Saturday, November 14, 2020

03.07.007 – திருஞான சம்பந்தர் துதி - அழுகைக்கு இரங்கி

03.07.007 – திருஞான சம்பந்தர் துதி - அழுகைக்கு இரங்கி

2009-06-07

3.7.7 - திருஞான சம்பந்தர் துதி

----------------------------------

(3 பாடல்கள்)


1) -- (எழுசீர்ச் சந்த விருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா") --

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி உண்டு")


அழுகைக்கி ரங்கி அகிலங்கள் ஈன்ற அனைவந்து தந்த அமுதால்

முழுஞானம் எய்தி வழுவில்ல தான மொழிகொண்டு பாடி அமணர்

கழுவேற வென்று கடல்நஞ்சை உண்ட கருநீல கண்டன் அடியே

தொழுகாழி மன்னர் கழல்நாளும் உற்ற துணையாகும் இல்லை துயரே.


பதம் பிரித்து:

அழுகைக்கு இரங்கி, அகிலங்கள் ஈன்ற அனை வந்து தந்த அமுதால்

முழு ஞானம் எய்தி, வழு இல்லதான மொழிகொண்டு பாடி அமணர்

கழு ஏற வென்று, கடல் நஞ்சை உண்ட கருநீல கண்டன் அடியே

தொழு காழி மன்னர் கழல் நாளும் உற்ற துணை ஆகும்; இல்லை துயரே.


அழுகைக்கு இரங்கி - சம்பந்தரது அழுகையைக் கேட்டு இரங்கி,

அகிலங்கள் ஈன்ற அனை வந்து தந்த அமுதால் முழு ஞானம் எய்தி - அண்டங்களையெல்லாம் பெற்ற தாயான உமை வந்து கொடுத்த திருமுலைப்பாலால் முழுமையான ஞானத்தைப் பெற்று; (அனை - அன்னை - இடைக்குறையாக வந்தது);

வழு இல்லதான மொழிகொண்டு பாடி அமணர் கழு ஏற வென்று - குற்றமற்ற செந்தமிழ்ப் பாமாலைகள் பாடிச் சமணர்கள் கழுவேறும்படி அவர்களை வாதில் வென்று; (வழு - குற்றம்);

கடல் நஞ்சை உண்ட கருநீல கண்டன் அடியே தொழு - பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்ட நீலகண்டனது திருவடியையே தொழுத;

காழி மன்னர் கழல் நாளும் உற்ற துணை ஆகும் - காழியர் தலைவரான திருஞான சம்பந்தரது திருவடியே நமக்கு என்றும் சிறந்த துணை ஆகும்; (காழி - சீகாழி - சீர்காழி);

இல்லை துயரே - அவர் திருவடிகளைப் போற்றுவோர்க்குத் துயரம் இல்லை;


2) -- (வஞ்சி விருத்தம் - மா மா காய்) --

சைவம் தழைக்க என்றென்றும்

தெய்வத் தமிழும் சிறந்திருக்க

வையத் துதித்த சம்பந்தர்

செய்ய மலர்த்தாள் பணிவோமே.


சைவம் தழைக்க என்றென்றும் தெய்வத் தமிழும் சிறந்திருக்க - சைவமும் தெய்விகத் தமிழும் என்றும் தழைக்கும்படி;

வையத்துதித்த சம்பந்தர் - பூமியில் அவதரித்த திருஞான சம்பந்தரது;

செய்ய மலர்த்தாள் பணிவோமே - சிவந்த தாமரை போன்ற திருவடியை வணங்குவோம்; (செய்ய - சிவந்த);


3) -- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) --

மூவரண்கள் சுட்டெரித்த முக்கண்ணன் தலம்பலபோய்ப்

பாவவினை சுட்டெரிக்கும் பாமாலை பலபாடி

யாவருமே உய்யவழி அமைத்தளித்த சம்பந்தர்

சேவடிகள் என்றுமென்றன் சிந்தையினில் உள்ளனவே.


மூ-ரண்கள் சுட்டெரித்த முக்கண்ணன் தலம் பல போய்ப் - முப்புரங்களை எரித்த முக்கண்ணனான சிவபெருமான் உறையும் பல தலங்களுக்கும் சென்று;

பாவ-வினை சுட்டெரிக்கும் பாமாலை பல பாடி - நம் தீவினைகளைச் சாம்பலாக்கும் தமிழ்ப் பாமாலைகள் பல பாடி;

யாவருமே உய்ய வழி அமைத்து அளித்த சம்பந்தர் - எத்தகையவரும் உய்யும்படி நெறி அமைத்துத் தந்த திருஞான சம்பந்தரது;

சேவடிகள் என்றும் என்றன் சிந்தையினில் உள்ளனவே - சிவந்த திருவடிகள் என்றென்றும் எனது நெஞ்சில் இருக்கின்றன;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment