Monday, September 15, 2025

P.457 - பொது - சிரமலி மாலை

2018-11-13

P.457 - பொது - "சுப்பிரமணியனைப் பெற்றவன்"

-------------------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


முற்குறிப்பு - 2018-இல் கந்தஷஷ்டி நாளில் எழுதிய பதிகம் இது.


1)

சிர(ம்)மலி மாலை சேர்திரு முடிமேல் .. திகழ்மதி அதனயல் சீறும்

அரவையும் வைத்த அண்ணலை முக்கண் .. அடிகளை அடிதொழு தேத்தும்

சுரர்களைக் காத்துச் சூரனை அழித்த .. சுப்பிர மணியனைப் பெற்ற

பரமனை மிக்க பரிவுடை யானைப் .. பணிபவர்க் கொருபயம் இலையே.


சிரம் மலி மாலை சேர் திருமுடிமேல் திகழ் மதி அதன் அயல் சீறும் அரவையும் வைத்த அண்ணலை - மண்டையோட்டு மாலை அணிந்த சென்னிமேல் ஒளிவீசும் சந்திரன் அருகே சீறுகின்ற பாம்பையும் வைத்த தலைவனை;

முக்கண் அடிகளை - நெற்றிக்கண் உடைய கடவுளை;

அடி தொழுது ஏத்தும் சுரர்களைக் காத்துச் சூரனை அழித்த சுப்பிரமணியனைப் பெற்ற பரமனை - திருவடியை வழிபட்ட தேவர்களைக் காத்துச் சூரபதுமனை அழித்த சுப்பிரமணியனுக்குத் தந்தையான பரமனை; (அப்பர் தேவாரம் - 4.104.5 - "பரவைச் சூர் அட்ட வேலவன் தாதையை");

மிக்க பரிவு உடையானைப் பணிபவர்க்கு ஒரு பயம் இலையே - மிகவும் கருணை உடைய சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; (அப்பெருமான் அபயம் அளித்து அவர்களைக் காப்பான்);


2)

உழுவையின் அதளை உடையென உடைய .. ஒருவனை ஒண்டொடி உமையாள்

கொழுநனைச் சடையிற் குளிர்புனல் ஒளித்த .. கோமகன் தனைச்சரண் அடைந்து

தொழுசுரர் உய்யச் சூரனை அழித்த .. சுப்பிர மணியனைப் பெற்ற

மழுவனை வேண்டு வரமருள் வானை .. வணங்கினார்க் கொருபயம் இலையே.


உழுவையின் அதளை உடை என உடைய ஒருவனை - புலித்தோலை உடை என்று அணிந்த ஒப்பற்றவனை; (உழுவை - புலி);

ஒண்டொடி உமையாள் கொழுநனைச் - ஒளி திகழும் வளையலை அணிந்த பெண்ணான உமாதேவிக்குக் கணவனை; (ஒண்டொடி - ஒண்தொடி - ஒளிவீசும் வளை; பெண்);

சடையில் குளிர்-புனல் ஒளித்த கோமகன்தனைச் - சடையில் குளிர்ந்த கங்கையை ஒளித்த அரசனை;

சரண் அடைந்து தொழு சுரர் உய்யச் சூரனை அழித்த சுப்பிரமணியனைப் பெற்ற மழுவனை - சரண்புகுந்து வணங்கிய தேவர்கள் உய்யும்படி சூரபதுமனை அழித்த சுப்பிரமணியனுக்குத் தந்தையும் மழுவாயுதத்தை ஏந்தியவனுமான சிவபெருமானை;

வேண்டு-வரம் அருள்வானை வணங்கினார்க்கு ஒரு பயம் இலையே - வேண்டுகின்ற வரங்களையெல்லாம் அருளும் பெருமானை வழிபடும் அடியார்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை;


3)

நதிவர வேண்டும் பகீரதன் மகிழ .. நற்சடை யிற்புனல் தாங்கும்

அதிசயன் தன்னை அருமறைப் பொருளை .. ஆலதன் கீழ்விரித் தானைத்

துதிசுரர் உய்யச் சூரனை அழித்த .. சுப்பிர மணியனைப் பெற்ற

அதிபனை அன்பர்க் கன்புடை யானை .. அடைந்தவர்க் கொருபயம் இலையே.


நதி வர வேண்டும் பகீரதன் மகிழ நற்சடையில் புனல் தாங்கும் அதிசயன் தன்னை - (முன்னோர்கள் உய்திபெறுவதற்காகக்) கங்கை பூமிக்கு வரும் பொருட்டு வேண்டிப் பணிந்து தவம் செய்த பகீரதன் மகிழும்படி நல்ல சடையில் கங்கையைத் தாங்கிய அதிசயனை;

அருமறைப் பொருளை ஆல் அதன்கீழ் விரித்தானைத் - அரிய வேதத்தின் பொருளைக் கல்லால-மரத்தின்கீழ் உபதேசித்தவனை;

துதி சுரர் உய்யச் சூரனை அழித்த சுப்பிரமணியனைப் பெற்ற அதிபனை - துதித்த தேவர்கள் உய்யும்படி சூரபதுமனை அழித்த சுப்பிரமணியனுக்குத் தந்தையும் எல்லார்க்கும் அரசனுமான சிவபெருமானை;

அன்பர்க்கு அன்பு உடையானை அடைந்தவர்க்கு ஒரு பயம் இலையே - பக்தர்களுக்கு அன்பு உடைய பெருமானை வழிபடும் அடியார்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை;


4)

ஆழ்கடல் நஞ்சை அமுதென நுங்கி .. அருமணி திகழ்மிடற் றானை

வாழ்கவென் றேத்தி வார்கழல் தன்னில் .. மணமிகு மலர்பல தூவிச்

சூழ்சுரர் உய்யச் சூரனை அழித்த .. சுப்பிர மணியனைப் பெற்ற

தாழ்சடை யானைத் தயைமலி கோனைச் .. சார்ந்தவர்க் கொருபயம் இலையே.


ஆழ்கடல்-நஞ்சை அமுது என நுங்கி அருமணி திகழ் மிடற்றானை - ஆழம் மிக்க கடலில் தோன்றிய ஆலகாலத்தை அமுதம் போல உண்டு அரிய மணி திகழும் கண்டத்தை உடையவனை; (நுங்குதல் - விழுங்குதல்);

வாழ்க என்று ஏத்தி வார்-கழல் தன்னில் மணம் மிகு மலர் பல தூவிச் சூழ் சுரர் உய்யச் - "வாழ்க" என்று வாழ்த்தி நீண்ட திருவடியில் வாசம் மிக்க பூக்களைத் தூவி வலம்செய்த தேவர்கள் உய்யும்படி;

சூரனை அழித்த சுப்பிரமணியனைப் பெற்ற தாழ்சடையானைத் - சூரபதுமனை அழித்த சுப்பிரமணியனுக்குத் தந்தையும் தாழும் சடையை உடையவனுமான சிவபெருமானை;

தயை மலி கோனைச் சார்ந்தவர்க்கு ஒரு பயம் இலையே - கருணை மிகுந்த தலைவனைச் சரண் அடைந்தவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை;


5)

சுடலையிற் பூதம் சூழ்ந்திட ஆடும் .. சோதியைத் தொழுதெழு மாணிக்(கு)

இடர்தரு நமனை உதைத்தருள் தேவை .. ஏத்திய இமையவர் வாழச்

சுடர்விடு வேலால் சூரனை அழித்த .. சுப்பிர மணியனைப் பெற்ற

படர்சடை யானைப் பரிவுடை யானைப் .. பணிபவர்க் கொருபயம் இலையே.


சுடலையில் பூதம் சூழ்ந்திட ஆடும் சோதியைத் தொழுதெழு - சுடுகாட்டில் பூதங்கள் சூழத் திருநடம் ஆடும் ஜோதியை வழிபட்ட;

மாணிக்கு இடர் தரு நமனை உதைத்தருள் தேவை - மார்க்கண்டேயருக்குத் துன்பம் தந்த (= அவர் அஞ்சும்படி அவரைக் கொல்ல வந்த) கூற்றுவனை உதைத்த தேவனை; (தே - தெய்வம்);

ஏத்திய இமையவர் வாழச் - போற்றிய தேவர்கள் உய்யும்படி;

சுடர் விடு வேலால் சூரனை அழித்த சுப்பிரமணியனைப் பெற்ற – ஒளி வீசும் வேலால் சூரபதுமனை அழித்த சுப்பிரமணியனுக்குத் தந்தையான;

படர்-சடையானைப் பரிவு உடையானைப் பணிபவர்க்கு ஒரு பயம் இலையே - படரும் சடையை உடையவனைக், கருணை மிகுந்தவனைச் சரண் அடைந்தவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை;


6)

மாரனை எரித்து வடிவிலன் ஆக்க .. வல்லனை வார்சடை தன்னில்

நீரனை வெள்ளை நீறணிந் தானை .. நிருத்தனை உம்பரைக் காத்துச்

சூரனை அழித்த அறுமுக மைந்தன் .. சுப்பிர மணியனைப் பெற்ற

சீரனை என்றும் போற்றிட மறவாச் .. சிந்தையர்க் கொருபயம் இலையே.


மாரனை எரித்து வடிவு-இலன் ஆக்க வல்லனை - காமனை எரித்து அனங்கன் ஆக்க வல்லவனை; (மாரன் - மன்மதன்); (வடிவு - உருவம்);

வார்-சடை தன்னில் நீரனை - நீள்சடையில் கங்கையாற்றை உடையவனை;

வெள்ளை-நீறு அணிந்தானை - வெண்ணீற்றைப் பூசியவனை;

நிருத்தனை - கூத்தனை;

உம்பரைக் காத்துச் சூரனை அழித்த அறுமுக மைந்தன் சுப்பிரமணியனைப் பெற்ற சீரனை - தேவர்களைக் காத்துச், சூரபதுமனை அழித்த ஆறுமுகனான சுப்பிரமணியனுக்குத் தந்தையான புகழ் உடைய பெருமானை; (சீரன் - புகழுடையவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.94.10 - "ஆர(ம்) நாகமாம் சீரன் ஆலவாய்");

என்றும் போற்றிட மறவாச் சிந்தையர்க்கு ஒரு பயம் இலையே - மறவாமல் நாள்தோறும் வழிபடும் பக்தர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை;


7)

வேள்விரை யார்ந்த கணைவிட அவனை .. வெண்பொடி செய்தருள் வானை

வாள்விழி மங்கை பங்கமர்ந் தானை .. வானவர் தமக்கிடர் செய்த

தோள்வலி மிக்க சூரனை அழித்த .. சுப்பிர மணியனைப் பெற்ற

நீள்சடை யானை நிதமடி போற்றி .. நினைபவர்க் கொருபயம் இலையே.


வேள் விரை ஆர்ந்த கணை விட அவனை வெண்பொடி செய்தருள்வானை - மன்மதன் வாசனை மிக்க மலர்க்கணையை ஏவக் கண்டு அவனைச் சாம்பல் ஆக்கியவனை;

வாள்-விழி மங்கை பங்கு அமர்ந்தானை - ஒளியுடைய கண்களையுடைய உமையை ஒரு பங்கில் விரும்பியவனை; (வாள் - ஒளி); (அமர்தல் - விரும்புதல்);

வானவர்-தமக்கு இடர் செய்த தோள்-வலி மிக்க சூரனை அழித்த சுப்பிரமணியனைப் பெற்ற நீள்சடையானை - தேவர்களுக்குத் துன்பம் தந்த புஜபலம் மிகுந்த சூரனை அழித்த சுப்பிரமணியனுக்குத் தந்தையும் நீண்ட சடையை உடையவனுமான சிவபெருமானை; (தோள் - புஜம்; வலி - வலிமை);

நிதம் அடி போற்றி நினைபவர்க்கு ஒரு பயம் இலையே - நாள்தோறும் திருவடியைப் போற்றித் தியானிக்கின்ற பக்தர்களுக்கு எவ்வித பயமும் இல்லை;


8)

விடந்திகழ் கண்டன் மேவிய வெற்பை .. வீசிடு வேனென எண்ணி

இடந்தவன் தன்னை நெரித்தருள் செய்த .. இறைவனை இமையவர் தமக்குத்

தொடர்ந்திடர் செய்த சூரனை அழித்த .. சுப்பிர மணியனைப் பெற்ற

மடந்தையொர் பங்கு மகிழ்பெரு மானை .. வணங்கினார்க் கொருபயம் இலையே.


விடம் திகழ் கண்டன் மேவிய வெற்பை வீசிடுவேன் என எண்ணி - நீலகண்டன் உறையும் கயிலைமலையை வீசி எறிவேன் என்று எண்ணி;

இடந்தவன் தன்னை நெரித்தருள் செய்த இறைவனை - அந்த மலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கி அருளிய இறைவனை; (நெரித்தல் - நசுக்குதல்);

இமையவர் தமக்குத் தொடர்ந்து இடர் செய்த சூரனை அழித்த சுப்பிரமணியனைப் பெற்ற – தேவர்களுக்கு இடைவிடாமல் துன்பம் செய்த சூரபதுமனை அழித்த சுப்பிரமணியனுக்குத் தந்தையான;

மடந்தை ஒர் பங்கு மகிழ் பெருமானை வணங்கினார்க்கு ஒரு பயம் இலையே - உமைபங்கனை வணங்கும் பக்தர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; (மடந்தை - பெண்); (ஒர் - ஓர்; குறுக்கல்-விகாரம்);


9)

முன்பரி பிரமன் என்றிவர் காண .. முயன்றடை யாப்பரஞ் சுடரைப்

புன்புரி சடைமேற் கொன்றையி னானைப் .. புனிதனை வானவர் தம்மைத்

துன்புற வைத்த சூரனை அழித்த .. சுப்பிர மணியனைப் பெற்ற

இன்பனை முக்கண் எந்தையை நாளும் .. ஏத்தினார்க் கொருபயம் இலையே.


முன்பு அரி பிரமன் என்றிவர் காண முயன்று அடையாப் பரஞ்சுடரைப் - முன்னர் திருமால் பிரமன் என்ற இவர்களால் அடிமுடி காண முயன்று அடைய ஒண்ணாத மேலான ஜோதியை; (என்றிவர் - என்ற இவர்; தொகுத்தல்-விகாரம்);

புன்-புரி-சடைமேல் கொன்றையினானைப் - சிவந்த முறுக்கிய சடைமேல் கொன்றைமலரை அணிந்தவனை; (புன்சடை - செஞ்சடை); (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

புனிதனை - தூயனை;

வானவர்-தம்மைத் துன்புற வைத்த சூரனை அழித்த சுப்பிரமணியனைப் பெற்ற – தேவர்களைத் துன்புறுத்திய சூரபதுமனை அழித்த சுப்பிரமணியனுக்குத் தந்தையான;

இன்பனை முக்கண் எந்தையை நாளும் ஏத்தினார்க்கு ஒரு பயம் இலையே - இன்பவடிவினனை, முக்கட்பெருமானை, எம் தந்தையான சிவபெருமானைத் துதிக்கும் பக்தர்களுக்கு எவ்வித பயமும் இல்லை;


10)

தகவிலர் நீறு தரிக்கிலர் பொய்யைத் .. தத்துவம் என்றிடு(ம்) மூடர்

பகர்மொழி தம்மில் மயங்கிட வேண்டா .. பதமலர் போற்றிய தேவர்

சுகமுறு மாறு சூரனை அழித்த .. சுப்பிர மணியனைப் பெற்ற

பகவனை முக்கட் பரமனை நாளும் .. பணிபவர்க் கொருபயம் இலையே.


தகவு இலர் - நற்குணம் அற்றவர்கள்;

நீறு தரிக்கிலர் - திருநீற்றைப் பூசாதவர்கள்;

பொய்யைத் தத்துவம் என்றிடும் மூடர் - பொய்களைத் தத்துவம் என்று சொல்லும் அறிவிலிகள்;

பகர்-மொழி-தம்மில் மயங்கிட வேண்டா - அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் நீங்கள் மயங்கவேண்டா;

பதமலர் போற்றிய தேவர் சுகம் உறுமாறு - திருவடித்தாமரையை வழிபட்ட தேவர்கள் இன்புறும்படி;

சூரனை அழித்த சுப்பிர மணியனைப் பெற்ற - சூரபதுமனை அழித்த சுப்பிரமணியனுக்குத் தந்தையான;

பகவனை முக்கட்-பரமனை நாளும் பணிபவர்க்கு ஒரு பயம் இலையே - பகவானை, மூன்று கண்களையுடைய பரமனான சிவபெருமானை நாள்தோறும் வழிபடும் பக்தர்களுக்கு எவ்வித பயமும் இல்லை;


11)

இன்மொழி பேசும் ஏந்திழை தன்னை .. இடமொரு பங்கமர்ந் தானை

நன்மணி யாக நஞ்சணி கின்ற .. நாதனைத் தேவரைக் காத்துத்

துன்மதி உடைய சூரனை அழித்த .. சுப்பிர மணியனைப் பெற்ற

பொன்மலர்க் கொன்றைப் புரிசடை யானைப் .. போற்றினார்க் கொருபயம் இலையே.


இன்மொழி பேசும் ஏந்திழை-தன்னை இடம் ஒரு பங்கு அமர்ந்தானை - இனிய மொழி பேசுகின்ற உமாதேவியை இடப்பக்கத்தில் பாகமாக விரும்பியவனை; (ஏந்திழை - பெண்); (அமர்தல் - விரும்புதல்);

நன்மணியாக நஞ்சு அணிகின்ற நாதனை - கண்டத்தில் அழகிய மணிபோல ஆலகாலத்தை அணிகின்ற தலைவனை;

தேவரைக் காத்துத், துன்மதி உடைய சூரனை அழித்த சுப்பிரமணியனைப் பெற்ற – தேவர்களைக் காத்துத், தீயவனான சூரபதுமனை அழித்த சுப்பிரமணியனுக்குத் தந்தையான; (துன்மதி - துர்ப்புத்தி);

பொன்மலர்க்-கொன்றைப் புரி-சடையானை - அழகிய கொன்றைமலரை அணிந்த முறுக்கிய சடையினனான சிவபெருமானை; (சம்பந்தர் தேவரம் - 3.90.5 - "பொன்மலர்க் கொன்றையும் வாளரவும்");

போற்றினார்க்கு ஒரு பயம் இலையே - போற்றி வழிபடும் பக்தர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; (அப்பெருமான் அபயம் அளித்து அவர்களைக் காப்பான்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment