Wednesday, September 10, 2025

P.451 - புறவம் (காழி) - அற்பமுமாய் அண்டமுமாம்

2018-09-13

P.451 - புறவம் (காழி)

-------------------------------

(தரவு கொச்சகக் கலிப்பா - தானதானா தானதானா தானன தானதனா)

(சம்பந்தர் தேவாரம் - 1.52.1 - "மறையுடையாய் தோலுடையாய்")


1)

அற்பமுமாய் அண்டமுமாம் அற்புத னேஅமலா

கற்சிலையால் மூவெயிலைக் கனலெழ எய்தவனே

பொற்சடையிற் புனலணிந்து புறவம் அமர்ந்தவனே

நற்பதமே போற்றுகின்றேன் நலிவினை மாய்த்தருளே.


அற்பமுமாய் அண்டமுமாம் அற்புதனே அமலா - மிக நுண்ணியனாயும் மிகப் பெரியவனாயும் உள்ள அற்புதனே; தூயவனே;

கற்சிலையால் மூ-எயிலைக் கனல் எழ எய்தவனே - மலையை வில்லாக ஏந்தி முப்புரங்களைச் சாம்பலாகும்படி எய்தவனே; (கல் - மலை); (சிலை - வில்); (எயில் - கோட்டை);

பொற்சடையில் புனல் அணிந்து புறவம் அமர்ந்தவனே - பொன் போன்ற சடையில் கங்கையை அணிந்து, புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் விரும்பி உறைகின்றவனே; (புறவம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று); (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்);

நற்பதமே போற்றுகின்றேன் நலிவினை மாய்த்தருளே - உன் நல்ல திருவடிகளையே வழிபடுகின்றேன்; என் துன்பங்களை ( / என்னை வருத்துகின்ற வினைகளை) அழித்து அருள்வாயாக; (நலிவு - துன்பம்); (நலி வினை - நலிக்கின்ற வினை - துன்புறுத்துகின்ற வினை);


* குறிப்பு : இந்த முதற்பாடலில் உள்ள வேண்டுகோளை இப்பதிகத்தின் 9-ஆம் பாடல்வரை உள்ள எல்லாப் பாடல்களிலும் இயைத்துப் பொருள்கொள்க;


2)

நாதனெந்தை என்னுமன்பர் நாடு வரந்தருவாய்

வேதனிந்தை செய்தபோது விரல்கொடு சென்னிகொய்தாய்

மாதணைந்த மார்பின்மீது மாசுண மாலையினாய்

போதணிந்த செஞ்சடையாய் புறவம் அமர்ந்தவனே.


"நாதன் எந்தை" என்னும் அன்பர் நாடு வரம் தருவாய் - "தலைவன், எம் தந்தை" என்றெல்லாம் போற்றி வணங்கும் பக்தர்கள் விரும்பும் வரம் அளிப்பவனே;

வேதன் நிந்தை செய்தபோது விரல்கொடு சென்னி கொய்தாய் - பிரமன் ஆணவத்தோடு பேசியபோது அவன் தலைகளில் ஒன்றை விரலால் கிள்ளிக் கொய்தவனே; (வேதன் - பிரமன்);

மாது அணைந்த மார்பின்மீது மாசுண மாலையினாய் - உமையை ஒரு பங்காக உடையவனே; மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனே; (மாசுணம் - பாம்பு);

போது அணிந்த செஞ்சடையாய் - பூக்களைச் சிவந்த சடையில் அணிந்தவனே; (போது - பூ);

புறவம் அமர்ந்தவனே - புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் விரும்பி உறைகின்றவனே;


3)

கள்ளிருக்கும் மலர்கள்தூவிக் கைதொழும் அன்பர்கள்வான்

உள்ளிருக்க நல்கவல்லாய் ஒள்ளிய மாமதியும்

வெள்ளெருக்கும் விரவுகின்ற வேணியில் நீருடையாய்

புள்ளொலிக்கும் சோலைசூழ்ந்த புறவம் அமர்ந்தவனே.


கள் இருக்கும் மலர்கள் தூவிக் கைதொழும் அன்பர்கள் வான் உள் இருக்க நல்க வல்லாய் - மது நிறைந்த பூக்களைத் தூவிக் கைகூப்பி வழிபடும் பக்தர்கள் சிவலோகத்தின் உள்ளே இருக்கும்படி அருள்பவனே;

ஒள்ளிய மாமதியும் வெள்ளெருக்கும் விரவுகின்ற வேணியில் நீர் உடையாய் - ஒளியுடைய அழகிய சந்திரனும் வெள்ளெருக்க-மலரும் திகழும் சடையில் கங்கையை உடையவனே;

புள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த புறவம் அமர்ந்தவனே - பறவைகள் ஒலிக்கின்ற பொழில் சூழ்ந்த, புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் விரும்பி உறைகின்றவனே; (புள் - பறவை);


4)

சீர்மலிந்த நாமமோதிச் சேவடி போற்றியவர்

ஏர்மலிந்த இன்பவானம் ஏற அருள்புரிவாய்

கார்மலிந்த ஆலகாலம் கருதி அயின்றவனே

பூமலிந்த சோலைசூழ்ந்த புறவம் அமர்ந்தவனே.


சீர் மலிந்த நாமம் ஓதிச் சேவடி போற்றியவர் ஏர் மலிந்த இன்ப-வானம் ஏற அருள்புரிவாய் - நன்மை மிக்க திருப்பெயரை ஓதி உன் சேவடியை வழிபட்ட அன்பர்கள் அழகிய, பேரின்பச் சிவலோகம் அடைய அருள்பவனே;

கார் மலிந்த ஆலகாலம் கருதி அயின்றவனே - கருமை மிக்க ஆலகாலத்தை விரும்பி உண்டவனே; (கருதுதல் - விரும்புதல்); (அயில்தல் - உண்ணுதல்);

பூ மலிந்த சோலை சூழ்ந்த புறவம் அமர்ந்தவனே - பூக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த, புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் விரும்பி உறைகின்றவனே;


5)

நாநிறைந்த அஞ்செழுத்தால் நாள்தொறும் ஏத்தியவர்

மாநிறைந்த வானவாழ்வு மகிழ அருள்பவனே

தேனிறைந்த கொன்றைவன்னி திங்கள் அணிந்தவனே

பூநிறைந்த சோலைசூழ்ந்த புறவம் அமர்ந்தவனே.


நா நிறைந்த அஞ்செழுத்தால் நாள்தொறும் ஏத்தியவர் மா நிறைந்த வான-வாழ்வு மகிழ அருள்பவனே - வாய் நிறையத் திருவைந்தெழுத்தைத் தினமும் சொல்லி வழிபடும் பக்தர்கள் திரு மிக்க சிவலோக வாழ்வு பெற்று மகிழும்படி அருள்பவனே; (மா - அழகு; செல்வம்; பெருமை);

தேன் நிறைந்த கொன்றை வன்னி திங்கள் அணிந்தவனே - தேன் மிக்க கொன்றைமலர், வன்னியிலை, பிறை இவற்றையெல்லாம் அணிந்தவனே;

பூ நிறைந்த சோலை சூழ்ந்த புறவம் அமர்ந்தவனே - பூக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த, புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் விரும்பி உறைகின்றவனே;


6)

நாக்கொடுநன் னாமமென்றும் நச்சி நவின்றவரைத்

தாக்கவரும் வினையையெல்லாம் சாய்த்துயர் வானருள்வாய்

நீக்கமற எவ்விடத்தும் நிறைந்த பரம்பொருளே

பூக்களிடை வண்டுறங்கும் புறவம் அமர்ந்தவனே.


நாக்கொடு நன்னாமம் என்றும் நச்சி நவின்றவரைத் தாக்கவரும் வினையையெல்லாம் சாய்த்து உயர்-வான் அருள்வாய் - நாக்கால் நல்ல நாமத்தைத் தினமும் அன்போடு சொல்லும் அடியவர்களைத் தாக்க வரும் வினைகளை அழித்து அவர்களுக்கு உயர்ந்த வானுலக வாழ்வை அருள்பவனே; (நச்சுதல் - விரும்புதல்); (நவில்தல் - சொல்தல்);

நீக்கம் அற எவ்விடத்தும் நிறைந்த பரம்பொருளே - எங்கும் வியாபித்து இருக்கும் பரம்பொருள் ஆனவனே;

பூக்களிடை வண்டு உறங்கும் புறவம் அமர்ந்தவனே - சோலைகளில் பூக்களில் மது உண்டு வண்டு உறங்குகின்ற, புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் விரும்பி உறைகின்றவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.84.3 - "நறுமலர் அல்லிபுல்லி ஒலிவண் டுறங்கு நனிபள்ளி");


7)

நன்மலர்கள் கழலிலிட்டு நாளும் நினைந்தவர்தம்

முன்வினைகள் அவையறுப்பாய் மூவிலை வேலுடையாய்

புன்சடையிற் புனலொளித்தாய் பொடியணி மேனியனே

பொன்விளையும் வயலணிந்த புறவம் அமர்ந்தவனே.


நன்மலர்கள் கழலில் இட்டு நாளும் நினைந்தவர்தம் முன்வினைகள் அவை அறுப்பாய் - சிறந்த பூக்களை உன் பாதத்தில் தூவித் தினமும் தியானித்து வழிபடுபவர்களது பழவினைகளைத் தீர்ப்பவனே;

மூவிலைவேல் உடையாய் - திரிசூலத்தை ஏந்தியவனே;

புன்சடையில் புனல் ஒளித்தாய் - செஞ்சடையில் கங்கையை ஒளித்தவனே;

பொடி அணி மேனியனே - திருமேனிமேல் திருநீற்றைப் பூசியவனே;

பொன் விளையும் வயல் அணிந்த புறவம் அமர்ந்தவனே - மிகச் செழிப்புடைய வயல்கள் சூழ்ந்த, புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் விரும்பி உறைகின்றவனே;


8)

தென்னிலங்கை மன்னவன்றன் சிரமொரு பத்தடர்த்தாய்

வன்னியங்கை ஏந்துமீசா மாதொரு பங்கவென்று

பன்னியங்கை கூப்புமன்பர் பாவம் அறுப்பவனே

பொன்னிலங்கு கொன்றைசூடிப் புறவம் அமர்ந்தவனே.


"தென்-இலங்கை மன்னவன்-தன் சிரம் ஒரு பத்து அடர்த்தாய் - "அழகிய இலங்கைக்கு மன்னனான இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கியவனே; (தென் - அழகு)

வன்னி அங்கை ஏந்தும் ஈசா - தீயைக் கையில் ஏந்தும் ஈசனே; (வன்னி - நெருப்பு);

மாது ஒரு பங்க" என்று - உமையொரு பங்கனே" என்று;

பன்னி, அங்கை கூப்பும் அன்பர் பாவம் அறுப்பவனே - துதிகள் பாடிக், கைகூப்பி வழிபடும் பக்தர்களது பாவங்களைத் தீர்ப்பவனே; (பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்);

பொன் இலங்கு கொன்றை சூடிப் புறவம் அமர்ந்தவனே - அழகிய கொன்றைமலரைச் சூடிப், புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் விரும்பி உறைகின்றவனே; (பொன் - அழகு);


9)

அகழ்ந்துமாயன் உயர்ந்துவேதன் அடிமுடி தேடநின்றாய்

இகழ்ந்தமாமன் வேள்விசெற்றாய் இளமதி இண்டையெனத்

திகழ்ந்தவேணி மீதுகொன்றை சீறர வம்புனைவாய்

புகழ்ந்துவானோர் போற்றுமாறு புறவம் அமர்ந்தவனே.


அகழ்ந்து மாயன் உயர்ந்து வேதன் அடிமுடி தேட நின்றாய் - திருமால் பன்றி ஆகி அகழ்ந்தும், பிரமன் அன்னம் ஆகி உயர்ந்தும், உன் அடிமுடியைத் தேடுமாறு எல்லையற்ற ஜோதிவடிவில் நின்றவனே;

இகழ்ந்த மாமன் வேள்வி செற்றாய் - உன்னை இகழ்ந்த தக்கன் செய்த வேள்வியை அழித்தவனே; (செறுதல் - அழித்தல்);

இளமதி இண்டை எனத் திகழ்ந்த வேணி மீது கொன்றை சீறு-அரவம் புனைவாய் - இண்டைமாலை போல இளம்பிறை திகழும் சடையின்மேல் கொன்றைமலரையும் சீறும் நாகத்தையும் அணிபவனே;

புகழ்ந்து வானோர் போற்றுமாறு புறவம் அமர்ந்தவனே - தேவர்கள் உன்னை வழிபடுமாறு, புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் விரும்பி உறைகின்றவனே;


10)

துரிசுடைய வஞ்சநெஞ்சர் சொற்களில் உண்மையிலை

எரிசுடர்போல் மேனியனே என்றுளம் நெக்குருகும்

பரிசுடையார் பாவமெலாம் பாற அருள்புரிவான்

புரிசடையில் புனலொளித்துப் புறவம் அமர்ந்தவனே.


துரிசு உடைய வஞ்ச-நெஞ்சர் சொற்களில் உண்மை இலை - குற்றம் மிக்க வஞ்சகர்கள் பேசும் வார்த்தைகளில் உண்மை இல்லை;

எரி-சுடர்போல் மேனியனே என்று உளம் நெக்கு-உருகும் பரிசு உடையார் பாவம் எலாம் பாற அருள்புரிவான் - எரிகின்ற தீப் போன்ற செம்மேனியனே என்று உள்ளம் நெகிழ்ந்து உருகும் பக்தி உடையவர்களது பாவங்களெல்லாம் அழிய அருள்செய்பவன்; (நெகுதல் - நெகிழ்தல்); (பரிசு - தன்மை); (பாறுதல் - அழிதல்);

புரிசடையில் புனல் ஒளித்துப் புறவம் அமர்ந்தவனே - முறுக்கிய சடையில் கங்கையை அடைத்துப், புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் விரும்பி உறைகின்ற சிவபெருமான்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);


11)

பரவிநித்தல் போற்றுகின்ற பத்தர் அவர்க்கிரங்கி

வர(ம்)மிகுத்து நல்கவல்லான் நரைவிடை ஊர்தியினான்

உர(ம்)மிகுத்த அவுணர்மூவர் உறைதரு வல்லரணார்

புரமெரிக்க மலைவளைத்தான் புறவம் அமர்ந்தவனே.


பரவி நித்தல் போற்றுகின்ற பத்தர் அவர்க்கு இரங்கி வரம் மிகுத்து நல்க வல்லான் - தினமும் துதிகள் பாடிப் போற்றுகின்ற பக்தர்களுக்கு இரங்கி அவர்களுக்கு நிறைய வரங்கள் அளிப்பவன்;

நரைவிடை ஊர்தியினான் - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்; (நரை - வெண்மை);

உரம் மிகுத்த அவுணர் மூவர் உறைதரு வல்-அரண் ஆர் புரம் எரிக்க மலைவளைத்தான் - வலிமை மிக்க மூன்று அசுரர்கள் வாழ்ந்த வலிய கோட்டை பொருந்திய முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்தவன்; (உரம் - வலிமை); (அவுணர் - அசுரர்); (அரண் - கோட்டை);

புறவம் அமர்ந்தவனே - புறவம் என்ற பெயரை உடைய சீகாழியில் அப்பெருமான் விரும்பி உறைகின்றான்; அவனை வழிபட்டு உய்வோம் என்பது குறிப்பு; (- ஈற்றசை);


பிற்குறிப்பு - யாப்புக்குறிப்பு:

இந்தப் பாடல் அமைப்பைக் கலிவிருத்தம் என்றோ தரவு கொச்சகக் கலிப்பா என்றோ கருதலாம்.

  • இப்பாடலின் அடிகளின் அமைப்பைத் - "தானதானா - தானதானா - தானன தானதனா" - என்று மூன்று பகுதிகளாக நோக்கலாம்.

  • 1, 2-ஆம் சீர்கள் - "தானதானா" - என்பது தானதனா, / தனனதானா / தனதனனா என்றெல்லாம் வரக்கூடும்.

  • 3-ஆம் சீர் - "தானன" - என்பது தனதன / தான / தனன என்றெல்லாம் வரக்கூடும். தான / தனன என்று மாச்சீராக வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்; 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளை;

  • 4-ஆம் சீர் - "தானதனா" - இது தானானா / தனதனனா / தனதானா என்றெல்லாம் வரக்கூடும்.

சம்பந்தர் தேவாரம் 1.47 - 1.53 பதிகங்கள் - இந்த அமைப்பை உடையன. உதாரணமாக - 1.52.3 -

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத

என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற் கூற்றுதைத்த

பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்

நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment