2018-09-21
P.452 - அவிநாசி
-------------------------------
(வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")
* தேவாரத்தில் - புக்கொளியூர் அவிநாசி;
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
மறையோ துமரும் பொருளானாய்
பிறைவாழ் புரிசெஞ் சடையானே
அறையார் கழலாய் அவிநாசீ
இறைவா இடர்தீர்த் தருளாயே.
மறை ஓதும் அரும்பொருள் ஆனாய் - வேதங்கள் பாடுகின்ற அரிய பொருளே;
பிறை வாழ் புரி-செஞ்சடையானே - பிறை வாழ்கின்ற முறுக்கிய செஞ்சடையை உடையவனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);
அறை ஆர் கழலாய் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியினனே; (ஆர்த்தல் - ஒலித்தல்);
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
இறைவா, இடர் தீர்த்து அருளாயே - இறைவனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
2)
புர(ம்)மூன் றெரியிற் புகுமாறு
வரையே சிலையா வளைவித்தாய்
அரவார் சடையாய் அவிநாசீ
அரனே இடர்தீர்த் தருளாயே.
புரம் மூன்று எரியில் புகுமாறு வரையே சிலையா வளைவித்தாய் - முப்புரங்களும் தீயில் புகுந்து அழியும்படி மலையையே வில்லாக வளைத்தவனே; (வரை - மலை); (சிலை - வில்);
அரவு ஆர் சடையாய் - சடையில் பாம்பை அணிந்தவனே; (ஆர்தல் - அணிதல்);
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
அரனே, இடர் தீர்த்து அருளாயே - ஹரனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
3)
கலைமான் மறியோர் கரமேந்தீ
தலைமா லையினாய் சடைதன்னில்
அலையார் நதியாய் அவிநாசீ
தலைவா தமியேற் கருளாயே.
கலைமான்-மறி ஓர் கரம் ஏந்தீ - கலைமான்-கன்றை ஒரு கையில் ஏந்தியவனே;
தலைமாலையினாய் - தலைமாலை (மண்டையோட்டுமாலை) அணிந்தவனே;
சடைதன்னில் அலை ஆர் நதியாய் - சடையில் அலை நிறைந்த (/அலை ஒலிக்கின்ற) கங்கையை அணிந்தவனே; (ஆர்தல் - நிறைதல்; ஆர்த்தல் - ஒலித்தல்);
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
தலைவா, தமியேற்கு அருளாயே - தலைவனே, கதியற்ற எனக்கு அருள்வாயாக;
4)
அணையார் அரணம் படவன்றோர்
கணைதொட் டவனே புனலுக்கோர்
அணையாம் சடையாய் அவிநாசீ
துணைவா துயர்தீர்த் தருளாயே.
அணையார் அரணம் பட அன்று ஓர் கணை தொட்டவனே - பகைவர்களது மூன்று கோட்டைகளும் அழியும்படி முன்பு ஒரு கணையை எய்தவனே; (அணையார் - பகைவர்); (படுதல் - அழிதல்);
புனலுக்கு ஓர் அணை ஆம் சடையாய் - கங்கைநீரைச் சடையில் தடுத்தவனே;
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
துணைவா, துயர் தீர்த்து அருளாயே - துணைவனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
5)
மழவெள் விடையாய் மதன்நீறாய்
விழவன் றுநுதல் விழிசெய்தாய்
அழலன் னவனே அவிநாசீ
தொழுமென் துயர்தீர்த் தருளாயே.
மழ-வெள் விடையாய் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனே;
மதன் நீறாய் விழ அன்று நுதல் விழிசெய்தாய் - மன்மதன் சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவனே;
அழல் அன்னவனே - தீப் போன்ற செம்மேனியனே;
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
தொழும் என் துயர் தீர்த்து அருளாயே - உன்னைத் தொழும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
6)
முனமால் அடிநான் மறையோதீ
வனமென் முலையாள் மணவாளா
அனலேந் தழகா அவிநாசீ
அனகா இடர்தீர்த் தருளாயே.
முனம் ஆல்அடி நான்மறை ஓதீ - முன்பு கல்லால-மரத்தின்கீழ் நால்வேதங்களை ஓதியவனே;
வன-மென்-முலையாள் மணவாளா - அழகிய மென்முலைகளையுடைய உமைக்குக் கணவனே; (வனம் - அழகு);
அனல் ஏந்து அழகா - கையில் நெருப்பை ஏந்திய அழகனே;
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
அனகா, இடர் தீர்த்து அருளாயே - மாசில்லாதவனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (அனகன் - அநகன் - பாவங்கள் அற்றவன்; குற்றமற்றவன்); (अनघ a. 1 Sinless, innocent; -2 Free from blame, faultless, handsome;)
7)
கமழ்மா மலரிட் டவர்வாழக்
குமைகூற் றுவனைச் செறுகாலா
அமரர்க் கிறைவா அவிநாசீ
அமலா இடர்தீர்த் தருளாயே.
கமழ் மா மலர் இட்டவர் வாழக், குமை-கூற்றுவனைச் செறு-காலா - வாசமலர்களைத் தூவி வழிபாடு செய்தவரான மார்க்கண்டேயர் வாழுமாறு, கொல்லும் கூற்றுவனை அழித்த காலகாலனே; (குமைத்தல் - அழித்தல்); (செறுதல் - அழித்தல்);
அமரர்க்கு இறைவா - தேவர்கள் தலைவா;
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
அமலா, இடர் தீர்த்து அருளாயே - தூயனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
8)
எண்ணா தருவெற் பெறிமூடன்
புண்ணா கிடவோர் விரல்வைத்தாய்
வெண்ணீ றணிவாய் அவிநாசீ
அண்ணா இடர்தீர்த் தருளாயே.
எண்ணாது அருவெற்பு எறி மூடன் புண் ஆகிட ஓர் விரல் வைத்தாய் - சிறிதும் யோசனை செய்யாமல் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற அறிவற்ற இராவணன் மிகவும் புண்படுமாறு ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவனே;
வெண்ணீறு அணிவாய் - வெண்-திருநீற்றைப் பூசியவனே;
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
அண்ணா, இடர் தீர்த்து அருளாயே - தலைவனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "அண்ணா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே?"); ("அண்ணால்" என்பது, "அண்ணா" என மருவிற்று);
9)
அடிமால் முடிநான் முகன்நேடும்
படிநீள் எரியே படநாகம்
முடிமேல் அணிவாய் அவிநாசீ
அடிகேள் இடர்தீர்த் தருளாயே.
அடி மால் முடி நான்முகன் நேடும்படி நீள் எரியே - திருமால் அடியையும் பிரமன் முடியையும் தேடும்படி எல்லையின்றி நீண்ட ஜோதியே; (நேடுதல் - தேடுதல்);
படநாகம் முடிமேல் அணிவாய் - படம் திகழும் நாகப்பாம்பைத் திருமுடிமேல் அணிந்தவனே;
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
அடிகேள், இடர் தீர்த்து அருளாயே - சுவாமீ, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (அடிகேள் - அடிகள் என்பதன் விளி; அடிகள் - சுவாமி); (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "அடிகேள் உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே?");
10)
மெய்யில் திருநீ றணியாத
பொய்யர்க் கிலனாம் புகழாளா
மையார் மிடறா அவிநாசீ
ஐயா இடர்தீர்த் தருளாயே.
மெய்யில் திருநீறு அணியாத பொய்யர்க்கு இலன் ஆம் புகழாளா - உடம்பில் திருநீற்றைப் பூசாத பொய்யர்களுக்கு அருள் இல்லாதவனே, புகழ் உடையவனே;
மை ஆர் மிடறா - நீலகண்டனே; (மை - கருநிறம்);
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
ஐயா, இடர் தீர்த்து அருளாயே - தலைவனே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
11)
பிணிநோய் நரையென் றுமிலாதாய்
மணியார் மிடறா மழுவாளா
அணிவான் மதியாய் அவிநாசீ
பணிவேன் இடர்தீர்த் தருளாயே.
பிணி நோய் நரை என்றும் இலாதாய் - பந்தம், நோய், மூப்பு இவையெல்லாம் எந்நாளும் இல்லாதவனே;
மணி ஆர் மிடறா - நீலகண்டனே;
மழுவாளா - மழுவாளை ஏந்தியவனே;
அணி வான்-மதியாய் - அழகிய இள-வெண்-திங்களை அணிந்தவனே; (அணி - அழகு); (வான்மதி - 1. வான் மதி (வானில் இருக்கும் சந்திரன்); 2. வால் மதி - வெண்திங்கள்); (வால் - இளமை; தூய்மை; வெண்மை);
அவிநாசீ - அழிவற்றவனே; அவிநாசி என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;
பணிவேன் இடர் தீர்த்து அருளாயே - உன்னை வழிபடும் என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment