Tuesday, September 16, 2025

P.460 - இடையாறு - பாரோர் பரவி

2018-12-02

P.460 - இடையாறு

-------------------------------

(வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")


1)

பாரோர் பரவிப் பணிசெய்யத்

தீரா வினைதீர்த் தருளீசன்

நீரார் சடையான் இடமென்பர்

ஏரார் வயல்சூழ் இடையாறே.


பாரோர் பரவிப் பணிசெய்யத் தீரா வினை தீர்த்து அருள் ஈசன் - உலகோர் போற்றி வழிபாடு செய்ய, அவர்களது தீராத வினையைத் தீர்த்து அருளும் ஈசன்; (பரவுதல் - துதித்தல்);

நீர் ஆர் சடையான் இடம் என்பர் - கங்கைச்சடையனான சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது;

ஏர் ஆர் வயல் சூழ் இடையாறே - அழகிய வயல் சூழ்ந்த திரு-இடையாறு; (ஏர் - அழகு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);


2)

நலமார் தமிழால் அடிபோற்றும்

உலகோர் கலிதீர்த் தருளீசன்

மலையான் மகள்கோன் இடமென்பர்

இலையார் பொழில்சூழ் இடையாறே.


நலம் ஆர் தமிழால் அடி போற்றும் உலகோர் கலி தீர்த்து அருள் ஈசன் - நன்மை மிக்க தமிழான தேவாரம் திருவாசகம் பாடித் திருவடியை வழிபடும் மக்களது துன்பத்தைத் தீர்த்து அருளும் ஈசன்; (கலி - துன்பம்; வறுமை);

மலையான்-மகள் கோன் இடம் என்பர் - மலைமகள் கணவனான சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது;

இலை ஆர் பொழில் சூழ் இடையாறே - இலை நிறைந்த சோலை சூழ்ந்த திரு-இடையாறு;


3)

அழியாப் புகழார் அரன்நெற்றி

விழியான் தொழுவார் துயர்தீர்த்தல்

தொழிலா உடையான் இடமென்பர்

எழிலார் வயல்சூழ் இடையாறே.


அழியாப் புகழ் ஆர் அரன் - அழியாத புகழ் பொருந்திய ஹரன்;

நெற்றி-விழியான் - நெற்றிக்கண்ணன்; (பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - "நெற்றிவிழியான் மொழிய நின்ற நிகரில்லான்");

தொழுவார் துயர் தீர்த்தல் தொழிலா உடையான் இடம் என்பர் - தொழும் பக்தர்களது துயரத்தைத் தீர்க்கும் தொழிலை உடையவன் உறைகின்ற தலம் ஆவது; (தொழிலா - தொழிலாக; கடைக்குறை விகாரம்); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே");

எழில் ஆர் வயல் சூழ் இடையாறே - அழகிய வயல் சூழ்ந்த திரு-இடையாறு;


4)

வாரார் முலையாள் மணவாளன்

தாரா அரவைத் தரிமார்பன்

கூரார் மழுவான் இடமென்பர்

ஏரார் வயல்சூழ் இடையாறே.


வார் ஆர் முலையாள் மணவாளன் - கச்சணிந்த முலைகளையுடைய உமைக்குக் கணவன்;

தாரா அரவைத் தரி மார்பன் - மாலையாகப் பாம்பை மார்பில் தாங்கியவன்; (தாரா – தாராக; தார் - மாலைவகை);

கூர் ஆர் மழுவான் இடம் என்பர் - கூர்மை பொருந்திய மழுவை ஏந்திய சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது;

ஏர் ஆர் வயல் சூழ் இடையாறே - அழகிய வயல் சூழ்ந்த திரு-இடையாறு;


5)

அலையார் கடல்நஞ் சமுதுண்டான்

தலையோர் கலனாப் பலிதேர்வான்

நிலையா உறையும் இடமென்பர்

இலையார் பொழில்சூழ் இடையாறே.


அலை ஆர் கடல்-நஞ்சு அமுதுண்டான் - அலை நிறைந்த கடலில் தோன்றிய ஆலகாலத்தை அமுதாக உண்டவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.37.4 - "இடியார் கடனஞ் சமுதுண்டு");

தலை ஓர் கலனாப் பலி தேர்வான் - பிரமனது மண்டையோட்டையே ஒரு கலனாகக் கொண்டு பிச்சை ஏற்பவன்; (கலன் - பாத்திரம்);

நிலையா உறையும் இடம் என்பர் - அப்பெருமான் நீங்காமல் உறைகின்ற தலம் ஆவது; (நிலையா - நிலையாக);

இலை ஆர் பொழில் சூழ் இடையாறே - இலை நிறைந்த சோலை சூழ்ந்த திரு-இடையாறு;


6)

மழுவாள் உடையான் மதிசூடி

எழுதா மறைசொல் இறையெந்தை

தொழுவார்க் கருள்வான் இடமென்பர்

எழிலார் வயல்சூழ் இடையாறே.


மழுவாள் உடையான் - மழுவாளை ஏந்தியவன்;

மதிசூடி - சந்திரனைச் சூடியவன்;

எழுதா மறை சொல் இறை - எழுதாக்கிளவியான வேதங்களைப் பாடியருளியவன்; வேதங்கள் போற்றும் இறைவன்;

ந்தை - எம் தந்தை;

தொழுவார்க்கு அருள்வான் இடம் என்பர் - வழிபடும் பக்தர்களுக்கு அருளும் சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது;

எழில் ஆர் வயல் சூழ் இடையாறே - அழகிய வயல் சூழ்ந்த திரு-இடையாறு;


7)

சீரார் மலையே சிலையாக்கி

ஆரார் புரமூன் றவையெய்தான்

காரார் மிடறன் இடமென்பர்

ஏரார் வயல்சூழ் இடையாறே.


சீர் ஆர் மலையே சிலைக்கி - பெருமை மிக்க மேருமலையையே ஒரு வில் ஆக்கி; (சீர் - பெருமை; புகழ்); (சிலை - வில்);

ரார் புரம் மூன்று அவைய்தான் - பகைவர்களது முப்புரங்களை எரித்தவன்; (ஆரார் - பகைவர்);

கார் ஆர் மிடறன் இடம் என்பர் - மேகம் போலக் கறுத்த கண்டம் உடைய (= நீலகண்டனான) சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது; (கார் - 1. கருமை; 2. மேகம்); (ஆர்தல் - 1. பொருந்துதல்; 2. ஒத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா");

ஏர் ஆர் வயல் சூழ் இடையாறே - அழகிய வயல் சூழ்ந்த திரு-இடையாறு;


8)

தசமா முகனைத் தடவெற்பின்

மிசையோர் விரலால் அழவைத்தான்

நசையான் விடையான் இடமென்பர்

இசையார் பொழில்சூழ் இடையாறே.


தசமாமுகனைத் தடவெற்பின்மிசைர் விரலால் அழவைத்தான் - (கயிலைமலையைப் பெயர்த்த) இராவணனைக் கயிலைமலையின்மேல் ஒரு திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கி அழவைத்தவன்; (தசமாமுகன் - பத்துத்தலைகளை உடைய இராவணன்); (தட வெற்பு - பெரிய மலை); (சம்பந்தர் தேவாரம் - 3.10.2 - "தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்");

நசையான் விடையான் இடம் என்பர் - எல்லோருடைய விருப்பத்திற்கும் உரியவனும் இடபவாகனனுமான சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது; (நசையான் - விருப்பத்திற்கு உரியவன்); (அப்பர் தேவாரம் - 6.63.9 - "நசையானை நால்வேதத்து அப்பாலானை");

இசை ஆர் பொழில் சூழ் இடையாறே - (வண்டுகளின்) இசை பொருந்திய சோலை சூழ்ந்த திரு-இடையாறு;


9)

அலரோன் முடிமால் அடிதேடித்

தலைவா எனவே உயர்சோதி

கலைமா னுடையான் இடமென்பர்

இலையார் பொழில்சூழ் இடையாறே.


அலரோன் முடி, மால் அடி, தேடித் "தலைவா" எனவே உயர்-சோதி - மலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிக் காணாமல், "தலைவனே" என்று போற்றும்படி எல்லையின்றி ஓங்கிய ஜோதி ஆனவன்;

கலைமான் உடையான் இடம் என்பர் - கலைமானைக் கையில் ஏந்திய சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது;

இலை ஆர் பொழில் சூழ் இடையாறே - இலை நிறைந்த சோலை சூழ்ந்த திரு-இடையாறு;


10)

தெருளார் உரைபொய்ம் மொழிநீங்கும்

கருளார் மிடறன் மறைசொல்மெய்ப்

பொருளா யபிரான் இடமென்பர்

இருளார் பொழில்சூழ் இடையாறே.


தெருளார் உரை பொய்ம்மொழி நீங்கும் - தெளிவில்லாதவர்கள் சொல்கின்ற பொய்களை நீங்குங்கள்;

கருள் ஆர் மிடறன் - கருமை பொருந்திய கண்டத்தை உடையவன்; (கருள் - கறுப்பு);

மறை சொல் மெய்ப்பொருள் ஆய பிரான் இடம் என்பர் - வேதங்களால் சொல்லப்படும் மெய்ப்பொருள் ஆன சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது; ("மறை சொல் மெய்ப்பொருள் = வேதங்களைப் பாடியருளிய மெய்ப்பொருள்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

இருள் ஆர் பொழில் சூழ் இடையாறே - நிழல் மிகுந்த சோலை சூழ்ந்த திரு-இடையாறு; (இருள் - கறுப்பு); (அப்பர் தேவாரம் - 6.33.7 - "இருளியல்நற் பொழிலாரூர்");


11)

முனிநால் வர்களுக் கறமோதீ

தனியாய் உமைகூ றுடையானே

பனியார் சடையாய் எனுமன்பர்க்(கு)

இனியான் இடமாம் இடையாறே.


"முனி நால்வர்களுக்கு அறம் ஓதீ - "சனகாதியர்களுக்கு வேதப்பொருளை உபதேசித்தவனே;

தனியாய் - ஒப்பற்றவனே; ஒருவனாக இருப்பவனே;

உமை கூறு உடையானே - உமையை ஒரு கூறாக உடையவனே;

பனி ஆர் சடையாய்" - கங்கைச் சடையானே"; (பனி - நீர்; குளிர்ச்சி);

எனும் அன்பர்க்கு இனியான் இடம் ஆம் இடையாறே - என்று துதித்து வணங்கும் பக்தர்களுக்கு இனியவனான சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது திரு-இடையாறு; (இனியான் - இனியவன் - என்றும் நன்மை செய்பவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.49.4 - "நியமந்தான் நினைவார்க்கு இனியான்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment