03.04 – சிவன் சிலேடைகள்
2009-08-09
3.4.99 - சிவன் - மழை - சிலேடை
-------------------------------------------------------
வானீரை ஏந்தி வருமே வமுதத்தைத்
தானீய வந்துநஞ்சு கந்தருந் - தானூரும்
போற்றும் பொருளாய்ச் சிலசமயம் தூற்றலுமாம்
மாற்றமிலா ஐயன் மழை.
சொற்பொருள்:
வானீரை - வான் நீரை;
வான் - 1. மேகம்; / 2. ஆகாயம்;
வருமேவமுதத்தை - 1. "வருமே அமுதத்தை"; / 2. "வரும் மேவு அமுதத்தை"
மேவுதல் - விரும்புதல்;
அமுதம் - 1. நீர்; / 2. அமிர்தம்;
தான் - 1. அது; 2. அவன்; 3. தேற்றச் சொல்;
நஞ்சுகந்தருந்தானூரும் - 1. "நம் சுகம் தரும்தான்; ஊரும்" / 2. "நஞ்சு உகந்து அருந்து ஆன் ஊரும்";
ஆன் ஊர்தல் - எருதின்மேல் ஏறுதல்;
சில சமயம் - 1. சில வேளை / பொழுது; / 2. சில மதங்கள்;
தூற்றல் - தூறல் - 1. சிறுமழை; 2. பழித்துப் பேசுதல்;
மாற்றம் - 1. வார்த்தை; 2. மாறுபட்ட நிலை;
ஐயன் - தலைவன்; ஆசான்;
மழை:
வான் நீரை ஏந்தி வருமே - மேகம் நீரைச் சுமந்து வரும்; (ஏ - அசை);
அமுதத்தைத் தான் ஈய வந்து நம் சுகம் தரும்தான் - அமுதம் போன்ற நீரை அது அளிக்க வந்து, நம் சுகத்தைத் தருமே;
ஊரும் போற்றும் பொருளாய்ச் - ஊர்மக்கள் எல்லாம் போற்றுகின்ற பொருள் ஆகி;
சில சமயம் தூற்றலும் ஆம் - சில வேளைகளில் சிறுமழையாகவும் வரும்; (--அல்லது - பெருமழையாக வெள்ளம் ஆகுமாறோ, நமக்கு இடைஞ்சல் விளைக்கும்படியோ (அறுவடை சமயத்தில், வடகம் (வடாம்) காயவைக்கும்பொழுது, வாகனங்கள் ஓட்டும்பொழுது, இத்யாதி) பெய்தால் பலரும் ஏசுவர்);
மழை.
சிவன்:
வான் நீரை ஏந்தி வருமே - ஆகாய கங்கையைத் தலையில் தாங்கி வரும்;
அமுதத்தைத்தான் ஈய வந்து நஞ்சு உகந்து அருந்து - அமுதத்தையே அளிக்க வந்து, விஷத்தை விரும்பி உண்ணும்;
("வான் நீரை ஏந்தி வரும்; மேவு அமுதத்தைத்தான் ஈய வந்து நஞ்சு உகந்து அருந்து" - என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம்; "மேவு அமுதம்" = தேவர்கள் விரும்பிய அமுதம்);
ஆன் ஊரும் - இடபவாகனத்தின்மேல் ஏறும்;
போற்றும் பொருளாய்ச் - (பலரும்) போற்றி வணங்கும் மெய்ப்பொருள் ஆகி;
சில சமயம் தூற்றலும் ஆம் - சில புறச்சமயங்களின் பழிமொழிகளையும் ஏற்கும்; (சம்பந்தர் தேவாரம் - 1.82.10 - "சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும் நக்காங்கு அலர்தூற்றும் நம்பான் உறைகோயில்");
மாற்றம் இலா ஐயன் - என்றும் மாறாமல் இருக்கும் தலைவன்; (கல்லால மரத்தின்கீழ்) வார்த்தை ஒன்றும் சொல்லாமல் (மௌனமாக) உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தி;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
அருமை
ReplyDeleteThank you.
ReplyDelete