Wednesday, November 11, 2020

03.04.091 - சிவன் - முன்றில் (வாசல்) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-04-22

3.4.91 - சிவன் - முன்றில் (வாசல்) - சிலேடை

-------------------------------------------------------

வெண்பொடி ஆரும் மிளிர்கோலம் காட்டுமே

மண்மிசை வீட்டு வழியாம்வெங் - கண்ணேறு

மேற்செல்லும் சித்திரம் உண்டுநால் வேதஞ்சொல்

ஆற்கீழ் அரன்முன்றில் ஆங்கு.


சொற்பொருள்:

வெண்பொடி - 1. வெண்மையான அரிசிமா, கோலப்பொடி; / 2. திருநீறு;

ஆர்தல் - பொருந்துதல்;

கோலம் - 1. தரையில் இடும் கோலம்; / 2. அழகிய வடிவம்;

மண்மிசை - 1. தரையின்மேல்; / 2. நிலவுலகில்;

வீட்டு வழி - 1. இல்லத்திற்கு வழி; / 2. வீடுபேறு அடைய நெறி;

வெம்மை - 1. கொடுமை; 2. கோபம்;

கண்ணேறு - கண்ணூறு - திருஷ்டி;

வெங்கண் - Fiery eye; அழலெழ விழிக்குங் கண்;

ஏறு - எருது; இடபம்;

மேற்செல்தல் - படையெடுத்தல்;

சித்திரம் - 1. ஓவியம் / படம்; / 2. அழகு;

ஆற்கீழ் - ஆல் + கீழ் - கல்லால மரத்தின் கீழே;

முன்றில் - வீட்டின் முன்னிடம்;

ஆங்கு - அப்படி; அசைச்சொல்;


முன்றில் (வாசல்):

வெண் பொடி ஆரும் மிளிர் கோலம் காட்டுமே மண்மிசை - வெண்மையான அரிசிமா / கோலப்பொடியால் இடப்பட்ட கோலம் தரைமீது இருக்கும்;

வீட்டு வழி ஆம் - வீட்டினுள் செல்லும் வழி;

வெம் கண்ணேறு மேற்செல்லும் சித்திரம் உண்டு - கொடிய திருஷ்டியை எதிர்க்கும் ஒரு படம் இருக்கும்;

முன்றில் - வீட்டின் முன்னிடம் - வாசல்;


சிவன்:

வெண்பொடி ஆரும் மிளிர் கோலம் காட்டுமே மண்மிசை - திருநீறு பூசி விளங்கும் அழகிய உருவோடு இந்நிலவுலகில் எழுந்தருள்வான்;

வீட்டு வழி ஆம் - வீடு பேறு அடைவதற்கு நெறி ஆவான்;

வெங்கண் ஏறுமேற் செல்லும் சித்திரம் உண்டு - தீயுமிழும் கண்களையுடைய (சினம் மிக்க) எருதின்மேல் ஏறிசெல்லும் அழகு உடையவன்;

நால்வேதம் சொல் ஆல் கீழ் அரன் - கல்லால மரத்தின்கீழ் நான்மறையின் பொருளை விளக்கிய தட்சிணாமூர்த்தியான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment