Tuesday, November 17, 2020

03.08.009 - ஒலிசூழ் உமைகோன்

03.08 – பலவகை

2009-08-06

3.8.9 - ஒலிசூழ் உமைகோன்

----------------------------------------

(4 பாடல்கள்)


1) --- அறுசீர் விருத்தம் - (விளம் மா தேமா - அரையடி வாய்பாடு) ---

சடைமிசை அலைக்கும் கங்கை;

.. தழலன மேனி எங்கும்

படஅர வங்கள் சீறும்;

.. பலகுறட் கணங்கள் சூழ்ந்து

குடமுழ வங்கள் கொட்டும்;

.. கூடநான் மறைகள் பாடும்;

இடையடி யேன்விண் ணப்பம்

.. எப்படி நீகேட் பாயோ?


சடைமிசை அலைக்கும் கங்கை - சடையில் அலைத்து ஓடும் கங்கை உள்ளது;

தழல் அன மேனி எங்கும் பட அரவங்கள் சீறும் - தீப் போன்ற செம்மேனி எங்கும் படமுடைய பாம்புகள் சீறும்; (அன - அன்ன - இடைக்குறை விகாரம்);

பல குறட்-கணங்கள் சூழ்ந்து குடமுழவங்கள் கொட்டும் - பல குறட்பூதங்கள் சூழ்ந்து குடமுழாக்களை ஒலிக்கும்; (குறள் - குறுமை; குள்ளம்); (குடமுழவம் - முழவு வாத்தியவகை (Large hemispherical loud-sounding drum);

கூட நான்மறைகள் பாடும் - இவற்றோடு நால்வேதங்களும் உன் புகழைப் பாடும்;

இடைடியேன் விண்ணப்பம் எப்படி நீ கேட்பாயோ - இவ்வொலிகளின் நடுவே எனது விண்ணப்பத்தை நீ கேட்க இயலுமா?


2) --- அறுசீர் விருத்தம் - (மா மா காய் - அரையடி வாய்பாடு) ---

தண்ணீர் சடையில் பாய்ந்துவரச்,

.. சங்கக் கையாள் அருகிருக்க,

எண்ணா யிரம்பேர் எடுத்தோதி

.. இமையோர் கூட்டம் தொழுதிருக்க,

"அண்ணா அருள்"என் றயன்மாலார்

.. அழைக்க, இருவர் காதணியாய்ப்

பண்ணோ டிசைக்க, உன்செவியில்

.. படுமோ அடியேன் குரல்தானே?


தண்ணீர் சடையில் பாய்ந்துவரச் - சடையில் கங்கை அலைமோதிப் பாய;

சங்கக் கையாள் அருகு இருக்க - கையில் வளையணிந்த உமை பக்கத்தில் இருக்க; (சங்கம் - 1. ஊதுகின்ற சங்கு; 2. வளையல்);

எண்ணாயிரம் பேர் எடுத்து ஓதி இமையோர் கூட்டம் தொழுதிருக்க - எண்ணுகின்ற ஆயிரம் பேர் சொல்லித் தேவர்கள் கூட்டம் வழிபட்டிருக்க; (ஆயிரம் பேர் - சஹஸ்ரநாமம்);

"அண்ணா அருள்"என்று அயன்மாலார் அழைக்க - "அண்ணலே அருள்வாயாக" என்று பிரமனும் திருமாலும் வேண்ட; (அண்ணா - அண்ணால் (அண்ணலே) என்ற விளி அண்ணா என்று பாடல்களில் வரும்); (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அண்ணா");

இருவர் காதணியாய்ப் பண்ணோடு இசைக்க - (பரமசிவன் தமது இருகாதிலும் கம்பளர், அசுவதரர் என்னும் வைணிக சிரோமணிகளைக் குண்டலமாகத் தரித்துக்கொண்டு அவர்களது கானத்தைச் சதா கேட்டுக்கொண்டிருக்கின்றார்);

ன் செவியில் படுமோ அடியேன் குரல்தானே - என் குரல் உன் திருச்செவிகளில் விழுமா?


3) --- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ---

தலைமாலை கிலுகிலுக்கச், சடைமீது சலசலத்துச்

சலமோடக், கைத்துடியும் தடதடவென்(று) அதிர்ந்திருக்கச்,

சிலம்பார்க்கத், தழல்முழங்கத், திருநடம்செய் பெருமானே!

வலம்செய்து வணங்குமென்சொல் வருமோநின் செவிகளுக்கே?


தலைமாலை - மண்டையோட்டு மாலை;

சலம் - நீர் - கங்கை;

துடி - உடுக்கை;

சிலம்பு ஆர்க்க - சிலம்பு ஒலிக்க;

வலம் செய்து - பிரதட்சிணம் செய்து;

வணங்குமென்சொல் - வணங்கும் என் சொல் / வணங்கும் மென்சொல்;

(சம்பந்தர் தேவாரம் - 2.51.3 - "கழல் சிலம்பார்க்க மாநடம் ஆட வல்லவனே");

(அப்பர் தேவாரம் - 4.96.1 - "முழங்கும் தழற்கைத் தேவா");


4) --- அறுசீர் விருத்தம் - (மா மா தேமா - அரையடி வாய்பாடு) ---

விண்ணும் நிலனும் ஆவாய்!

.. விடைமேல் எங்கும் போவாய்!

கண்ணில் உள்ள பாவாய்!

.. கரும்பே! என்றும் மூவாய்!

எண்ணும் நெஞ்சில் சேர்வாய்!

.. ஏதும் கேளா தீவாய்!

உண்ணின் றிருக்கும் அன்னே!

.. உன்னை இரப்ப தென்னே?!


விண்ணும் நிலனும் ஆவாய் - வானும் மண்ணும் ஆனவனே;

விடைமேல் எங்கும் போவாய் - இடபவாகனத்தின்மேல் எங்கும் செல்பவனே;

கண்ணில் உள்ள பாவாய் - கண்ணில் உள்ள பாவை போன்றவனே;

கரும்பே! என்றும் மூவாய் - கரும்பு போன்றவனே; என்றும் மூப்பு இன்றி இளமையோடு இருப்பவனே;

எண்ணும் நெஞ்சில் சேர்வாய் - உன்னைத் தியானிப்போர் நெஞ்சில் உறைபவனே;

ஏதும் கேளாது ஈவாய் - 1. அடியவர் ஒன்றை வேண்டிக் கேட்பதன் முன்னமே எல்லா நலங்களையும் கொடுத்தருள்பவனே; 2. எதுவும் உன் காதில் விழாவிட்டாலும், நீயாகவே வரங்களைக் கொடுப்பவனே; (கேட்டல் - 1. செவிக்குப் புலனாதல்; 2. வேண்டுதல்);

ள் நின்றிருக்கும் அன்னே - அடியவர் உள்ளத்தில் நிலைத்திருக்கும் தாயே; (உண்ணின்றிருக்கும் - உள் நின்றிருக்கும்); (உள் - உள்ளே; மனம்); (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே");

உன்னை இரப்பது என்னே - 1. "நீயே எல்லாம் கொடுத்தாலும் உன்னிடம் வேண்டிப்பெற எண்ணுவது விந்தையே!"; / 2. "நீயே எல்லாம் தானாகவே அளிக்கும்பொழுது, உன்னிடம் வேண்டிப் பெறுவது என்ன?". (என்று இருபொருள்பட வந்தது); (என்னே - 1. என்ன; 2. ஓர் அதிசய / இரக்கக் குறிப்பு);


பிற்குறிப்பு : முதல் 3 பாடல்களில் "என் விண்ணப்பம் உன் செவியில் விழுமோ" என்ற ஐயம் தொனிப்பதற்கு விடையாக 4-ஆம் பாடலில் "ஏதும் கேளாது ஈவாய்" என்ற தொடர் இருபொருள்பட வந்தது. "உன்னை இரப்பது என்னே" - என்ற தொடரும் இருபொருள்பட வந்தது.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment