொன்றைமலர்களை அணிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.15.1 - "நீள்சடை மேலொர் நிரைகொன்றைத் தாரானே");
மிக வாதை செய்த அவுணர் நகர் எய்த வில்லி பதி சோலை சூழ்ந்த நலம் மல்கு நாவல் நகரே - தேவர்களுக்கு மிகுந்த துன்பம் கொடுத்த அசுரர்களது முப்புரங்களையும் எய்த வில்லை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம் பொழில் சூழ்ந்த நன்மை மிக்க திருநாவலூர் ஆகும்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment