2018-11-18
T.211 - வக்கரை - வட்டமெனத் தொடர்
---------------------------------
(வண்ணவிருத்தம்;
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன .. தனதான)
(பத்தர்க ணப்ரிய - திருப்புகழ் - திருசெங்கோடு)
வட்டமெ னத்தொடர் இப்பிற விப்பிணி
.. .. வைத்திய முக்கண .. அமுதாக
.. மைத்தவி டத்தைம டுத்துமி டற்றினில்
.. .. வைத்தவு னைத்தொழ .. மறவேனே
எட்டுரு விற்றிகழ் அத்தவெ னத்தினம்
.. .. எட்டுவ கைப்படு(ம்) .. மலர்பாதம்
.. இட்டுவ ழுத்தும றைச்சிறு வர்க்கென
.. .. எட்டிந மற்செறு .. கழலானே
நட்டமி டற்கிரு ளிற்சுட லைத்தல(ம்)
.. .. நச்சிய நித்திய .. பலதேவர்
.. நற்கழ லைப்பர வப்பரி வுற்றொரு
.. .. நட்பிலர் முப்புரம் .. எரிவீரா
மட்டல ரைப்புனை பொற்சடை யிற்புனல்
.. .. வைத்திடும் அற்புத .. பொழிலாரும்
.. வக்கரை யிற்றொழு பத்தர்ம னத்துயர்
.. .. வற்றவ ளித்திடு .. பெருமானே.
பதம் பிரித்து:
வட்டம் எனத் தொடர் இப்-பிறவிப்பிணி
.. .. வைத்திய, முக்கண, .. அமுதாக
.. மைத்த விடத்தை மடுத்து மிடற்றினில்
.. .. வைத்த உனைத் தொழ .. மறவேனே;
"எட்டு-உருவில் திகழ் அத்த" எனத் தினம்
.. .. எட்டு-வகைப்படு(ம்) .. மலர் பாதம்
.. இட்டு வழுத்து மறைச்சிறுவர்க்கென
.. .. எட்டி நமற்-செறு .. கழலானே;
நட்டம்-இடற்கு இருளிற் சுடலைத்தல(ம்)
.. .. நச்சிய நித்திய; .. பல தேவர்
.. நற்கழலைப் பரவப் பரிவுற்று, ஒரு
.. .. நட்பிலர் முப்புரம் .. எரி-வீரா;
மட்டலரைப் புனை பொற்சடையிற் புனல்
.. .. வைத்திடும் அற்புத; .. பொழில் ஆரும்
.. வக்கரையில் தொழு பத்தர் மனத்-துயர்
.. .. வற்ற அளித்திடு .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;
வட்டம் எனத் தொடர் இப்பிறவிப்பிணி வைத்திய – முடிவின்றி வட்டம் போலத் தொடர்கின்ற இந்தப் பிறவிநோய்க்கு வைத்தியனே;
முக்கண – முக்கண்ணனே;
அமுதாக மைத்த விடத்தை மடுத்து மிடற்றினில் வைத்த உனைத் தொழ மறவேனே - அமுதம் போலக் கரிய நஞ்சை உண்டு கண்டத்தில் வைத்த உன்னை வழிபட மறக்கமாட்டேன்; (அமுதாக - 1. அமுதம் போல; 2. அமுதம் உண்டாக); (மைத்த – கரிய); (மடுத்தல் - உண்ணுதல்); (மிடறு - கண்டம்);
"எட்டு உருவில் திகழ் அத்த" எனத் - "ஐம்பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எண்வடிவங்களைக் கொண்ட தந்தையே" என்று போற்றி;
தினம் எட்டு வகைப்படும் மலர் பாதம் இட்டு வழுத்து மறைச்சிறுவர்க்கென எட்டி நமற் செறு கழலானே - நாள்தோறும் அஷ்டபுஷ்பங்களைத் திருவடியில் இட்டு வழிபடும் மார்க்கண்டேயருக்காகக் கூற்றுவனை எட்டி உதைத்த திருப்பாதனே; (அஷ்டபுஷ்பம் - அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு); (செறுதல் - அழித்தல்); (நமற் செறு = நமனைச் செறு; இரண்டாம்-வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள்தெளிவு கருதி ன் என்பது ற் என்று திரியும்); (அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்டலர் இடுவார் வினை மாயுமால்" - எட்டு நாண்மலர் - அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண்வகைப் புதிய மலர்கள். அவை - புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய பூக்கள்; அகப்பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு);
நட்டம் இடற்கு இருளில் சுடலைத்தலம் நச்சிய நித்திய – திருக்கூத்து ஆடுவதற்கு இருளில் சுடுகாட்டை விரும்பிய அழிவற்றவனே; (நச்சுதல் - விரும்புதல்);
பல தேவர் நற்கழலைப் பரவப் பரிவு உற்று ஒரு நட்பிலர் முப்புரம் எரி-வீரா - பல தேவர்களும் நன்மையருளும் திருவடியைப் போற்ற அவர்களுக்கு இரங்கிச், சிறிதும் நட்பு இல்லாத அசுரர்களது முப்புரங்களையும் எரித்த வீரனே;
மட்டு-அலரைப் புனை பொற்சடையில் புனல் வைத்திடும் அற்புத – மணமலர்களை அணிந்த பொன் போன்ற சடையில் கங்கையை வைத்த அற்புதனே; (மட்டு - தேன்; வாசனை); (அலர் - பூ);
பொழில் ஆரும் வக்கரையில் தொழு பத்தர் மனத்துயர் வற்ற அளித்திடு பெருமானே - சோலை நிறைந்த திருவக்கரையில் வழிபடும் பக்தர்களது மனக்கஷ்டங்கள் தீர வரம் அருள்கின்ற பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment