Tuesday, November 17, 2020

03.04.096 - சிவன் - தீபாவளி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-07-17

3.4.96 - சிவன் - தீபாவளி - சிலேடை

-------------------------------------------------------

திரிநகர் தீவைக்கும் எங்கும் அரவம்

பெரியசரம் சீறும் விளக்கு - வரிசையும்

அன்பர்கள் ஏற்றி அணிசெய்தீ பாவளி

என்பணி ஈசனார் இங்கு.


சொற்பொருள்:

திரி - 1. வாணத்தின் / பட்டாசின் திரி; / 2a. திரிதல்; 2b. மூன்று;

நகர் - 1. ஊர் மக்கள்; / 2. இங்கே, கோட்டை;

அரவம் - 1. சத்தம்; / 2. பாம்பு;

சரம் - 1. வெடிச்சரம் (சரவெடி); / 2. மாலை;

விளக்குவரிசையும் - 1. விளக்கு வரிசையும்; / 2. விளக்குவர் இசையும்;

ஏற்றுதல் - 1. சுடர்கொளுவுதல் (to light a lamp); / 2. புகழ்தல்; நினைத்தல்;

அணி - 1. அழகு; / 2. கூட்டம்;

என்பணி - என்பு அணி - எலும்பை அணியும்;


தீபாவளி:

திரி நகர் தீ வைக்கும் - (வாணத்தின் / பட்டாசின்) திரியில் ஊர்மக்கள் தீவைப்பர்;

எங்கும் அரவம் - எவ்விடமும் சத்தம் (ஒலிக்கும்);

பெரிய சரம் சீறும் - பெரிய வெடிச்சரங்கள் சீறி வெடிக்கும்;

விளக்கு வரிசையும் அன்பர்கள் ஏற்றி அணி செய் - கொண்டாடுவோர் வரிசையாக அகல்விளக்குகளையும் ஏற்றி அழகு செய்யும்;

தீபாவளி - தீபாவளிப் பண்டிகை;


சிவன்:

("திரிநகர் தீவைக்கும், எங்கும் அரவம் பெரியசரம் சீறும், அன்பர்கள் ஏற்றி அணிசெய், என்பு அணி ஈசனார் விளக்குவர் இசையும்" - என்று பதம் கூட்டியும் பொருள்கொள்ளல் ஆம்);

திரிநகர் தீ வைக்கும் - எங்கும் திரிந்த முப்புரங்களை எரிப்பார்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதி பலர்பாலில் வாராது. இப்பாடலில் சிவனார் என்று பன்மையில் கூறுவதால், இங்கே சிலேடை கருதிப் பால்மயக்கம் என்று வழுவமைதியாகவும் கொள்ளல் ஆம்);

எங்கும் அரவம் பெரிய சரம் சீறும் - அவர் திருமேனியில் எங்கும் பாம்புகள்; (பாம்பே மாலையும் ஆவதால் அவர் அணிந்த) பெரிய பாம்பு மாலையும் சீறும்;

விளக்குவர் இசையும் - (தட்சிணாமூர்த்தியாக வேதத்தை விளக்கியவர் வேறொரு சமயத்தில்) இசையையும் விளக்குவார்; (இது திருவிளையாடல்களுள் ஒன்று. விறகுவெட்டியாக வந்து ஏமநாதர் முன் இசைநுணுக்கங்களை விளக்கிப் பாடியவர்). (** திருவிளையாடற் புராணத்தில் விறகுவிற்ற படலத்தில் காண்க - "நைவளம் தெரிந்த ஏம நாதனும் விறகு மள்ளா அவ்விசை ஒருகால் இன்னும் பாடு என ஐயன் பாடும்");

அன்பர்கள் ஏற்றி அணிசெய் - பக்தர்கள் புகழ்ந்து கூட்டமாகத் திரண்டு வழிபடும்; (அணிசெய்தல் - அலங்கரித்தல் என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

என்பு அணி ஈசனார் - எலும்பை அணியும் சிவபெருமானார்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment