Tuesday, September 16, 2025

P.459 - வெண்ணெய்நல்லூர் - துள்ளு(ம்) மான்மழு

2018-12-01

P.459 - வெண்ணெய்நல்லூர்

-------------------------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.90.1 - மாசில் வீணையும்)

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

துள்ளு(ம்) மான்மழு சூலம் தரித்தவன்

பிள்ளை மாமதி சூடிய பிஞ்ஞகன்

வெள்ளை நீற்றினன் வெண்ணெய்நல் லூருறை

வள்ளல் வார்கழல் வாழ்த்தி மகிழ்மினே.


துள்ளும் மான், மழு, சூலம் தரித்தவன் - தாவும் மான், மழுவாள், திரிசூலம் இவற்றைக் கையில் தாங்கியவன்;

பிள்ளை-மா-மதி சூடிய பிஞ்ஞகன் - அழகிய இளந்திங்களைச் சூடியவன், பிஞ்ஞகன் என்ற திருநாமம் உடையவன்; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);

வெள்ளை நீற்றினன் - வெண்-திருநீற்றைப் பூசியவன்;

வெண்ணெய்நல்லூர் உறை வள்ளல் வார்கழல் வாழ்த்தி மகிழ்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற வள்ளலான சிவபெருமானது திருவடியை வாழ்த்தி இன்புறுங்கள்; (வார்-கழல் - நீண்ட கழல் அணிந்த திருவடி); (மின் - ஏவற்பன்மை விகுதி);


2)

ஓத நஞ்சினை உண்ட மிடற்றினன்

காதல் மாதிடம் காட்டிய கண்ணுதல்

வேத நாவினன் வெண்ணெய்நல் லூருறை

நாதன் நாமம் நவிற்றி மகிழ்மினே.


ஓத-நஞ்சினை உண்ட மிடற்றினன் - கடல்-விடத்தை உண்ட கண்டன்; (ஓதம் - கடல்); (மிடறு - கண்டம்);

காதல்-மாது இடம் காட்டிய கண்ணுதல் - அன்புடைய உமையை இடப்பக்கம் ஒரு பங்காகக் காட்டிய நெற்றிக்கண்ணன்;

வேத-நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;

வெண்ணெய்நல்லூர் உறை நாதன் நாமம் நவிற்றி மகிழ்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற தலைவனான சிவபெருமானது திருப்பெயரைச் சொல்லி இன்புறுங்கள்; (நவிற்றுதல் - சொல்தல்);


3)

நற்ப தத்தால் நமனை உதைத்தவன்

பொற்ப தந்தொழு(து) உம்பர்கள் போற்றிய

வெற்பு வில்லினன் வெண்ணெய்நல் லூருறை

அற்பு தன்தாள் அடைந்து மகிழ்மினே.


நற்பதத்தால் நமனை உதைத்தவன் - நல்ல திருவடியால் காலனை உதைத்தவன்;

பொற்பதம் தொழுது உம்பர்கள் போற்றிய வெற்பு-வில்லினன் - பொன்னடியை வணங்கிய தேவர்களால் துதிக்கப்பெற்றவன், மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (வெற்பு - மலை);

வெண்ணெய்நல்லூர் உறை அற்புதன் தாள் அடைந்து மகிழ்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற அற்புதனான சிவபெருமானது திருவடியைச் சரணடைந்து இன்புறுங்கள்;


4)

ஆல நீழல் அருமறை ஓதிய

சீலன் தீயன செய்யன் மிடற்றினில்

வேலை நஞ்சினன் வெண்ணெய்நல் லூருறை

சூல பாணியைச் சொல்லி மகிழ்மினே.


ஆலநீழல் அருமறை ஓதிய சீலன் - கல்லால-மரத்தின்கீழ் வேதங்களை உபதேசித்தவன்;

தீ அன செய்யன் - தீப் போன்ற செம்மேனி உடையவன்; (செய் - சிவப்பு);

மிடற்றினில் வேலை-நஞ்சினன் - கண்டத்தில் கடல்-விடத்தை அணிந்தவன்;

வெண்ணெய்நல்லூர் உறை சூலபாணியைச் சொல்லி மகிழ்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற சூலபாணியான சிவபெருமானது புகழையும் நாமத்தையும் கூறி இன்புறுங்கள்;


5)

நடமி டச்சுடு காடு நயந்தவன்

இட(ம்)ம டந்தையை ஏற்றவன் ஊர்தியா

விடையு கந்தவன் வெண்ணெய்நல் லூருறை

உடைய வன்பெயர் ஓதி மகிழ்மினே.


நடம் இடச் சுடுகாடு நயந்தவன் - திருநடம் செய்யும் இடமாகச் சுடுகாட்டை விரும்பியவன்; (நயத்தல் - விரும்புதல்);

இடம் மடந்தையை ஏற்றவன் - உமையை இடப்பாகமாக ஏற்றவன்; (மடந்தை - பெண்);

ஊர்தியா விடை உகந்தவன் - இடபத்தை வாகனமாக விரும்பியவன்; (ஊர்தியா - ஊர்தியாக);

வெண்ணெய்நல்லூர் உறை உடையவன் பெயர் ஓதி மகிழ்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற சுவாமியான சிவபெருமானது நாமத்தைச் சொல்லி இன்புறுங்கள்; (உடையவன் - சுவாமி);


6)

உரித்த ஆனை உரிவையைப் போர்வையாத்

தரித்த வன்கங்கைத் தண்புனல் தங்கிட

விரித்த வேணியன் வெண்ணெய்நல் லூருறை

உருத்தி ரன்பெயர் ஓதி மகிழ்மினே.


உரித்த ஆனை-உரிவையைப் போர்வையாத் தரித்தவன் - உரித்த யானைத்தோலைப் போர்வையாகப் போர்த்தவன்; (உரிவை - தோல்); (போர்வையா - போர்வையாக);

கங்கைத் தண்புனல் தங்கிட விரித்த வேணியன் - கங்கையின் குளிர்ந்த நீர் தங்கும்படி சடையை விரித்தவன்; (வேணி - சடை);

வெண்ணெய்நல்லூர் உறை உருத்திரன் பெயர் ஓதி மகிழ்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற ருத்ரன், சிவபெருமானது நாமத்தைச் சொல்லி இன்புறுங்கள்; (அப்பர் தேவாரம் - 6.90.5 - "உருத்திரனை உமாபதியை");


7)

வண்ண மாமலர் வாளி மதன்படக்

கண்ணைக் காட்டிய நெற்றியன் நற்றவன்

விண்ண வர்க்கிறை வெண்ணெய்நல் லூருறை

அண்ணல் பாதம் அடைந்து மகிழ்மினே.


வண்ண மாமலர் வாளி மதன் படக் கண்ணைக் காட்டிய நெற்றியன் - நிறமும் அழகும் பொருந்திய பூக்களை அம்புகளாக உடைய மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைக் காட்டியவன்; (வாளி - அம்பு); (மதன் - காமன்); (படுதல் - அழிதல்; சாதல்);

நற்றவன் - நல்ல தவவடிவினன்;

விண்ணவர்க்கு இறை - தேவதேவன்; (இறை - இறைவன்);

வெண்ணெய்நல்லூர் உறை அண்ணல் பாதம் அடைந்து மகிழ்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்ற தலைவனான சிவபெருமானது திருவடியைச் சரணடைந்து இன்புறுங்கள்;


8)

தரையி றங்கிய தன்னிர தங்கண்டு

வரையி டந்தவன் வாய்பத் தலறிட

விரலை வைத்தவன் வெண்ணெய்நல் லூருறை

உரகத் தாரன்பேர் ஓதி மகிழ்மினே.


தரை இறங்கிய தன் இரதம் கண்டு - (வான்வழியே பறந்து செல்லும்) தன் தேர் செல்லாமல் தரையில் இறங்கக் கண்டு;

வரை இடந்தவன் வாய் பத்து அலறிட விரலை வைத்தவன் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்து-வாய்களும் அலறும்படி விரலை ஊன்றியவன்; (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்);

வெண்ணெய்நல்லூர் உறை உரகத்-தாரன் பேர் ஓதி மகிழ்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்றவனும் பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவனுமான சிவபெருமானது நாமத்தைச் சொல்லி இன்புறுங்கள்; (உரகம் - பாம்பு); (தார் - மாலை);


9)

பன்றி அன்னப் பறவையாய் மாலயன்

அன்று தேடி அடிதொழ நின்றவன்

வென்றி ஏற்றினன் வெண்ணெய்நல் லூருறை

கொன்றை சூடியைக் கூறி மகிழ்மினே.


பன்றி அன்னப்-பறவையாய் மால் அயன் அன்று தேடி அடி தொழ நின்றவன் - பன்றியும் அன்னப்பறவையும் ஆகித் திருமாலும் பிரமனும் முன்னர் அடிமுடி தேடி வணங்கும்படி ஜோதியாகி நின்றவன்;

வென்றி-ஏற்றினன் - வெற்றி மிக்க இடபத்தை வாகனமாக உடையவன்; (வென்றி - வெற்றி); (அப்பர் தேவாரம் - 5.23.7 - "வென்றி ஏறுடை எங்கள் விகிர்தனே");

வெண்ணெய்நல்லூர் உறை கொன்றை சூடியைக் கூறி மகிழ்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்றவனும் கொன்றைமலரைச் சூடியவனுமான சிவபெருமானது புகழையும் நாமத்தையும் கூறி இன்புறுங்கள்;


10)

சந்த தம்பொய் தனைச்சொல் சழக்கரை

வந்து வந்துழல் வம்பரை நீங்குமின்

வெந்த நீற்றினன் வெண்ணெய்நல் லூருறை

எந்தை சேவடி ஏத்தி மகிழ்மினே.


சந்ததம் பொய்தனைச் சொல் சழக்கரை - எப்பொழுதும் பொய்யையே சொல்லும் தீயோர்களை; (சழக்கன் - தீயவன்);

வந்து வந்து உழல் வம்பரை நீங்குமின் - பிரசாரம் செய்வதற்காகப் பலமுறை வீட்டுவாயில்வரை வந்து அலைகின்ற வீணர்களைத், தம் வினைகளை நீங்க வழியின்றி மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து உழல்கின்ற வீணர்களை, விட்டு விலகுங்கள்; (வம்பன் - பயனற்றவன்; துஷ்டன்);

வெந்த நீற்றினன் - சுட்ட திருநீற்றினைப் பூசியவன்;

வெண்ணெய்நல்லூர் உறை எந்தை சேவடி ஏத்தி மகிழ்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்றவனும் எம் தந்தையுமான சிவபெருமானது சிவந்த திருவடியைப் போற்றி இன்புறுங்கள்;


11)

நாவ லூரரை ஆட்கொண்ட நாயகன்

காவல் ஆர்புர(ம்) மூன்றும் கணத்தினில்

வேவ நக்கவன் வெண்ணெய்நல் லூருறை

தேவ தேவனைச் சிந்தைசெய்(து) உய்ம்மினே.


நாவலூரரை ஆட்கொண்ட நாயகன் - திருநாவலூரில் அவதரித்தவரான சுந்தரரை (ஓர் ஓலையைக் காட்டி) அடிமை ஆக்கிக்கொண்ட தலைவன்; (ஆட்கொள்தல் - அடிமைகொள்ளுதல்); (நாயகன் - தலைவன்);

காவல் ஆர் புரம் மூன்றும் கணத்தினில் வேவ நக்கவன் - காவல் மிக்க முப்புரங்களும் ஒரு க்ஷணத்தில் வெந்து அழியும்படி சிரித்தவன்; (கணம் - க்ஷணம்); (நகுதல் - சிரித்தல்);

வெண்ணெய்நல்லூர் உறை தேவதேவனைச் சிந்தைசெய்து உய்ம்மினே - திருவெண்ணெய்நல்லூரில் உறைகின்றவனும் தேவதேவனுமான சிவபெருமானைத் தியானித்து உய்யுங்கள்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment