03.06 – மடக்கு
2009-06-05
3.6.43 - உள்ள - மதமாறும் - மடக்கு
-------------------------
உள்ள அழுக்கை ஒழியாமல் உண்மையினை
உள்ள அறியா(து) உலகோரை - உள்ள
மதமாறும் என்பார்சொல் விட்டு மனமே
மதமாறும் சேரரனை வாழ்த்து.
உள்ள - 1. மனத்து; 2. சிந்திக்க; 3. இருக்கின்ற;
மதமாறும் - 1. மதம் மாறும் ("மதத்திலிருந்து மாறுங்கள்"); 2. மதம் ஆறும் - ஷண்மதங்கள்; (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்னும் ஆறு வைதிக சமயங்கள்);
சேர்தல் - சென்றடைதல்;
சேர்த்தல் - அடைவித்தல்;
உள்ள அழுக்கை ஒழியாமல் - மனத்து அழுக்கை நீக்காமல்; (வஞ்சத்தையும் அறியாமையையும் மனத்தில் வைத்துக்கொண்டு);
உண்மையினை உள்ள அறியாது - மெய்ப்பொருளைச் சிந்திக்க (/தியானிக்க) அறியாமல்;
உலகோரை உள்ள மதம் மாறும் என்பார் சொல் விட்டு - உலக மக்களை (அவர்கள்) இருக்கின்ற மதத்திலிருந்து மாறுங்கள் என்று சொல்பவர்களது பேச்சை மதியாமல்;
மனமே மதம் ஆறும் சேர் அரனை வாழ்த்து - நெஞ்சே, நீ ஷண்மதங்களும் அடையும் (/கொண்டு சேர்க்கும்) சிவபெருமானைப் போற்றுவாயாக;
(சம்பந்தர் தேவாரம் - 2.29.5 - "முன்னம் இருமூன்று சமயங்களவை ஆகிப் பின்னை அருள்செய்த பிறையாளன்"); ( சம்பந்தர் தேவாரம் - 1.131.1 - "அரிவைபாகம் ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்");
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment