03.04 – சிவன் சிலேடைகள்
2009-04-10
3.4.90 - சிவன் - காப்பி (coffee) - சிலேடை
-------------------------------------------------------
பொடியாக மேல்நீர் பொழியும் கசிந்தே
அடிசேர்ந் தகமணக்கும் அன்பர் - குடிக்கும்
பொருளாகும் வாய்மணக்கப் போற்றிப் புகழ்வார்
கருமிடற் றன்காப்பி காண்.
சொற்பொருள்:
பொடியாகமேல் - 1. பொடி ஆக மேல்; / 2. பொடி ஆக(ம்) மேல்;
பொடி - 1. தூள்; / 2. திருநீறு;
ஆகம் - உடல்;
மேல் - 1. ஏழாம்வேற்றுமை உருபு; 2. தலை;
கசிதல் - 1. ஈரமூறுதல் (To ooze out); / 2. நெகிழ்தல்;
அகம் - 1. வீடு / 2. உள்ளம்;
மணத்தல் - வாசனை கமழ்தல்;
குடி - 1. அருந்து (குடித்தல்) / 2. குடும்பம்;
பொருள் - 1. வஸ்து; / 2. மெய்ப்பொருள்; மோட்சம்; பொன்;
காண் - முன்னிலை அசை;
இலக்கணக் குறிப்பு - தனிக்குறிலைச் சாராத மகர ஒற்றை அடுத்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வரின், முதற்சொல்லின் ஈற்று மகர மெய் கெடும்;
காப்பி (coffee):
பொடி ஆக, மேல் நீர் பொழியும், கசிந்தே
அடி சேர்ந்து அகம் மணக்கும்; அன்பர் குடிக்கும்
பொருள் ஆகும்; வாய் மணக்கப், போற்றிப் புகழ்வார்;
கருமிடற்றன் காப்பி காண்.
பொடி ஆக, மேல் நீர் பொழியும் கசிந்தே அடி சேர்ந்து அகம் மணக்கும் - ("பொடி ஆக அகம் மணக்கும், மேல் பொழியும் நீர் கசிந்தே அடி சேர்ந்து அகம் மணக்கும்" என்று இயைத்துப் பொருள்கொள்க) - காப்பிக்கொட்டையைப் பொடி செய்யும்பொழுதும், காப்பிப்பொடி மேல் ஊற்றும் வெந்நீர் வடிந்து கீழே பாத்திரத்தில் சேரும்பொழுதும், வீடு முழுதும் காப்பி வாசனை கமகமக்கும்;
அன்பர் குடிக்கும் பொருள் ஆகும் - காப்பிப் பிரியர்கள் குடிக்கின்ற பொருளாகும்;
வாய் மணக்கப், போற்றிப் புகழ்வார் - (அவர்கள் அதனைக் குடித்துத் தங்கள்) வாய் மணம் பெற, அதனைச் சிலாகித்துப் பேசுவார்கள்;
காப்பி;
சிவன்:
பொடி ஆகம் மேல் நீர் பொழியும்; கசிந்தே
அடி சேர்ந்து அகம் மணக்கும் அன்பர் குடிக்கும்
பொருள் ஆகும்; வாய் மணக்கப் போற்றிப் புகழ்வார்;
கருமிடற்றன் காப்பி காண்.
பொடி ஆகம் மேல் - திருமேனியில் திருநீறு;
மேல் நீர் பொழியும் - முடிமேல் கங்கை பாயும்;
("பொடி ஆகம் மேல்; மேல் நீர் பொழியும்" என்று "மேல்" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்க);
கசிந்தே அடி சேர்ந்து அகம் மணக்கும் அன்பர் குடிக்கும் பொருள் ஆகும் - நெகிழ்ந்து திருவடியை அடைந்து, (தாமரைத் திருவடிகளைத் தாங்குவதால்) மணக்கின்ற உள்ளத்தை உடைய பக்தர்களது குடும்பத்திற்கும் நன்மை உண்டாகும்; (அன்பர் குடிக்கும் பொருள் ஆகும் = "அன்பர்கள் அருந்தும் இன்பத்தேன் ஆவான்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (சம்பந்தர் தேவாரம் - 1.62.1 - "நம் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக் கோளாய நீக்குமவன் கோளிலிஎம் பெருமானே");
வாய் மணக்கப் போற்றிப் புகழ்வார் - (பக்தர்கள் தங்கள்) வாய் மணக்க ஈசன் புகழைப் பாடுவார்கள் / பேசுவார்கள்;
கருமிடற்றன் - நீலகண்டன் - சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment