03.04 – சிவன் சிலேடைகள்
2009-07-03
3.4.94 - சிவன் - தேனீ - சிலேடை
-------------------------------------------------------
மலரகத்துத் தங்கி மகிழும்தே னாடி
நலம்செய்யு மாறடிகள் காட்டும் - வலங்கொண்டோர்
கூடடையா வண்ணம் கொடுக்கு மிருக்குமிசை
பாடும்தே னீயேகம் பன்.
சொற்பொருள்:
மலரகத்து - 1. மலரினுள்; / 2a. மலர்ந்த மனத்துள்; (வினைத்தொகை) / 2b. அகத்தாமரையில்;
தேனாடி - 1. தேன் நாடி; / 2. தேன் ஆடி (தேன் அபிஷேகம் உடையவன்);
நலம்செய்யு மாறடிகள் - 1. நலம்செய்யும் ஆறு அடிகள்; / 2a. நலம்செய்யும் மாறு-அடிகள்; / 2b. நலம்செய்யுமாறு அடிகள்;
மாறு அடிகள் - வினைத்தொகை - வேறுபட்ட அடிகள் (அர்த்தநாரீஸ்வரக் கோலம்);
(அப்பர் தேவாரம் - திருமுறை 6.6.6 - "உருவிரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வா அடி" - வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன);
வலங்கொண்டோர் - 1. வலியவர்கள்; / 2. பிரதட்சிணம் செய்பவர்கள்;
கூடு - 1. தேன்கூடு; / 2. உடல்;
கொடுக்கு மிருக்குமிசை பாடும் - 1. கொடுக்கும் இருக்கும்; இசை பாடும்; / 2. கொடுக்கும்; இருக்கும் இசை பாடும்;
கொடுக்கு - தேனீயின் கொட்டும் உறுப்பு;
இருக்கும் - 1. உண்டு; / 2. வேதமும்;
இருக்கு - ரிக்வேதம்; வேதம்;
இசை - 1. சங்கீதம்; / 2. புகழ்;
ஏகம்பன் - கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளிய சிவபெருமான்;
தேனீ:
மலரகத்துத் தங்கி மகிழும் தேன் நாடி - மதுவை விரும்பி மலர்களுள் சென்றிருந்து களிக்கும்;
நலம் செய்யும் - (மகரந்தச் சேர்க்கைக்கு உதவி) நன்மை செய்யும்;
ஆறு அடிகள் காட்டும் - ஆறு கால்கள் இருக்கும்;
வலங்கொண்டோர் கூடு அடையா வண்ணம் கொடுக்கும் இருக்கும் - வலியவர்கள் (தன்) கூட்டை நெருங்காதபடி அவர்களைக் கொட்டி விரட்டக் கொடுக்கு இருக்கும்;
இசை பாடும் தேனீ - ரீங்காரம் செய்யும் தேனீ.
சிவன்:
மலர்-அகத்துத் தங்கி மகிழும் தேன்-ஆடி - (அடியவர்களின்) மலர்ந்த மனத்துள் (அகத்தாமரையில்) உறைந்து மகிழ்பவன்; தேன் அபிஷேகம் உடையவன்;
நலம் செய்யும் மாறு [/செய்யுமாறு] அடிகள் காட்டும் - நன்மை செய்பவனாக, அர்த்தநாரீஸ்வரனாக (ஆண் பெண் என) வேறுபட்ட பாதங்களை உடையவன்; [/திருவடிகளைக் காட்டி நன்மை செய்பவன்];
வலங்கொண்டோர் கூடு அடையா வண்ணம் கொடுக்கும் - (தன்னைப்) பிரதட்சிணம் செய்யும் அடியவர்கள் மீண்டும் ஓர் உடலை அடையாதவாறு (பிறப்பை அறுத்து) அருள்செய்பவன்;
இருக்கும் இசை பாடும் ஏகம்பன் - வேதமும் புகழ் பாடுகின்ற கச்சி ஏகம்பன்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment