Monday, November 16, 2020

03.04.095 - சிவன் - பழையது - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-07-10

3.4.95 - சிவன் - பழையது - சிலேடை

-------------------------------------------------------

நீர்மேல் இருக்க இரவெல்லாம் நின்றாடும்

பார்மகிழு மோரன்னம் நல்குமிகு - பேருண்டு

வாழ்த்துகின்ற மாண்பிருக்கும் மாவடு நற்றுணையாம்

ஏத்தும் அரன்பழைய(து) இங்கு.


சொற்பொருள்:

நின்று ஆடும் - 1. தங்கியிருந்து குளிக்கும்; / 2. காலில் நின்று நாட்டியம் செய்தல்;

பார்மகிழுமோர் - 1. பார் மகிழும் மோர்; / 2. பார் மகிழும் ஓர்;

ஓர் - 1. ஒரு; / 2. ஒப்பற்ற;

அன்னம் - 1. சாதம்; சோறு; / 2. வீட்டின்பம்;

மிகுதல் - அதிகமாதல்;

பேர் - 1. ஆள்; மனிதர்; / 2. பெயர்; நாமம்;

உண்டு - 1. சாப்பிட்டு; / 2. உள்ளது;

மாவடு - 1. மாம்பிஞ்சு; / 2. மா வடு - பெரிய பிரமசாரி;

நற்றுணையாம் - 1. நல் துணை ஆம்; / 2. நல் துணை, யாம்;


பழையது:

நீர் மேல் இருக்க இரவெல்லாம் நின்று ஆடும் - இரவு முழுதும் நீரில் மூழ்கி இருந்து குளிக்கும்;

பார் மகிழும் மோர் அன்னம் நல்கும் - உலகு மகிழ (மோரோடு சேர்ந்து) மோர்ச்சோறு அளிக்கும்;

மிகு பேர் உண்டு வாழ்த்துகின்ற மாண்பு இருக்கும் - பலரும் சாப்பிட்டுப் பாராட்டுகின்ற தன்மை இருக்கும்;

மாவடு நல் துணை ஆம் - (உண்ணும்பொழுது) மாவடுவும் தொட்டுக்கொள்ளச் சேரும்;

பழையது - பழஞ்சோறு;


சிவன்:

நீர் மேல் இருக்க இரவெல்லாம் நின்று ஆடும் - தலையில் கங்கையைத் தாங்கி, இரவு முழுதும் (சுடுகாட்டில்) நின்று நடம் ஆடுவான்;

பார் மகிழும் ஓர் அன்னம் நல்கும் - உலகோர் இன்புறும் ஒப்பற்ற முக்தி நிலையை அளிப்பான்; (அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" - அன்னம் - வீட்டின்பம். திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.7 - "பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்" - இங்கே, சோறு என்பது பேரின்பம் என்னும் பொருள்);

மிகு பேர் உண்டு - பல பெயர்கள் இருக்கும்;

வாழ்த்துகின்ற மாண்பு இருக்கும் - (அப்பெயர்களைக் கூறி அன்பர்) போற்றுகின்ற பெருமை இருக்கும்;

மா வடு நல் துணை - பெருமையுடைய பிரமசாரிக்கு (மார்க்கண்டேயருக்கு) நல்ல துணை ஆனவன்;

யாம் ஏத்தும் அரன் - நாம் துதிக்கும் சிவன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment