03.07.006 – திருநாவுக்கரசர் துதி - உமையவளை ஓர் கூறு
2009-04-20
3.7.6 - திருநாவுக்கரசர் துதி
----------------------------------
(3 பாடல்கள்)
1) --- (அறுசீர் விருத்தம் - காய் காய் தேமா - அரையடி வாய்பாடு) ---
உமையவளை ஓர்கூறு வைத்த
.. உத்தமனே நாவரையர் என்ற,
நமதுதமிழ் நலிவின்றி வாழ,
.. நானிலத்தில் சைவநெறி ஓங்கக்,
குமரிமுதல் கயிலைவரை எங்கும்
.. குறைவின்றித் திருத்தொண்டு செய்த,
தமக்குநிகர் இல்லாத அன்பர்
.. தாளிணையை நாம்வாழ்த்து வோமே.
நம் தமிழ்மொழி என்றும் வாழவும், உலகில் சிவநெறி தழைக்கவும், பாரத-தேசமெங்கும் தலயாத்திரை செய்து திருத்தொண்டு செய்தவரும், ஒப்பற்றவரும், உமைபங்கனால் நாவினுக்கு அரையன் என்று அழைக்கப்பெற்றவருமான திருநாவுக்கரசரது இருதிருவடிகளை நாம் வாழ்த்துகின்றோம்;
2) --- (அறுசீர் விருத்தம் - காய் மா தேமா - அரையடி வாய்பாடு) ---
திலகவதி யாரின் தம்பி
.. திருவதிகை தன்னில் அன்று
மலைமகள்கோன் தாள்வ ணங்கி
.. வலிநீங்கி, நாடும் உய்யத்
தலம்பலவும் சென்று போற்றித்
.. தமிழ்பாடித் தொண்டு செய்த
நலமிகுநா வரசர் தம்மை
.. நாம்பணிந்து போற்று வோமே.
திலகவதியார்க்குத் தம்பியார் திருவதிகையில் அன்று உமாபதி பாதத்தை வணங்கிச், சூலை நீங்கப்பெற்று, நாட்டுமக்களும் உய்யும்பொருட்டுப் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டுத், தேவாரம் பாடித், தொண்டு செய்த நன்மை மிக்க திருநாவுக்கரசரை நாம் வணங்கிப் போற்றுவோம்.
3) --- (நாலடித் தரவுகொச்சகக் கலிப்பா ) ---
திண்ணார்நெஞ் சமணரொளி பழையாறைத் திருக்கோயில்
கண்ணாரக் கண்டென்றன் கையாரத் தொழும்வரைநான்
உண்ணேன்என் றுள்ளத்தில் உறுதிகொண்டு நோன்பிருந்த
பண்ணார்செந் தமிழ்பன்னும் நாவரசர் பதம்போற்றி.
பதம் பிரித்து:
திண் ஆர் நெஞ்ச அமணர் ஒளி பழையாறைத் திருக்கோயில்
கண்ணாரக் கண்டு என்றன் கையாரத் தொழும்வரை நான்
உண்ணேன் என்று உள்ளத்தில் உறுதிகொண்டு நோன்பிருந்த,
பண் ஆர் செந்தமிழ் பன்னும் நாவரசர் பதம் போற்றி.
திண் ஆர் நெஞ்ச அமணர் - கல்மனத்தர்களான சமணர்; (நெஞ்சமணர் - நெஞ்ச அமணர் - "நெஞ்ச" என்பதில் ஈற்று அகரம் தொக்குப் புணர்ந்தது);
அமணர் ஒளி பழையாறைத் திருக்கோயில் - சமணர்கள் ஒளித்துவைத்திருந்த பழையாறை வடதளி என்ற திருக்கோயிலை;
கண்ணாரக் கண்டு என்றன் கையாரத் தொழும்வரை நான் உண்ணேன் என்று - என் கண் குளிரத் தரிசித்து, கைகூப்பித் தொழும்வரை நான் உணவு உண்ணமாட்டேன் என்று;
உள்ளத்தில் உறுதிகொண்டு நோன்பிருந்த - உள்ளத்தில் நிச்சயித்து உண்ணாநோன்பு இருந்த;
பண் ஆர் செந்தமிழ் நாவரசர் பதம் போற்றி - இசையோடு பொருந்திய திருப்பதிகங்களைப் பாடியருளிய திருநாவுக்கரசரது திருவடிகளுக்கு வணக்கம்; (பன்னுதல் - பாடுதல்);
(பழையாறை வடதளி என்ற கோயிலைச் சமணர்கள் மறைத்தது அறிந்து திருநாவுக்கரசர் உண்ணாநோன்பு மேற்கொண்ட செய்தியைப் பெரியபுராணத்திற் காண்க);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment