Monday, September 15, 2025

T.210 - கொச்சைவயம் (காழி) - பொக்கமும் உற்ற வினைத்தொடர்

2018-11-06

T.210 - கொச்சைவயம் (காழி) - பொக்கமும் உற்ற வினைத்தொடர்

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தன தத்தன தத்தன தத்தன

தத்தன தத்தன .. தனதான)

(பத்தர்க ணப்ரிய - திருப்புகழ் - திருசெங்கோடு)


பொக்கமும் உற்றவி னைத்தொடர் கொட்டிய

.. .. துக்கமு(ம்) மொய்த்துயிர் .. அழியாமல்

.. பொற்கழ லைத்தின(ம்) நச்சிம துத்திகழ்

.. .. புட்பமெ னத்தமிழ் .. புனைவேனே

இக்குத னைக்கரம் வைத்தும லர்க்கணை

.. .. இட்டவ னைப்பொடி .. செயுமீசா

.. இட்ட(ம்)மி குத்தம டக்கொடி யைப்புடை

.. .. யிற்பயில் வித்தருள் .. மணவாளா

செக்கர்வ னத்தைநி கர்த்தச டைப்புனல்

.. .. தெற்றிட வைத்திட .. வலதேவா

.. திட்டிய தக்கனெ ருத்தரி முக்கண

.. .. சிட்டர்க ளுக்கருள் .. புரிவோனே

குக்குட நற்கொடி பெற்றவன் அத்தமி

.. .. குத்ததி ருப்பெயர் .. உடையானே

.. குற்றம றத்தொழு பத்தர்ம னத்தின

.. .. கொச்சைவ யத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

பொக்கமும், உற்ற வினைத்தொடர் கொட்டிய

.. .. துக்கமு(ம்) மொய்த்து உயிர் .. அழியாமல்,

.. பொற்கழலைத் தின(ம்) நச்சி மதுத்-திகழ்

.. .. புட்பம் எனத் தமிழ் .. புனைவேனே;

இக்குதனைக் கரம் வைத்து மலர்க்கணை

.. .. இட்டவனைப் பொடி .. செயும் ஈசா;

.. இட்ட(ம்) மிகுத்த மடக்கொடியைப் புடை-

.. .. யிற்-பயில்வித்தருள் .. மணவாளா;

செக்கர்-வனத்தை நிகர்த்த சடைப்-புனல்

.. .. தெற்றிட வைத்திட .. வல-தேவா;

.. திட்டிய தக்கன் எருத்து-அரி முக்கண;

.. .. சிட்டர்களுக்கு அருள் .. புரிவோனே;

குக்குட நற்கொடி பெற்றவன் அத்த;

.. .. மிகுத்த திருப்பெயர் .. உடையானே;

.. குற்றமறத் தொழு பத்தர் மனத்தின;

.. .. கொச்சைவயத்து உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

பொக்கமும், உற்ற வினைத்தொடர் கொட்டிய துக்கமும் மொய்த்து உயிர் அழியாமல் - பொய்யும் வஞ்சகமும் பழவினைகளின் தொகுதி (குளவி போல் தொடர்ந்து கொட்டிப்) பொழிகின்ற துன்ப-வெள்ளமும் என்னைச் சூழ்ந்துகொள்ள அதனால் என் உயிர் அழிந்துவிடாமல்; (பொக்கம் - பொய்; வஞ்சகம்); (உறுதல் - பொருந்துதல்; அடைதல்); (கொட்டுதல் - தேள் குளவி முதலியன கொட்டுதல்; சொரிதல்); (துக்கம் - துன்பம்); (மொய்த்தல் - நெருங்கிச்சுற்றுதல். மூடுதல்);

பொற்கழலைத் தினம் நச்சி மதுத்-திகழ் புட்பம் எனத் தமிழ் புனைவேனே - உன் பொன் போன்ற திருவடியை நாள்தோறும் விரும்பித் தேன் நிறைந்த பூமாலை போலத் தமிழ்ப்-பாமாலை சூட்டுவேன்; (நச்சுதல் - விரும்புதல்); (புட்பம் - புஷ்பம் - பூ); (புனைதல் - அலங்கரித்தல்; செய்யுள் அமைத்தல்); (மதுத்திகழ் - மது - முற்றியலுகரம்; அதனைத் தொடர்ந்து வல்லினஒற்று மிகும்);

இக்குதனைக் கரம் வைத்து மலர்க்கணை இட்டவனைப் பொடி செயும் ஈசா - கரும்பை வில்லாகக் கையில் ஏந்தி மலர்க்கணை தொடுத்த மன்மதனைச் சாம்பலாக்கிய ஈசனே; (இக்கு - கரும்பு); (இடுதல் - அம்பு தொடுத்துவிடுதல்); (தசைதுறுந் தொக்கு - (காஞ்சீபுரம்) - திருப்புகழ் - "ஒற்றைக் கணை இட்டு எண்-திரிபுரம் சுட்டு"); (பொடி - சாம்பல்);

இட்டம் மிகுத்த மடக்கொடியைப் புடையில் பயில்வித்தருள் மணவாளா - மிகுந்த அன்பு உடையவளும் இளங்கொடி போன்றவளுமான உமையை ஒரு பக்கத்தில் தங்கவைத்து மகிழ்ந்த மணவாளனே; (இட்டம் - இஷ்டம் - அன்பு); (புடை - பக்கம்); (பயில்வித்தல் - தங்கவைத்தல்; பயில்தல் - தங்குதல்); (அப்பர் தேவாரம் - 6.4.2 - "படஅரவம் தடமார்பில் பயில்வித்தானே");

செக்கர் வனத்தை நிகர்த்த சடைப் புனல் தெற்றிட வைத்திட வல தேவா - சிவந்த காட்டைப் போன்ற சடையில் கங்கை அலைமோதுமாறு அதனைத் தடுத்துவைக்க வல்ல தேவனே; (செக்கர் - சிவப்பு); (தெற்றுதல் - தடைப்படுதல். மோதுதல்);

திட்டிய தக்கன் எருத்து அரி முக்கண – இகழ்ந்து பேசிய தக்கனது கழுத்தை (தலையை) வெட்டிய முக்கண்ணனே; (எருத்து - கழுத்து); (அரிதல் - அறுத்தல்; வெட்டுதல்);

சிட்டர்களுக்கு அருள் புரிவோனே - சிஷ்டர்களுக்கு (சான்றோர்களுக்கு) அருள்பவனே; (சிட்டர் - சிஷ்டர்; சான்றோர்);

குக்குட நற்கொடி பெற்றவன் அத்த – அழகிய கோழிக்கொடியை உடைய முருகனுக்குத் தந்தையே; (குக்குடம் - கோழி); (நல் - நன்மை - அழகு); (பெறுதல் - அடைதல்); (அத்தன் - தந்தை);

மிகுத்த திருப்பெயர் உடையானே - பல திருநாமங்களை உடையவனே;

குற்றம் அறத் தொழு பத்தர் மனத்தின – முறைப்படி வழிபாடு செய்யும் பக்தர்கள் மனத்தில் இருப்பவனே;

கொச்சைவயத்து உறை பெருமானே - கொச்சைவயம் என்ற பெயரையுடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே; (கொச்சைவயம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment