03.05.114 – பொது - இற்றைக் கழல்தொழல் - (வண்ணம்)
2009-08-24
03.05.114 - இற்றைக் கழல்தொழல் (பொது)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தத்தத் தனதன தத்தத் தனதன
தத்தத் தனதன .. தனதான )
(கச்சிட் டணிமுலை - திருப்புகழ் - காஞ்சிபுரம்)
இற்றைக் கழல்தொழல் எற்றுக் கெனநிதம்
..... எத்துப் புரிமனம் .. அதனாலே
.. இச்சைக் கடலத னுட்புக் கனுதினம்
..... எய்ப்புற் றுழல்கிற .. அடியேனும்
வெற்றித் திருமகள் வித்தைக் கலைமகள்
..... விட்டுப் பிரிகிலர் .. எனவாகி
.. வெப்பத் தொடுவரு வெற்பொத் துளவினை
..... விட்டுச் சுகமுற .. அருளாயே
நெற்றித் தலமெரி கக்கிச் சுடுவிழி
..... நிற்கப் புரம்விழ .. நகுநாதா
.. நிட்டைத் தவசியர் பற்றற் றுளமிக
..... நெக்குத் தொழவுயர் .. கதியீவாய்
குற்றச் செயல்புரி பத்துத் தலையிறை
..... கொச்சைச் சொலனழ .. அடர்பாதா
.. கொக்குச் சிறகொடு செக்கர்ச் சடைநதி
..... கொட்புற் றிடவணி .. பெருமானே.
பதம் பிரித்து:
இற்றைக் கழல் தொழல் எற்றுக்கு என நிதம்
..... எத்துப் புரி மனம் அதனாலே,
.. இச்சைக் கடல் அதன்-உட் புக்கு அனுதினம்
..... எய்ப்பு உற்று உழல்கிற அடியேனும்,
வெற்றித் திருமகள் வித்தைக் கலைமகள்
..... விட்டுப் பிரிகிலர் என ஆகி,
.. வெப்பத்தொடு வரு வெற்பு ஒத்து உள வினை
..... விட்டுச் சுகம் உற அருளாயே;
நெற்றித்தலம் எரி கக்கிச் சுடுவிழி
..... நிற்கப், புரம் விழ நகு நாதா;
.. நிட்டைத் தவசியர் பற்று அற்று உளம் மிக
..... நெக்குத் தொழ உயர் கதி ஈவாய்;
குற்றச் செயல் புரி பத்துத்தலை இறை,
..... கொச்சைச் சொலன் அழ அடர் பாதா;
.. கொக்குச் சிறகொடு செக்கர்ச் சடை நதி
..... கொட்புற்றிட அணி பெருமானே.
இற்றைக் கழல் தொழல் எற்றுக்கு என நிதம் எத்துப் புரி மனம் அதனாலே - இன்று திருவடியை எதற்குத் தொழவேண்டும் என்று எப்பொழுதும் வஞ்சகம் செய்யும் மனத்தினால்; (இற்றை - இன்று); (எற்றுக்கு - எதற்கு); (நிதம் - தினமும்); (எத்து - வஞ்சகம்);
இச்சைக் கடல் அதன் உள் புக்கு அனுதினம் எய்ப்பு உற்று உழல்கிற அடியேனும் - ஆசைக்கடலுள் மூழ்கித் தினந்தோறும் வருந்தி உழலும் நானும்; (இச்சை - ஆசை); (எய்ப்புறுதல் - இளைத்தல்; வருந்துதல்);
வெற்றித் திருமகள், வித்தைக் கலைமகள் விட்டுப் பிரிகிலர் என ஆகி - நான் என்றும் வெற்றியும், ஞானமும் உடையவன் என்று ஆகி; (வித்தை - கல்வி; ஞானம்);
வெப்பத்தொடு வரு வெற்பு ஒத்து உள வினை விட்டுச் சுகம் உற அருளாயே - தகிக்கின்ற மலை போல வரும் பழவினைகள் எல்லாம் நீங்கி நான் இன்பம் அடைய அருள்புரிவாயாக; (வெற்பு - மலை); (விடுதல் - நீங்குதல்);
நெற்றித்தலம் எரி கக்கிச் சுடுவிழி நிற்கப், புரம் விழ நகு நாதா - நெற்றியில் தீயை உமிழ்ந்து சுடும் கண் இருக்க, முப்புரங்களும் அழியும்படி சிரித்த நாதனே; (எரி - தீ); (விழுதல் - தோற்றுப்போதல்; கெடுதல்); (நகுதல் - சிரித்தல்);
நிட்டைத் தவசியர் பற்று அற்று உளம் மிக நெக்குத் தொழ உயர் கதி ஈவாய் - நிஷ்டை செய்யும் தவத்தோர்கள் பற்றுகள் அற்று உள்ளம் மிக நெகிழ்ந்து உன்னைத் தொழ, அவர்களுக்குச் சிவகதி அளிப்பவனே; (நிட்டை - நிஷ்டை; தியானம்); (தவசி - தபஸ்வி; தவத்தோன்); (நெக்கு - நெகிழ்ந்து); (திருமந்திரம் - 10.9.8.2 - "சிவசிவ என்னச் சிவகதி தானே");
குற்றச் செயல் புரி பத்துத்தலை இறை கொச்சைச் சொலன் அழ அடர் பாதா - கயிலைமலையைப் பெயர்த்து எறியும் தீய செயலைச் செய்த, பத்துத்தலைகளை உடைய இலங்கை மன்னனும் இழிந்த சொற்களைச் சொல்பவனுமான இராவணன் அழும்படி அவனை நசுக்கிய திருப்பாதனே; (இறை - மன்னன்); (கொச்சைச் சொலன் - கொச்சைச் சொல்லன் - இழிந்த வார்த்தைகள் சொல்பவன்); (அடர்த்தல் - நசுக்குதல்);
கொக்குச் சிறகொடு செக்கர்ச் சடை நதி கொட்புற்றிட அணி பெருமானே - கொக்கின் இறகோடு செஞ்சடையில் சுழலும்படி (சுற்றித் திரியும்படி) கங்கையை அணிந்த பெருமானே; (செக்கர் - சிவப்பு); (கொட்புறுதல் - சுழல்தல்; சுற்றித் திரிதல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment