Monday, September 15, 2025

N.052 - அரிவாட்டாய நாயனார் - சோறு மலிதரு

2018-10-14

N.052 - அரிவாட்டாய நாயனார்

----------------

(கட்டளைக் கலித்துறை)


1)

சோறு மலிதரு சோழநன் னாட்டினில் சோலைகளில்

நாறு மலர்களில் வண்டுண் டுறங்கிடும், நானிலத்தோர்

கூறு புனற்பொன்னி பாயும் மடைநீர் குளிர்வயலிற்

சேறு செயும்,கண மங்கலம் என்ற திகழ்பதியில்.


சோறு மலிதரு சோழ நன்னாட்டினில் - நெல்வளம் மிக்க சோழநாட்டில்;

சோலைகளில் நாறு மலர்களில் வண்டு உண்டு உறங்கிடும் - சோலைகளில் வாசமலர்களில் வண்டுகள் தேன் உண்டு உறங்கும்;

நானிலத்தோர் கூறு புனல் பொன்னி பாயும் - உலகம் புகழும் காவிரியாறு பாயும்;

மடைநீர் குளிர்வயலில் சேறு செயும் - அக்காவிரிநீர் மடைவழியே போய்க் குளிர்ந்த வயலில் சேற்றினை உண்டாக்கும்;

கணமங்கலம் என்ற திகழ் பதியில் - அங்கே, கணமங்கலம் என்ற ஊரில்;


2)

தாயர் எனும்பெயர் பெற்றவர் வாழ்ந்தார்; தனிவிடையன்

நேயர் அவர்தினம் மாவடு கீரைசெந் நெல்லரிசி

தூயன் திருவமு துக்குக் கொடுத்துத் தொழுதெழுவார்;

மாய வலையில் மதிமயங் காவுயர் மாண்புடையார்.


தாயர் எனும் பெயர் பெற்றவர் வாழ்ந்தார் - தாயர் என்ற பெயர் பெற்றவர் வாழ்ந்தார்;

தனி விடையன் நேயர் அவர் - ஒப்பற்ற இடபவாகனத்தை உடைய சிவனுக்கு அன்பர் அவர்;

தினம் மாவடு கீரை செந்நெல்லரிசி தூயன் திருவமுதுக்குக் கொடுத்துத் தொழுதெழுவார் - அவர் தினமும் மாவடு, கீரை, செந்நெல்லின் அரிசி இவற்றைப் புனிதனான சிவபெருமான் திருவமுதிற்குத் தந்து வழிபாடு செய்வார்;

மாய-வலையில் மதி மயங்கா உயர்-மாண்பு உடையார் - உலகப்பற்றுகளில் மதி மயங்காத உயர்ந்த குணம் உடையவர்;


3)

ஈசன் அருளால் இருஞ்செல்வம் குன்றுதல் எய்திடினும்,

நேசம் குறைவிலர், நித்தல் பணிசெய் நிலைதொடர்ந்தார்;

பாசம் அறுத்தவர் கூலிக் கறுத்துப் பணிபுரிந்தார்,

ஆசறு செந்நெல் அரனுக்கும் கார்நெல் அவர்க்கெனவே.


ஈசன் அருளால் இருஞ்-செல்வம் குன்றுதல் எய்திடினும் நேசம் குறைவு இலர் - இறைவன் திருவருளால் அவரது பெருஞ்செல்வம் குன்றிவிட்டபோதும் குறையாத அன்பு உடையவர்; (இருமை - பெருமை);

நித்தல் பணிசெய் நிலை தொடர்ந்தார் - தினமும் திருத்தொண்டு செய்யும் நிலையில் தொடர்ந்துநின்றார்;

பாசம் அறுத்தவர் கூலிக்கு அறுத்துப் பணிபுரிந்தார் - பாசங்களை எல்லாம் நீக்கிய அவர் பிறரிடம் கூலிக்கு நெல் அறுத்து வேலை செய்தார்;

ஆசு அறு செந்நெல் அரனுக்கும் கார்நெல் அவர்க்கு எனவே - அப்படிப் பெறும் கூலியில் சிறந்த செந்நெல் கிட்டினால் அதனைச் சிவன் திருவமுதிற்கும் கார்நெல் கிட்டினால் அதனைத் தம் உணவிற்கும் என்று வைத்துக்கொள்வார். (ஆசு அறு - குற்றம் அற்ற); (கார்நெல் - கரிய நெல்); (அவர்க்கு - அவருக்கும்; உம் தொக்கது);


4)

சங்கரன் தன்னருள் எங்கும்செந் நெற்கூலி தான்தரவே

அங்கவர் உள்ளம் மகிழ்ந்துமுக் கண்ணனுக் கானதென்றார்;

பங்கயச் செல்வி அனமனை யாளும் பசித்திருந்தார்;

பங்குமை சேர்பர மற்கமு தென்றும் படைத்துவந்தார்.


சங்கரன்தன் அருள் எங்கும் செந்நெற்-கூலிதான் தரவே - (இப்படி இருக்கும்பொழுது) சங்கரனது அருளால் எல்லாரும் செந்நெல்லையே கூலியாகத் தர;

அங்கு அவர் உள்ளம் மகிழ்ந்து முக்கண்ணனுக்கு ஆனது என்றார் - அவர் மனமகிழ்ந்து இச்செந்நெல் எல்லாம் முக்கண்ணனான ஈசனுக்கே என்று இருந்தார்;

பங்கயச்-செல்வி அன மனையாளும் பசித்து-இருந்தார் - லக்ஷ்மி போன்ற அவர் மனைவியும் அவரும் (சில நாள்களாக) உணவின்றிப் பசியோடு இருந்தனர்; (மனையாளும் - எச்சவும்மை; அவரும் அவர் மனைவியாரும்);

பங்கு உமை சேர் பரமற்கு அமுது என்றும் படைத்துவந்தார் - (அப்படி இருந்த சமயத்திலும்) உமைபங்கனுக்குத் தினமும் செந்நெல்கொண்டு திருவமுது தொடர்ந்து படைத்து மகிழ்ந்தார்; (படைத்துவந்தார் - 1. தொடர்ந்து படைத்தார்; 2. படைத்து மகிழ்ந்தார்);


5)

ஒருதினம் கோயில் செலும்வழி தன்னில் உடல்தளர்வுற்(று)

இருநில(ம்) மேல்விழக், கீரை அரிசி இறைந்ததனால்,

கருமிடற் றீசற்(கு) அமுதிலை என்று கதிரரிவாள்

உருவித்தம் ஊட்டியிற் பூட்டி அறுக்க உறுபொழுதில்.


ஒருதினம் கோயில் செலும் வழி-தன்னில் உடல் தளர்வுற்று இருநில(ம்)மேல் விழக் - ஒருநாள் கோயிலுக்குச் செல்லும் வழியில் உடல்-தளர்ச்சியினால் தரைமேல் அவர் விழுந்துவிட;

கீரை அரிசி இறைந்ததனால் - அப்பொழுது கையில் கொண்டுசென்ற கீரை, அரிசி, மாவடு எல்லாம் தரையில் சிந்திவிடவும்; (மாவடுவும் கீழே சிந்தியது என்பது குறிப்பால் பெறப்பட்டது);

கருமிடற்று ஈசற்கு அமுது இலை என்று - நீலகண்டம் உடைய ஈசனது இன்றைய திருவமுதிற்கு அரிசி முதலியன இல்லையே என்று வருந்தி;

கதிர் அரிவாள் உருவித் தம் ஊட்டியிற் பூட்டி அறுக்க உறு பொழுதில் - (இனியும் தாம் உயிர்வாழக்கூடாது என்று எண்ணிக்) கதிரை அறுக்கும் அரிவாளைக் கையில் எடுத்துத் தம் கழுத்தில் வைத்து அறுக்க முனைந்த சமயத்தில்;


6)

மன்றினில் ஆடியின் வண்கை கமரிடை வந்துபற்றி

நின்றது; மாவடு தன்னை உணுமொலி நீள்விசும்பே

சென்றது; சேவமர் செல்வனைக் கண்டவர் தெண்டனிட்டுப்,

பொன்றிகழ் மேனியன் தன்னை உளம்நெக்குப் போற்றிசெய்தார்.


மன்றினில் ஆடியின் வண்-கை கமரிடை வந்து பற்றி நின்றது - அம்பலத்தில் ஆடும் கூத்தனது அருட்கரம் அந்தக் கமரிலிருந்து (நிலவெடிப்பிலிருந்து) வந்து அவர் கையைப் பற்றிக்கொண்டது;

மாவடு-தன்னை உணும் ஒலி நீள்விசும்பே சென்றது - (அதே சமயத்தில்) மாவடுவைப் பெருமான் கடித்து உண்ணும் ஒலி ("விடேல் விடேல்" என்ற சத்தம்) வானையே எட்டும்படி பெரிதும் கேட்டது;

சே அமர் செல்வனைக் கண்டு அவர் தெண்டனிட்டுப் - (சிவபெருமான் காட்சி தந்தான்), இடபவாகனனைக் கண்டு மகிழ்ந்த அவர் வணங்கி;

பொன் திகழ் மேனியன்-தன்னை உளம் நெக்குப் போற்றிசெய்தார் - பொன் போன்ற செம்மேனி ஈசனை உள்ளம் உருகிப் போற்றினார்;


7)

கரியின் உரியாய் கனைகழல் போற்றி, கதிர்மதியார்

புரிசெஞ் சடையாய் புனைசே வடிபோற்றி போற்றியென்றே,

அரிவாள்கொண் டூட்டி அரிந்த அவரும் அவர்மனையும்

எருதே றிறைவன் உலகினில் என்றும் இனிதுறைந்தார்.


கரியின் உரியாய் கனைகழல் போற்றி - யானைத்தோலைப் போர்த்தவனே, ஒலிக்கின்ற கழல் அணிந்த உன் திருவடிக்கு வணக்கம்;

கதிர்மதி ஆர் புரி-செஞ்சடையாய் புனை-சேவடி போற்றி போற்றி என்றே - முறுக்கிய சிவந்த சடையின்மேல் ஒளிவீசும் திங்களை அணிந்தவனே, உன் அழகிய சிவந்த திருவடிக்கு வணக்கம் என்று பலவாறு துதித்து;

அரிவாள்கொண்டு ஊட்டி அரிந்த அவரும் அவர் மனையும் எருது ஏறு இறைவன் உலகினில் என்றும் இனிது உறைந்தார் - அரிவாளால் தம் கழுத்தை அரிந்த அரிவாட்டாயரும் அவர் மனைவியாரும் சிவலோகத்தில் நிலைத்து இருக்கும் பேற்றைப் பெற்றனர்; (அரிவாட்டாயர் = அரிவாள் + தாயர்);


8)

கரியின் பெருமையைக் கட்டெறும் பொன்றால் கழறொணுமோ?

விரியும் கடல்தனை வீட்டுக் கிணற்றால் விரிக்கொணுமோ?

பரிதி ஒளியை அகல்விளக் கொன்றால் பகரொணுமோ?

சுருதிக் கரியவன் தொண்டர்தம் சீர்நான் சொலுமளவோ?


கரியின் பெருமையைக் கட்டெறும்பு ஒன்றால் கழறொணுமோ - யானையின் பெருமையை ஒரு கட்டெறும்பால் சொல்ல இயலுமா? (கழறுதல் - சொல்லுதல்);

விரியும் கடல்தனை வீட்டுக்-கிணற்றால் விரிக்கொணுமோ - விரிந்த கடலை ஒரு கிணற்றால் விரிக்க (விளக்கியுரைக்க) இயலுமா? (விரித்தல் - விளக்கியுரைத்தல்);

பரிதி ஒளியை அகல்விளக்கு ஒன்றால் பகரொணுமோ - சூரியனின் ஒளியை ஓர் அகல்விளக்கால் சொல்ல இயலுமா? (பரிதி - சூரியன்);

சுருதிக்கு அரியவன் தொண்டர்தம் சீர் நான் சொலும் அளவோ - வேதங்களுக்கும் எட்டாத ஈசன் அடியாரது புகழ் என்னால் சொல்லும் அளவினதா? (அப்பர் தேவாரம் - 4.40.4 - "பண்டை-நான்மறைகள் காணாப் பரிசினன்");

* இலக்கணக்-குறிப்புகள்:

1. கழறொணுமோ - கழற ஒண்ணுமோ - தொகுத்தல் விகாரம், இடைக்குறை விகாரம்; விரிக்கொணுமோ, பகரொணுமோ - இவையும் இவ்வாறே - விரிக்க ஒண்ணுமோ, பகர ஒண்ணுமோ;

2. ஒவ்வோர் அடியிலும் ஈற்றில் உள்ள ஓகாரம் எதிர்மறை. அவ்விடங்களில் வினா-ஏகாரமும் இருந்திருக்கலாம். ஆனால் படிப்போர் எளிதில் பொருள் உணர்வதன் பொருட்டு ஓகாரப் பிரயோகம்.


9)

அரியயன் நேடிய அண்ணல் அமுதிற் கனுதினமும்

அரிசியும் மாவடு கீரை தரும்பணி ஆற்றியுய்ந்த

அரியவர் வாட்டாயர் சீர்தனை நானும் அருத்தியினால்

கருதி மொழிந்தேன் கடிமலர்த் தாளிணை கைதொழுதே.


அரி அயன் நேடிய அண்ணல் அமுதிற்கு அனுதினமும் - திருமால் பிரமன் இவர்களால் தேடிக் காண இயலாத தலைவனான சிவபெருமான் திருவமுதிற்காகத் தினந்தோறும்; (நேடுதல் - தேடுதல்); (அனுதினமும் - உம் - அசை);

அரிசியும் மாவடு கீரை தரும் பணி ஆற்றி உய்ந்த – அரிசி, கீரை, மாவடு இவற்றை அளித்துத் தொண்டுசெய்து உய்தி பெற்ற; (மாவடு கீரை - மாவடுவும் கீரையும்; உம்மைத்தொகை);

அரியவர் வாட்டாயர் சீர்தனை நானும் அருத்தியினால் கருதி மொழிந்தேன் கடிமலர்த் தாளிணை கைதொழுதே - ஒப்பற்ற அடியவரான அரிவாட்டாய நாயனாரின் வாசமலர் போன்ற இரு-திருவடிகளைக் கைகூப்பி வணங்கி, அவரது புகழை(த் தகுதியற்ற) நானும் அன்பினால் எண்ணி உரைத்தேன்.


பிற்குறிப்புகள் :

1. கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் பொதுவாக ஏகாரத்தில்தான் முடியும். ஆனால் இலக்கியத்தில் கதை சொல்லிக் குளகமாக வரும்போது அவ்விதியைப் பின்பற்றாத பாடல்களும் உண்டு.

பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - பாடல்கள் 335 – 342 காண்க. உதாரணமாக:

12.28.335 -

அவ்வினைக் கிவ்வினை என்றெடுத் தையர் அமுதுசெய்த

வெவ்விடம் முன்தடுத் தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்

எவ்விடத் தும்அடி யார்இடர் காப்பது கண்டமென்றே

செய்வினை தீண்டா திருநீல கண்டம் எனச்செப்பினார்.


2. பெரியபுராணம் - அரிவாட்டாய நாயனார் புராணம் - 12.13.18

மாசறு சிந்தை அன்பர் .. கழுத்தரி அரிவாள் பற்றும்

ஆசில்வண் கையை மாற்ற .. அம்பலத் தாடும் ஐயர்

வீசிய செய்ய கையும் .. மாவடு விடேல்வி டேலென்

றோசையும் கமரி னின்றும் .. ஒக்கவே எழுந்த வன்றே.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment