03.04 – சிவன் சிலேடைகள்
2009-05-19
3.4.93 - சிவன் - கடல் - சிலேடை
-------------------------------------------------------
அலைவீசும் மேலே அடியார் அறிவார்
உலகுசுற்றும் உண்ணீலம் தோன்றும் - நிலைபெறும்
ஆறெல்லாம் சென்றடையும் நன்மை அளிக்குமெரு(து)
ஏறெம்மான் ஆழ்கடல் இங்கு.
சொற்பொருள்:
அடியார் - 1. அடி யார்; / 2. அடியார் (பக்தர்);
அடி - 1. கீழ்; / 2. பாதம்;
உலகு - 1. பூமி; / 2. மக்கள்;
சுற்றுதல் - 1. சூழ்ந்திருத்தல்; / 2. சுற்றிவருதல் (வலம் செய்தல்);
உண்ணீலம் - 1. உள் நீலம்; / 2. உண் நீலம்;
நீலம் - 1. நீலநிறம்; / 2. கரிய விஷம்;
நிலைபெறுதல் - 1. தன்மையைப் பெறுதல்; / 2. துன்பமற்ற நிலையை அடைதல்;
ஆறு - 1. நதி; / 2. மார்க்கம்; வழி; சமயம் (Religion);
எருது - இடபம்;
எம்மான் - எம் இறைவன்;
இங்கு - இவ்விடம்; அசை என்றும் கொள்ளல் ஆம்;
கடல்:
அலை வீசும் மேலே - அதன் மேல் அலை மோதும்;
அடி யார் அறிவார் - (மிக ஆழமாக இருப்பதால்) அதன் அடியை (கீழ்ப்பாகத்தை) யாரும் அறியமாட்டார்கள்;
உலகு சுற்றும் - உலகைச் சுற்றி இருக்கும்;
உள் நீலம் தோன்றும் நிலை பெறும் - உள்ளே நீலமாகத் தென்படும் தன்மையைக் கொண்டிருக்கும்;
ஆறு எல்லாம் சென்று அடையும் - நதிகள் எல்லாம் சென்று சேரும்;
நன்மை அளிக்கும் - உயிர்கள் வாழ இன்றியமையாதது;
ஆழ்கடல் - ஆழம் மிக்க கடல்;
சிவன்:
அலை வீசும் மேலே - திருமுடிமேல் (கங்கை நதி) அலை வீசும்;
அடியார் அறிவார் - அடியார்கள் அறிவார்கள்; (அடியார்களால் எளிதில் அடையப்படுபவன்); / அடியார்களை அவர் அறிவார்;
(அலை வீசும் மேலே அடி யார் அறிவார் - "மேலே" என்பதில் "ஏ" என்பதை அசையாகக் கொண்டு, "(கங்கை நதி) அலை வீசும் உச்சியையும் திருவடியையும் யார் அறிவார்" என்றும் பொருள்கொள்ளலாம்.
உலகு சுற்றும் - மக்கள் வலம்வருவார்கள்; (பிரதட்சிணம் செய்வார்கள்);
உண் நீலம் தோன்றும் - உண்ட விஷம் (திருக்கழுத்தில்) காணப்படும்;
நிலைபெறும் - என்றும் நிலைத்து இருக்கும்;
ஆறு எல்லாம் சென்று அடையும் - சமயங்கள் எல்லாம் சென்று சேரும்;
நன்மை அளிக்கும் - நலம் செய்யும்;
(ஆறு எல்லாம் சென்று அடையும் நன்மை அளிக்கும் - இதனை, "(அன்பர்கள் தம்) ஆறு உட்பகைகளும் நீங்கிப் பெறும் நன்மையைக் கொடுக்கும்" என்றும் பொருள்கொள்ளலாம். ஆறு சிறுமைக் குணங்கள் - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்; (= ஆசை, கோபம், miserliness, infatuation, செருக்கு (arrogance), பொறாமை (Envy) );
எருது ஏறு எம்மான் - இடபத்தின்மேல் ஏறி வரும் எம் பெருமான் - சிவன்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment