2018-11-28
P.458 - நாவலூர்
-------------------------------
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்)
(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)
1)
உளரெவர் உம்மை யன்றி .. உறுதுணை என்னும் அன்பர்
தளர்வற நல்கு கின்ற .. சங்கரர் சாம வேதர்
வளரெழில் உடைய மங்கை .. மனோன்மனி தனக்கு நாதர்
நளிர்பொழில் புடைய ணிந்த .. நாவலூர் நம்ப னாரே.
"உளர் எவர் உம்மை அன்றி உறுதுணை" என்னும் அன்பர் தளர்வு அற நல்குகின்ற சங்கரர் - "உம்மைத் தவிரை உற்ற துணை வேறு யார் உள்ளார்?" என்று வழிபடும் பக்தர்களது துன்பம் தீர அருள்கின்ற சங்கரர்; (சங்கரன் - சிவன் திருநாமம் - சுகத்தை அளிப்பவன்); (தளர்வு - சோர்வு; துக்கம்);
சாமவேதர் - சாமவேதத்தை ஓதுபவர்; (அப்பர் தேவாரம் - 4.64.7 - "சந்தணி கொங்கையாள் ஓர் பங்கினார் சாமவேதர்");
வளர்-எழில் உடைய மங்கை மனோன்மனி-தனக்கு நாதர் - அழகு மிக்கவளும் மனோன்மனி என்ற திருநாமம் உடையவளுமான உமைக்குக் கணவர்; (* மனோன்மனி - இத்தலத்து இறைவி திருநாமம்);(மனோன்மனி - நவந்தரு பேதங்களில் மனோன்மனி என்பது ஒரு சத்திபேதம்); (மனோன்மனி என்பதே சரி; மனோன்மணி என்பது பிழை; मनोन्मनी - manōnmanī - A form of Durgā. இது லலிதா சஹஸ்ரநாமத்தில் 207-ஆம் திருநாமம்);
நளிர்-பொழில் புடை அணிந்த நாவலூர் நம்பனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.94.7 - "அம்பொன் ஆலவாய் நம்பன் ஆர்கழல்");
2)
மறைதனை ஓது மாணி .. வாழ்ந்திட நமனைச் செற்ற
இறையவர் ஊர்தி யாக .. ஏற்றினை உகந்த ஏந்தல்
அறைகடல் நஞ்சு தன்னை .. அமுதமென் றுண்ட கண்டர்
நறைமலர்ப் பொழில ணிந்த .. நாவலூர் நம்ப னாரே.
மறைதனை ஓது மாணி வாழ்ந்திட நமனைச் செற்ற இறையவர் - வேதமந்திரங்களை ஓதி வழிபட்ட மார்க்கண்டேயர் வாழ்வதற்காகக் காலனை உதைத்த இறைவர்;
ஊர்தியாக ஏற்றினை உகந்த ஏந்தல் - இடபத்தை வாகனமாக விரும்பிய தலைவர்;
அறைகடல் நஞ்சு தன்னை அமுதம் என்று உண்ட கண்டர் - ஒலிக்கின்ற கடலில் எழுந்த விடத்தை அமுதம் போல உண்ட நீலகண்டர்;
நறைமலர்ப் பொழில் அணிந்த நாவலூர் நம்பனாரே - வாசமலர்ச்சோலை சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்;
3)
பொறுமையின் உருவே என்று .. போற்றிசெய் அன்பர்க் கிம்மை
மறுமையில் இன்பம் நல்கி .. வல்வினை தீர்க்கும் நாதர்
சிறுமதி சென்னி மீது .. திகழ்ந்திட வைத்த செல்வர்
நறுமணத் தென்றல் வீசும் .. நாவலூர் நம்ப னாரே.
பொறுமையின் உருவே என்று போற்றிசெய் அன்பர்க்கு இம்மை மறுமையில் இன்பம் நல்கி வல்வினை தீர்க்கும் நாதர் - "கருணையின் வடிவே" என்று போற்றி வணங்கும் பக்தர்களுக்கு இம்மை மறுமை இன்பங்களை அளித்து அவர்களது வலிய வினையைத் தீர்க்கும் தலைவர்;
சிறுமதி சென்னி மீது திகழ்ந்திட வைத்த செல்வர் - பிறையைத் திருமுடிமேல் ஒளிவீச வைத்த செல்வர்;
நறுமணத் தென்றல் வீசும் நாவலூர் நம்பனாரே - தென்றலில் வாசம் கமழும் திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்;
4)
பாடிய அன்பர் தங்கள் .. பழவினை தீர்த்து வானில்
நீடிய வாழ்வு நல்கும் .. நிமலனார் நெற்றிக் கண்ணர்
வாடிய திங்கள் வாழ .. வார்சடை மேல ணிந்தார்
நாடிவண் டார்க்கும் சோலை .. நாவலூர் நம்ப னாரே.
பாடிய அன்பர் தங்கள் பழவினை தீர்த்து வானில் நீடிய வாழ்வு நல்கும் நிமலனார் - துதிக்கும் பக்தர்களது பழைய வினையைத் தீர்த்துச் சிவலோகத்தில் நிலைத்து இருக்கும் வாழ்வைக் கொடுக்கும் தூயர்;
நெற்றிக்கண்ணர் - முக்கண்ணர்;
வாடிய திங்கள் வாழ வார்சடை மேல் அணிந்தார் - தேய்ந்து வருந்திய சந்திரன் வாழும்படி நீள்சடைமேல் சூடியவர்; (வார்தல் - நீள்தல்);
நாடி வண்டு ஆர்க்கும் சோலை நாவலூர் நம்பனாரே - விரும்பி அடைந்த வண்டுகள் ஒலிக்கின்ற சோலை திகழும் திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்; (ஆர்த்தல் - ஒலித்தல்);
5)
வில்லென மலையை ஏந்தி .. மேவலர் புரங்கள் எய்த
வல்லவர் மங்கை அஞ்ச .. மதகரி உரித்த மைந்தர்
அல்லினில் பூதம் சூழ .. ஆடிடும் கூத்தர் வண்டு
நல்லிசை ஆர்க்கும் சோலை .. நாவலூர் நம்ப னாரே.
வில் என மலையை ஏந்தி மேவலர் புரங்கள் எய்த வல்லவர் - மேருமலையை வில்லாக ஏந்திப் பகைவர்களது முப்புரங்களை எய்த ஆற்றலுடையவர்;
மங்கை அஞ்ச மதகரி உரித்த மைந்தர் - உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த வீரர்;
அல்லினில் பூதம் சூழ ஆடிடும் கூத்தர் - இருளில் பூதகணங்கள் சூழக் கூத்து ஆடுபவர்;
வண்டு நல்லிசை ஆர்க்கும் சோலை நாவலூர் நம்பனாரே - வண்டுகள் இனிய இசையை ஒலிக்கின்ற சோலை திகழும் திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்; (ஆர்த்தல் - ஒலித்தல்);
6)
அரிதினும் அரியர் ஆயின் .. அன்பருக் கெளியர் ஆனார்
திரிதரு புரங்கள் மூன்றைச் .. சிரித்தெரி செய்த வீரர்
புரிதரு சடையர் வேளைப் .. பொடிபடக் காய்ந்த கண்ணர்
நரிதிரி கானில் ஆடும் .. நாவலூர் நம்ப னாரே.
அரிதினும் அரியர் - மிகவும் அரியவர்;
ஆயின் அன்பருக்கு எளியர் ஆனார் - ஆனால், பக்தர்களால் எளிதில் அடையப்படுபவர்;
திரிதரு புரங்கள் மூன்றைச் சிரித்து எரிசெய்த வீரர் - திரிந்த முப்புரங்களைச் சிரித்து எரித்த வீரர்; (தருதல் - ஒரு துணைவினைச்-சொல்);
புரிதரு சடையர் - முறுக்கிய சடையை உடையவர்; (புரிதல் - சுருள்தல்);
வேளைப் பொடிபடக் காய்ந்த கண்ணர் - மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்துச் சாம்பலாக்கியவர்; (வேள் - காமன்); (காய்தல் - எரித்தல்);
நரி திரி- கானில் ஆடும் நாவலூர் நம்பனாரே - நரிகள் உலவும் சுடுகாட்டில் கூத்தாடுபவர், திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்;
7)
அங்கையைக் கூப்பி நாளும் .. அடிதொழும் அன்பர் தங்கள்
சங்கையைத் தீர்ப்பார் நீறு .. தாங்கிய மார்பில் நூலர்
கங்கையைச் சடையுள் வைத்துக் .. கையினில் தீயை ஏந்தி
நங்கையைப் பங்கில் வைத்த .. நாவலூர் நம்ப னாரே.
அங்கையைக் கூப்பி நாளும் அடிதொழும் அன்பர் தங்கள் சங்கையைத் தீர்ப்பார் - கைகளைக் கூப்பித் தினமும் திருவடியை வழிபடும் பக்தர்களுடைய அச்சத்தைத் தீர்ப்பார்; (சங்கை - அச்சம்);
நீறு தாங்கிய மார்பில் நூலர் - மார்பில் திருநீற்றையும் பூணூலையும் அணிந்தவர்;
கங்கையைச் சடையுள் வைத்துக் கையினில் தீயை ஏந்தி - சடையுள் கங்கையை வைத்துக் கையில் நெருப்பை ஏந்தி;
நங்கையைப் பங்கில் வைத்த நாவலூர் நம்பனாரே - உமையை ஒரு பாகமாக வைத்தவர், திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்;
8)
வான்மலை பேர்க்கச் சென்ற .. மதியிலாத் தென்னி லங்கைக்
கோன்முடி பத்த டர்த்துக் .. குருதியா றோட வைத்தார்
மான்மறி ஏந்தும் கையர் .. மழவிடை ஏறும் செய்யர்
நான்மறை ஓது நாவர் .. நாவலூர் நம்ப னாரே.
வான்-மலை பேர்க்கச் சென்ற மதி இலாத் தென்னிலங்கைக்கோன் முடி பத்து அடர்த்துக் குருதி ஆறு ஓடவைத்தார் - அழகிய, உயர்ந்த கயிலைமலையைப் பெயர்க்கச் சென்ற அறிவற்ற இலங்கை-மன்னனான இராவணனது பத்துத்தலைகளையும் நசுக்கி இரத்தவெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார்;
மான்மறி ஏந்தும் கையர் - கையில் மான்கன்றை ஏந்தியவர்;
மழவிடை ஏறும் செய்யர் - இள-ஏற்றை வாகனமாக உடையவர், செம்மேனியர்; (செய் - சிவப்பு);
நான்மறை ஓது நாவர் நாவலூர் நம்பனாரே - நால்வேதங்களைப் பாடியருளியவர், திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்;
9)
பன்றியும் புள்ளும் ஆகிப் .. பறந்தகழ்ந் திருவர் நேட
அன்றெரி ஆகி நின்ற .. அண்ணலார் அன்பர்க் கன்பர்
சென்றடி வீழ்ந்த தேவர் .. தெள்ளமு துண்ண நஞ்சை
நன்றென உண்ட கண்டர் .. நாவலூர் நம்ப னாரே.
பன்றியும் புள்ளும் ஆகிப் பறந்து அகழ்ந்து இருவர் நேட அன்று எரி ஆகி நின்ற அண்ணலார் - பன்றியும் அன்னப்பறவையும் ஆகித் திருமாலும் பிரமனும் நிலத்தை அகழ்ந்தும் வானில் பறந்தும் தேடுமாறு முன்பு எல்லையற்ற தீப்பிழம்பாய் நின்ற தலைவர்; (நேடுதல் - தேடுதல்); (பன்றியும் புள்ளும் - பறந்து அகழ்ந்து - எதிர்நிரனிறையாக வந்தது);
அன்பர்க்கு அன்பர் - பக்தர்களுக்கு அன்பு உடையவர்;
சென்று அடி வீழ்ந்த தேவர் தெள்ளமுது உண்ண நஞ்சை நன்று என உண்ட கண்டர் - போய்த் திருவடியில் விழுந்து வணங்கிய தேவர்கள் தெளிந்த அமுதத்தை உண்ணுமாறு ஆலகாலத்தை அமுதம்போல் உண்ட நீலகண்டர்;
நாவலூர் நம்பனாரே - திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்;
10)
பொக்கமார் நெஞ்சர் என்றும் .. பொய்களே பேசும் புல்லர்
பக்கமே செல்ல வேண்டா .. பாலன நீறு பூசி
முக்கணா காவென் றார்தம் .. முன்வினை தீர்த்துக் காப்பார்
நக்குமூ வெயில்கள் சுட்ட .. நாவலூர் நம்ப னாரே.
பொக்கமார் நெஞ்சர், என்றும் பொய்களே பேசும் புல்லர், பக்கமே செல்ல வேண்டா - வஞ்சகம் நிறைந்த நெஞ்சினர், எந்நாளும் பொய்களே பேசும் கீழோர்கள், அவர்கள் பக்கம் போகவேண்டா; (பொக்கம் - வஞ்சகம்); (ஆர்தல் - நிறைதல்);
பால் அன நீறு பூசி, "முக்கணா கா" என்றார்தம் முன்வினை தீர்த்துக் காப்பார் - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசி, "முக்கண்ணனே, காத்தருளாய்" என்னும் பக்தர்களது பழவினையைத் தீர்த்துக் காப்பார்; (அன - அன்ன - போன்ற);
நக்கு மூ-எயில்கள் சுட்ட நாவலூர் நம்பனாரே - சிரித்து முப்புரங்களை எரித்தவர், திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்; (நக்கு - சிரித்து); (எயில் - மதில்);
11)
என்மணி என்பொன் நீயென் .. றேத்திடும் அன்பர்க் கிம்மைப்
பொன்மணி மல்கு மாறு .. புரந்திடும் தொலையாச் செல்வர்
பன்மணி முடிசாய்த் தும்பர் .. பணிந்தெழ நஞ்சை உண்டு
நன்மணி செய்த கண்டர் .. நாவலூர் நம்ப னாரே.
"என் மணி, என் பொன், நீ" என்று ஏத்திடும் அன்பர்க்கு இம்மைப் பொன் மணி மல்குமாறு புரந்திடும் தொலையாச் செல்வர் - "என் மணி நீ, என் பொன் நீ" என்று துதிக்கும் பக்தர்களுக்கு இப்பிறப்பில் பொன்னும் மணியும் கொழிக்குமாறு அருள்பவர், அவர்களுக்கு என்றும் அழியாத நிதி போன்றவர்; (இம்மை - இப்பிறப்பு);
பன்மணி முடி சாய்த்து உம்பர் பணிந்து எழ நஞ்சை உண்டு நன்மணி செய்த கண்டர் - தேவர்கள் பல மணிகள் பதித்த கிரீடம் அணிந்த தலையைத் தாழ்த்தித் திருவடியை வணங்கவும், அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்டு நீலமணியாகக் கண்டத்தில் வைத்தவர்;
நாவலூர் நம்பனாரே - திருநாவலூரில் உறைகின்ற சிவபெருமானார்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment