03.08.012 – முருகன் - வயலூர் - விருப்புகள் வெறுப்புகள் - (வண்ணம்)
2009-08-13
3.8.12 - முருகன் - விருப்புகள் வெறுப்புகள் - (வயலூர்)
--------------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
(தனத்தன தனத்தன .. தனதான )
விருப்புகள் வெறுப்புகள் .. இவைமூடி
.. வினைக்குழி அழுத்திட .. அழியாதே
திருப்பெயர் தனைத்தின(ம்) .. மொழிவேனாய்ச்
.. செகத்தடை பிறப்பற .. அருளாயே
பொருப்பினை இடித்திடும் .. வடிவேலா
.. புயற்புனல் வயற்பதி .. வயலூரா
நெருப்புமிழ் நுதற்கணில் .. வருவோனே
.. நினைத்தொழு தவர்க்கருள் .. பெருமானே.
பதம் பிரித்து:
விருப்புகள் வெறுப்புகள் .. இவை மூடி
.. வினைக்குழி அழுத்திட .. அழியாதே,
திருப்பெயர்தனைத் தின(ம்) .. மொழிவேனாய்ச்,
.. செகத்து அடை- பிறப்பு அற .. அருளாயே;
பொருப்பினை இடித்திடும் .. வடிவேலா;
.. புயற்புனல் வயற்பதி .. வயலூரா;
நெருப்பு உமிழ் நுதற்கணில் .. வருவோனே;
.. நினைத் தொழு தவர்க்கு அருள் .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
விருப்புகள் வெறுப்புகள் இவை மூடி வினைக்குழி அழுத்திட அழியாதே, - விருப்புகளும் வெறுப்புகளும் என்னைச் சூழ்ந்து மூடிக் கொடியவினை என்ற குழியில் தள்ள அழிந்தொழியாது; (அழுத்துதல் - அமிழ்த்துதல்; ஆழ்த்துதல்);
திருப்பெயர்தனைத் தின(ம்) மொழிவேனாய்ச், செகத்து அடை- பிறப்பு அற அருளாயே - உன் திருநாமத்தைத் தினமும் மறத்தல் இன்றிச் சொல்வேன் ஆகி, மண்ணுலகில் அடைகின்ற பிறப்புகள் தீர அருள்வாயாக; (செகம் - ஜகம் / ஜகத் - உலகம்);
பொருப்பினை இடித்திடும் வடிவேலா - கூரிய வேலை எறிந்து கிரௌஞ்சமலையைத் தூளாக்கியவனே; (பொருப்பு - மலை; இங்கே, கிரௌஞ்ச மலை); (இடித்தல் - தூளாக்குதல்; அழித்தல்);
புயற்புனல் வயற்பதி வயலூரா - மேகத்து நீர் அடையும் வயல்கள் திகழும் தலமான வயலூரில் எழுந்தருளியவனே; (புயல் - மேகம்); (இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் - "புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி");
நெருப்பு உமிழ் நுதற்கணில் வருவோனே; - (சிவபெருமானது) தீயை உமிழும் நெற்றிக்கண்ணில் உதித்தவனே; (நுதல் - நெற்றி); (கணில் - கண்ணில் - இடைக்குறை விகாரம்);
நினைத் தொழு தவர்க்கு அருள் பெருமானே - உன்னைத் தொழும் தவம் உடையவர்களுக்கு அருள்கின்ற பெருமானே; (நினை - நின்னை - உன்னை); (தவன் - தவம் உடையவன்; தவம் செய்பவன்); (தொழுதவர் - 1. வணங்கியவர்கள்; 2. தொழு தவர் - வினைத்தொகை - தொழும் தவம் உடையவர்கள்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment