03.08.010 – முருகன் - ஆரூர் - உறுதுயர் நோயோடு வாதைகள் - (வண்ணம்)
2007-03-11
3.8.10 - முருகன் - உறுதுயர் நோயோடு - (ஆரூர்)
----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தானான தானன
தனதன தானான தானன
தனதன தானான தானன .. தனதான)
(குழவியு மாய்மோக மோகித - திருப்புகழ் - திருவண்ணாமலை)
(இருகுழை மீதோடி மீளவும் - திருப்புகழ் - பொது)
(சரவண ஜாதா நமோநம - திருப்புகழ் - விநாயகர்மலை (பிள்ளையார்பட்டி))
உறுதுயர் நோயோடு வாதைகள் .. உறவென வீடாது மேவிட
.. .. உடலுயிர் வேறாகு(ம்) நாளுற .. நரிபேய்கள்
.. உலவிடு கானேகி டாமுனம் .. உயர்தமிழ் ஆர்மாலை நாவுற
.. .. உனதிரு தாள்நாடு நீர்மையை .. அருளாயே
நறுமலர் மேலானும் ஆழியில் .. அரவணை மேலானு(ம்) நேடிய
.. .. நரைவிடை மேலேறி கூவிள(ம்) .. மதிநாகம்
.. நதிபுனை தீயாரும் வேணியர் .. அணிமுலை மாதாரு(ம்) மேனியர்
.. .. நவிலென நால்வேத ஆதியை .. மொழிவோனே
அறுமுக ஈராறு தோளுடை .. அழகின வீடான ஆறினில்
.. .. அடிதொழு வார்பாவம் ஆயின .. களைவோனே
.. அசுரர்கள் வேரோடு மாய்வுற .. அயிலுறு வேலோடு போர்புரி
.. .. அடலின ஓர்தோகை ஏறிய .. முருகாநின்
மறுவறு சீர்பாடு நேயர்கள் .. மனமுறை வாய்ஏரு லாவிய
.. .. வளிமண வாளாவி நாயகன் .. இளையோனே
.. மனுமுறை மாறாத சோழனு(ம்) .. முனமர சாள்நீடு சீர்திகழ்
.. .. வள(ம்)மலி ஆரூரி லேயுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
உறு-துயர் நோயோடு வாதைகள் .. உறவு என வீடாது மேவிட,
.. .. உடல் உயிர் வேறு ஆகு(ம்) நாள் உற, .. நரி பேய்கள்
.. உலவிடு கான் ஏகிடாமுனம், .. உயர்-தமிழ் ஆர்-மாலை நா உற,
.. .. உனது இரு-தாள் நாடு நீர்மையை .. அருளாயே;
நறுமலர் மேலானும் ஆழியில் .. அரவணை மேலானு(ம்) நேடிய,
.. .. நரை-விடைமேல் ஏறி; கூவிள(ம்), .. மதி, நாகம்,
.. நதி, புனை- தீ ஆரும் வேணியர்; .. அணி-முலை மாது ஆரு(ம்) மேனியர்
.. .. "நவில்" என நால்வேத ஆதியை .. மொழிவோனே;
அறுமுக; ஈராறு தோளுடை .. அழகின; வீடு ஆன ஆறினில்
.. .. அடிதொழுவார் பாவம் ஆயின .. களைவோனே;
.. அசுரர்கள் வேரோடு மாய்வுற .. அயில்-உறு வேலோடு போர்-புரி
.. .. அடலின; ஓர் தோகை ஏறிய .. முருகா; நின்
மறு-அறு சீர் பாடு நேயர்கள் .. மனம் உறைவாய்; ஏர் உலாவிய
.. .. வளி-மணவாளா; விநாயகன் .. இளையோனே;
.. மனு-முறை மாறாத சோழனு(ம்) .. முனம் அரசாள்- நீடு சீர் திகழ்
.. .. வள(ம்)மலி ஆரூரிலே உறை- .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
உறு-துயர் நோயோடு வாதைகள் உறவு என வீடாது மேவிட - மிகுந்த துன்பம் தரு நோய்களும் வேறு துன்பங்களும் என்னோடு உறவுகொண்டாடிக்கொண்டு ஒழிவின்றி வந்து பொருந்த; (உறு - மிகுந்த); (துயர் - துன்பம்); (வாதை - துன்பம்); (வீடுதல் - ஒழிதல்; நீங்குதல்); (மேவுதல் - பொருந்துதல்);
உடல் உயிர் வேறு ஆகு(ம்) நாள் உற, நரி பேய்கள் உலவிடு கான் ஏகிடாமுனம் - உடலும் உயிரும் பிரிகின்ற தினமும் வந்து, நரியும் பேயும் திரியும் சுடுகாட்டிற்குப் போவதன் முன்னமே; (கான் - காடு - சுடுகாடு); (ஏகுதல் - போதல்); (முனம் - முன்னம் - முன்பு);
உயர்-தமிழ் ஆர்-மாலை நா உற, உனது இரு-தாள் நாடு நீர்மையை அருளாயே - சிறந்த தமிழ்ப்பாமாலைகள் என் நாக்கில் இருக்க, உனது இருபாதங்களை விரும்பும் தன்மையை (பக்தியை) அருள்வாயாக; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (நீர்மை - தன்மை; நற்குணம்);
நறுமலர் மேலானும் ஆழியில் அரவணை மேலானு(ம்) நேடிய, நரை-விடைமேல் ஏறி - வாசத்தாமரைமேல் இருக்கும் பிரமனும் பாற்கடலில் பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும் (அடிமுடி) தேடிய, வெள்ளை எருதினை வாகனமாக உடையவரும்; (ஆழி - கடல்); (அரவணை - அரவ அணை - நாகப்படுக்கை); (நேடுதல் - தேடுதல்); (நரை - வெண்மை); (ஏறி - ஏறியவன்);
கூவிள(ம்), மதி, நாகம், நதி, புனை- தீ ஆரும் வேணியர் - வில்வம், திங்கள், பாம்பு, கங்கை இவற்றை அணிந்த தீப் போன்ற செஞ்சடை உடையவரும்; (கூவிளம் - வில்வம்); (ஆர்தல் - ஒத்தல்);
அணி-முலை மாது ஆரு(ம்) மேனியர் "நவில்" என நால்வேத ஆதியை மொழிவோனே - அழகிய முலையையுடைய உமை ஒரு பாகமாகப் பொருந்திய திருமேனி உடையவருமான ஈசர், "சொல்" என்றதும், பிரணவத்தை ஓதியவனே; (நவில்தல் - சொல்தல்); (நால்வேத ஆதி - நான்மறையின் முதல் - பிரணவம்);
அறுமுக - ஆறுமுகங்கள் உடையவனே;
ஈராறு தோளுடை அழகின - பன்னிரு புஜங்களை உடைய அழகனே;
வீடு ஆன ஆறினில் அடிதொழுவார் பாவம் ஆயின களைவோனே - ஆறு திருப்பதிகளில் திருவடியை வழிபடும் பக்தர்களது பாவத்தைத் தீர்ப்பவனே; (வீடு - உறைவிடம்; கோயில் என்ற பொருளில்); ("ஈனமிகுத்துள பிறவி" திருப்புகழ் - "ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே");
அசுரர்கள் வேரோடு மாய்வுற அயில்-உறு வேலோடு போர்-புரி அடலின - அசுரர்குலம் அழிய கூர்மை மிக்க வேலால் போர்செய்த வெற்றியினனே; (மாய்வு - அழிவு; சாவு); (அயில் - கூர்மை); (அடல் - வலிமை; வெற்றி);
ஓர் தோகை ஏறிய முருகா - ஒப்பற்ற மயிலை வாகனமாக உடைய முருகனே; (தோகை - ஆகுபெயராக, மயில்);
நின் மறு-அறு சீர் பாடு நேயர்கள் மனம் உறைவாய் - உன் குற்றமற்ற புகழைப் பாடும் அன்பர்கள் மனத்தில் உறைபவனே; (மறு - குற்றம்);
ஏர் உலாவிய வளி-மணவாளா - அழகிய வள்ளிக்குக் கணவனே; (ஏர் - அழகு; தோற்றப்பொலிவு); (வளி - வள்ளி - இடைக்குறை விகாரம்);
விநாயகன் இளையோனே - கணபதிக்குத் தம்பியே;
மனு-முறை மாறாத சோழனு(ம்) முனம் அரசாள்- நீடு சீர் திகழ் - மனுநீதி தவறாத சோழன் முன்பு அரசாண்ட, பெரும்புகழ் விளங்கும்; (முறை - ராஜநீதி; நூல்); (மாறுதல் - வேறுபடுதல்); (முனம் - முன்னம் - முன்பு); (நீடுதல் - நீள்தல்; நிலைத்தல்; பெருகுதல்); (சீர் - பெருமை; புகழ்); (* மனுநீதிச் சோழன் வரலாற்றைப் பெரியபுராணத்தில் திருநகரச் சிறப்புப் பகுதியில் காண்க - 12.100 - "மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான்");
வள(ம்)மலி ஆரூரிலே உறை- பெருமானே - வளம் மிகுந்த திருவாரூரில் உறைகின்ற பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment