03.07.009 – சுந்தரர் துதி - புரமூன்றெரி
2009-07-07
3.7.9 - சுந்தரர் துதி
-------------------------
(5 பாடல்கள்)
1) --- (கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா) ---
புரமூன்றெரி புகவேநகை புரிபுன்சடை முக்கட்
பரனேஒரு பழஆவணப் படிநீஎன தடிமை
விரையார்தமிழ் கொடுபோற்றென வேண்டிப்பணி கொண்ட
புரைதீர்திரு ஆரூரரின் பொற்றாளிணை போற்றி.
புரம்-மூன்று எரி புகவே நகை புரி- புன்சடை முக்கட்-பரனே - முப்புரங்களும் தீப்பற்றி அழியும்படி சிரித்த, செஞ்சடையையும் முக்கண்ணையும் உடைய பரமனே;
ஒரு பழ ஆவணப்படி நீ எனது அடிமை - "ஒரு பழைய பத்திரத்தின் அடிப்படையில் நீ என்னுடைய அடிமை; (ஆவணம் - உரிமைப்பத்திரம்);
விரை ஆர் தமிழ் கொடு போற்று" என வேண்டிப் பணிகொண்ட - மணம் மிக்க தமிழ்ப்பாமாலைகளால் என்னைப் போற்று" என்று விரும்பி ஆட்கொண்ட;
புரை தீர் திரு ஆரூரரின் பொற்றாளிணை போற்றி - குற்றமற்ற சுந்தரமூர்த்திநாயனாரது பொற்பாதங்களை வணங்குகின்றேன்; (புரை தீர் - குற்றமற்ற);
2)
முன்னாளினில் முதலைக்கிரை ஆனான்தனை மீண்டும்
பின்னாளினில் உடலோடுயிர் பெறுமாறருந் தமிழைச்
சொன்னாவலர் கோன்பொன்னடி துதிப்போர்களுக் கென்றும்
இன்னாமிகு செய்தீவினை இல்லாநிலை தானே.
பதம் பிரித்து:
முன் நாளினில் முதலைக்கு இரை ஆனான்தனை மீண்டும்
பின் நாளினில் உடலோடு உயிர் பெறுமாறு அரும் தமிழைச்
சொல் நாவலர்கோன் பொன்னடி துதிப்போர்களுக்கு என்றும்
இன்னா மிகு செய்தீவினை இல்லா நிலைதானே.
முன்னொருநாள் முதலையால் உண்ணப்பட்ட சிறுவனைப் பின்னொருநாள் உடலும் உயிரும் பெற்று மீண்டு வரும்படி அரிய தமிழைப் பாடியருளிய நாவலர்கோன் (சுந்தரர்) பொற்பாதத்தைத் துதிப்பவர்களுக்கு என்றும் துன்பம் தரும் பழவினை இல்லாத நிலை நிச்சயம். (நாவலர்கோன் - திருநாவலூர்த் தலைவரான சுந்தரர்); (இன்னா - துன்பம்);
* திருப்புக்கொளியூர் அவிநாசியில் முன்பொரு சமயம் முதலை உண்ட சிறுவனைப் பின்னொரு நாள் சுந்தரர் மீட்டுத் தந்ததைச் சுட்டியது. (சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே");
3) --- (கலிவிருத்தம் - மா மா மா மா) ---
வணங்கும் அரனே வந்த போதும்
பிணங்கிப் பின்னர்ப் பித்தா என்று
குணங்கள் கூறும் நாவ லூரர்
மணங்கொள் மலர்த்தாள் வாழ்த்து வோமே.
4) -- (கலிவிருத்தம் -- திருக்குறுந்தொகை அமைப்பில்) --
ஆற்றில் இட்டதை ஆரூர்க் குளத்தினில்
சேற்றில் தேடித் திகைத்தருள் செய்திடாய்
ஏற்றை ஏறும் இறைவா எனப்பாடும்
பேற்றைப் பெற்றார் பெயர்பாடும் எம்நாவே.
ஆற்றில் இட்டதை ஆரூர்க் குளத்தினில் சேற்றில் தேடித் திகைத்து - ஆற்றில் இட்ட பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் சேற்றில் அளைந்து தேடிக் காணாமல் திகைத்து;
அருள் செய்திடாய் ஏற்றை ஏறும் இறைவா எனப் பாடும் பேற்றைப் பெற்றார் - "இடப வாகனனே, இறைவனே, அருள்வாயாக" என்று பாடும் பேற்றைப் பெற்றவரான சுந்தரரது; (சம்பந்தர் தேவாரம் - 1.51.3 - "பாயும்வெள்ளை யேற்றையேறி");
பெயர் பாடும் எம் நாவே - நாமத்தையும் புகழையும் நாங்கள் பாடுவோம்; (பெயர் - நாமம்; புகழ்);
* திருமுதுகுன்றில் பெற்ற பொன்னை அங்கே மணிமுத்தாற்றில் இட்டுப் பின் திருவாரூரில் கமலாலயக் குளத்தில் தேடிக் காணாது சிவனைப் பாடி அப்பொன்னை அடைந்த வரலாற்றைச் சுட்டியது. (சுந்தரர் தேவாரம் - 7.25.9 - "கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளங் கெடவே")
5) --- (எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா) ---
பந்தலில் வந்த பரமனை ஏசிப்
.. பாய்ந்தவர் ஓலையைப் பிடுங்கி
வெந்தழல் இட்டும் வெண்ணெய்நல் லூரில்
.. வேறொரு பத்திரம் காட்டி
அந்தமில் அடிகள் அடிமைகொண் டருளும்
.. அரும்புகழ்ச் சுந்தரர் தாளை
வந்தனை செய்யும் சிந்தையி னார்க்கு
.. வல்வினை போய்வரும் இன்பே.
பதம் பிரித்து:
பந்தலில் வந்த பரமனை ஏசிப், பாய்ந்து அவர் ஓலையைப் பிடுங்கி
வெம் தழல் இட்டும், வெண்ணெய் நல்லூரில் வேறு ஒரு பத்திரம் காட்டி
அந்தம் இல் அடிகள் அடிமைகொண்டு அருளும் அரும் புகழ்ச் சுந்தரர் தாளை
வந்தனை செய்யும் சிந்தையினார்க்கு வல்வினை போய் வரும் இன்பே.
தழல் - நெருப்பு; பத்திரம் - ஓலை; அந்தம் இல் அடிகள் - அழிவற்ற கடவுள்; சிந்தை - மனம்; எண்ணம்; இன்பு - இன்பம்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment