Saturday, November 21, 2020

03.04.099 - சிவன் - மழை - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-08-09

3.4.99 - சிவன் - மழை - சிலேடை

-------------------------------------------------------

வானீரை ஏந்தி வருமே வமுதத்தைத்

தானீய வந்துநஞ்சு கந்தருந் - தானூரும்

போற்றும் பொருளாய்ச் சிலசமயம் தூற்றலுமாம்

மாற்றமிலா ஐயன் மழை.


சொற்பொருள்:

வானீரை - வான் நீரை;

வான் - 1. மேகம்; / 2. ஆகாயம்;

வருமேவமுதத்தை - 1. "வருமே அமுதத்தை"; / 2. "வரும் மேவு அமுதத்தை"

மேவுதல் - விரும்புதல்;

அமுதம் - 1. நீர்; / 2. அமிர்தம்;

தான் - 1. அது; 2. அவன்; 3. தேற்றச் சொல்;

நஞ்சுகந்தருந்தானூரும் - 1. "நம் சுகம் தரும்தான்; ஊரும்" / 2. "நஞ்சு உகந்து அருந்து ஆன் ஊரும்";

ஆன் ஊர்தல் - எருதின்மேல் ஏறுதல்;

சில சமயம் - 1. சில வேளை / பொழுது; / 2. சில மதங்கள்;

தூற்றல் - தூறல் - 1. சிறுமழை; 2. பழித்துப் பேசுதல்;

மாற்றம் - 1. வார்த்தை; 2. மாறுபட்ட நிலை;

ஐயன் - தலைவன்; ஆசான்;


மழை:

வான் நீரை ஏந்தி வருமே - மேகம் நீரைச் சுமந்து வரும்; (- அசை);

அமுதத்தைத் தான் ஈய வந்து நம் சுகம் தரும்தான் - அமுதம் போன்ற நீரை அது அளிக்க வந்து, நம் சுகத்தைத் தருமே;

ஊரும் போற்றும் பொருளாய்ச் - ஊர்மக்கள் எல்லாம் போற்றுகின்ற பொருள் ஆகி;

சில சமயம் தூற்றலும் ஆம் - சில வேளைகளில் சிறுமழையாகவும் வரும்; (--அல்லது - பெருமழையாக வெள்ளம் ஆகுமாறோ, நமக்கு இடைஞ்சல் விளைக்கும்படியோ (அறுவடை சமயத்தில், வடகம் (வடாம்) காயவைக்கும்பொழுது, வாகனங்கள் ஓட்டும்பொழுது, இத்யாதி) பெய்தால் பலரும் ஏசுவர்);

மழை.


சிவன்:

வான் நீரை ஏந்தி வருமே - ஆகாய கங்கையைத் தலையில் தாங்கி வரும்;

அமுதத்தைத்தான் ஈய வந்து நஞ்சு உகந்து அருந்து - அமுதத்தையே அளிக்க வந்து, விஷத்தை விரும்பி உண்ணும்;

("வான் நீரை ஏந்தி வரும்; மேவு அமுதத்தைத்தான் ஈய வந்து நஞ்சு உகந்து அருந்து" - என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம்; "மேவு அமுதம்" = தேவர்கள் விரும்பிய அமுதம்);

ஆன் ஊரும் - இடபவாகனத்தின்மேல் ஏறும்;

போற்றும் பொருளாய்ச் - (பலரும்) போற்றி வணங்கும் மெய்ப்பொருள் ஆகி;

சில சமயம் தூற்றலும் ஆம் - சில புறச்சமயங்களின் பழிமொழிகளையும் ஏற்கும்; (சம்பந்தர் தேவாரம் - 1.82.10 - "சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும் நக்காங்கு அலர்தூற்றும் நம்பான் உறைகோயில்");

மாற்றம் இலா ஐயன் - என்றும் மாறாமல் இருக்கும் தலைவன்; (கல்லால மரத்தின்கீழ்) வார்த்தை ஒன்றும் சொல்லாமல் (மௌனமாக) உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தி;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.098 - சிவன் - பூரண சூரிய கிரகணம் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-07-23

03.04.098 - சிவன் - பூரண சூரிய கிரகணம் - சிலேடை

-------------------------------------------------------

ஒளிஎங்கும் வீச இருள்கண்டத் தோடும்

களிபொங்க அன்பர்கள் காண்பர் - ஒளிநிலா

நேர்படும்க ணங்கள் விளக்கேந்தும் நீர்ச்சடையன்

ஓர்சூ ரியகிரக ணம்.


சொற்பொருள்:

கண்டம் - 1. பெரும் நிலப்பரப்பு; 2. கழுத்து;

ஓடுதல் - 1. விரைந்து செல்லுதல்; 2. பரத்தல்;

காணுதல் - 1. பார்த்தல்; 2. ஆராய்தல்; வணங்குதல்;

ஒளித்தல் - மறைத்தல்;

ஒளிநிலா - 1. வினைத்தொகை - மறைக்கும் (ஒளிக்கும்) நிலா; 2. பண்புத்தொகை - ஒளியுடைய நிலா; நிலாஒளி;

நேர்படுதல் - 1. சந்தித்தல் (To meet; to be in conjunction with, as planets); எதிர்ப்படுதல் (To come in front); சம்பவித்தல்; 2. காணப்படுதல் (To appear);

கணங்கள் - 1. காலநுட்பம் - க்ஷணங்கள் (Moment; shortest duration of time); 2. பூதகணங்கள்;

ஓர் - 1. ஒரு; 2. நினை; (ஓர்தல் - நினைதல்);


சூரிய கிரகணம்:

ஒளி எங்கும் வீச, இருள் கண்டத்து ஓடும் - (பகற்பொழுது ஆனபடியால்) எங்கும் வெயில் அடிக்கக், கண்டத்தில் (சில இடங்களில் மட்டும்) இருள் விரைந்து செல்லும்;

களி பொங்க அன்பர்கள் காண்பர் - மகிழ்ச்சியோடு மக்கள் இதனைப் பார்ப்பார்கள்;

ஒளிநிலா நேர்படும் கணங்கள் விளக்கு ஏந்தும் - (சூரியனை) மறைக்கும் சந்திரன் சம்பவிக்கும் அந்தச் சிறிது நேரத்தில் (எங்கும் இருள் ஆகிவிட்டதால் மக்கள்) விளக்கை ஏந்துவார்கள்;

சூரிய கிரகணம் - பூரண சூரிய கிரகணம்;


சிவன்:

ஒளி எங்கும் வீச இருள் கண்டத்து ஓடும் - சிவந்த மேனியும் திருநீறும் ஒளி வீசக், கருமை கழுத்தில் பரவி இருக்கும்;

களி பொங்க அன்பர்கள் காண்பர் - இன்பம் பொங்கப் பக்தர்கள் தியானிப்பார்கள் / தொழுவார்கள்; (களி பொங்க - 1. இன்பம் மிக; 2. இன்பம் மிகும் பொருட்டு - பேரின்பம் பெற);

ஒளிநிலா நேர்படும் - (திருமுடிமேல்) சந்திரனின் ஒளியும் காணப்படும்; (அப்பர் தேவாரம் - 4.22.6 - "ஒளிநிலா எறிக்குஞ் சென்னி" - ஒளிவீசும் பிறையின் ஒளி பரவிய சென்னியராய்);

கணங்கள் விளக்கு ஏந்தும் - (இருளில் ஆடும்போது) பூதகணங்கள் விளக்கு ஏந்தி இருப்பன.

நீர்ச்சடையன் - கங்கையைச் சடையுள் வைத்த சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.097 - சிவன் - நீர்வண்டி (தண்ணீர் லாரி) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-07-19

சென்னை ஸ்பெஷல்!

3.4.97 - சிவன் - நீர்வண்டி (தண்ணீர் லாரி) - சிலேடை

-------------------------------------------------------

தண்ணீரைத் தாங்கிவரும் காணத் தவமிருப்போர்

உண்ணீர் எனவாகும் உண்மைதான் - பெண்ணாணாய்ச்

சேர்ந்துநிற்கக் கண்டதும் என்னண்டா என்றிடுமான்

ஏந்துமரன் நீர்வண்டி இங்கு.


சொற்பொருள்:

உண்ணீர் - 1. உண் நீர்; / 2. உள் நீர்;

உள் - மனம்;

தான் - 1. தேற்றச் சொல்; / 2. படர்க்கை ஒருமைப்பெயர் - இங்கே, அவன்;

உண்மைதான் - 1. மெய்யே; 2. மெய்ப்பொருள் அவன்;

அண்டா - 1. ஒரு பெரிய பாத்திரம்; (இங்கே ஆகுபெயராய் இனப்பொதுமையால் குடம், தோண்டி, முதலியவற்றையும் குறித்தது); / 2. அண்டனே; (அண்டன் - கடவுள்);

என்றிடுமான் ஏந்துமரன் - a. என்றிடும் மான் ஏந்தும் அரன்; / b. என்றிடும் ஆன் ஏந்தும் அரன்;

ஆன் - இடபம்;

நீர்-வண்டி - தண்ணீர் வினியோகிக்கும் லாரி;


நீர்வண்டி (தண்ணீர் லாரி):

தண்ணீரைத் தாங்கி வரும் - தண்ணீரைச் சுமந்து வரும்;

காணத் தவம் இருப்போர் உண் நீர் என ஆகும் உண்மைதான் - (அதன் வரவை) ஆவலோடு எதிர்பார்த்திருப்பவர்கள் பருகும் நீர் பெறுவதும் மெய்யே.

பெண் ஆணாய்ச் சேர்ந்து, நிற்கக் கண்டதும் "என் அண்டா" என்றிடும் - பெண்களும் ஆண்களும் கூடி, (அவ்வண்டி வந்து) நின்றவுடன், "என் அண்டா; என் அண்டா" என்று தத்தம் பாத்திரங்களில் நிரப்புமாறு சொல்கின்ற;

நீர்வண்டி - தண்ணீர் லாரி;


சிவன்:

தண்ணீரைத் தாங்கி வரும் - கங்கையை முடிமேல் தாங்குபவன்;

காணத் தவம் இருப்போர் உள் நீர் என ஆகும் - அவனைக் காணத் தவம் இருப்பவர்கள் மனம் நீர் போல உருகும்; (திருவாசகம் - சிவபுராணம் - அடி-69 - "நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே");

உண்மை தான் பெண் ஆணாய்ச் சேர்ந்து நிற்கக் கண்டதும் "என் அண்டா" என்றிடும் - மெய்ப்பொருளான அவன் அர்த்தநாரீஸ்வரனாகத் தோன்றியதும் "என் அண்டனே" என்று பக்தர்கள் துதிக்கும்;

என்றிடுமான் ஏந்தும் அரன் - என்றிடும் மான் ஏந்தும் அரன் / என்றிடும் ஆன் ஏந்தும் அரன் - a. மானைக் கையில் ஏந்திய சிவன்; / b . இடபத்தால் தாங்கப்பெறும் சிவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Wednesday, November 18, 2020

03.05.115 – பராய்த்துறை - புலாற்குடில் இதுபேண - (வண்ணம்)

03.05.115 – பராய்த்துறை - புலாற்குடில் இதுபேண - (வண்ணம்)

2009-08-27

3.5.115 - நாமம் நினைய ருள் (பராய்த்துறை - திருப்பராய்த்துறை)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனாத்தன .. தனதான )


புலாற்குடில் .. இதுபேணப்

.. பொலாச்செயல் .. புரியாமல்

எலாப்பிணி .. அறுநாமம்

.. இராப்பகல் .. நினைவேனோ

பலாக்கனி .. உகுதேனே

.. பராய்த்துறை .. உறைவோனே

நிலாப்புனல் .. அரவோடு

.. நிலாப்புனை .. பெருமானே.


பதம் பிரித்து:

புலாற்-குடில் இது பேணப்

.. பொலாச்-செயல் புரியாமல்,

எலாப் பிணி அறு நாமம்

.. இராப்பகல் நினைவேனோ;

பலாக்கனி உகு தேனே;

.. பராய்த்துறை உறைவோனே.

நிலாப்-புனல் அரவோடு

.. நிலாப் புனை பெருமானே.


புலாற்-குடில்இது பேணப் பொலாச் செயல் புரியாமல் - ஊனால் ஆகிய இந்த உடம்பை வளர்ப்பதற்காகத் தீவினைகளைச் செய்து கெடாமல்; (புலால் - மாமிசம்); (குடில் - உடம்பு); (பொலா - பொல்லா - தீய);

எலாப் பிணி அறு நாமம் இராப்பகல் நினைவேனோ - எல்லாப் பிணிகளையும் தீர்க்கும் உன் திருநாமத்தை இரவுபகலாக நினைக்க அருள்வாயாக; (எலா - எல்லா); (பிணி - பந்தம்; நோய்); (அறுத்தல் - இல்லாமற் செய்தல்; நீக்குதல்);

பலாக்கனி உகு தேனே - பலாப்பழத்திலிருந்து சொரியும் இனிய தேன் போன்றவனே; (மிகவும் இனிமை பயப்பவனே); (உகுதல் / உகுத்தல் - சுரத்தல்; சொரிதல்); (தேன் - இரசம்; இனிய சாறு); (சம்பந்தர் தேவாரம் - 1.54.3 - "ஒள்வாழைக்கனி தேன்சொரி ஓத்தூர்");

பராய்த்துறை உறைவோனே - திருப்பராய்த்துறையில் எழுந்தருளியவனே;

நிலாப் புனல் அரவோடு நிலாப் புனை பெருமானே - நில்லாது ஓடி வந்த கங்கையையும், பாம்பையும், பிறைச்சந்திரனையும் சூடிய பெருமானே; (நிலாப் புனல் - நில்லாப் புனல் - சடையிடை ஓடுகின்ற கங்கையாறு); (நிலா - பிறைச்சந்திரன்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.114 – பொது - இற்றைக் கழல்தொழல் - (வண்ணம்)

03.05.114 – பொது - இற்றைக் கழல்தொழல் - (வண்ணம்)

2009-08-24

03.05.114இற்றைக் கழல்தொழல் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தனதன தத்தத் தனதன

தத்தத் தனதன .. தனதான )

(கச்சிட் டணிமுலை - திருப்புகழ் - காஞ்சிபுரம்)


இற்றைக் கழல்தொழல் எற்றுக் கெனநிதம்

..... எத்துப் புரிமனம் .. அதனாலே

.. இச்சைக் கடலத னுட்புக் கனுதினம்

..... எய்ப்புற் றுழல்கிற .. அடியேனும்

வெற்றித் திருமகள் வித்தைக் கலைமகள்

..... விட்டுப் பிரிகிலர் .. எனவாகி

.. வெப்பத் தொடுவரு வெற்பொத் துளவினை

..... விட்டுச் சுகமுற .. அருளாயே

நெற்றித் தலமெரி கக்கிச் சுடுவிழி

..... நிற்கப் புரம்விழ .. நகுநாதா

.. நிட்டைத் தவசியர் பற்றற் றுளமிக

..... நெக்குத் தொழவுயர் .. கதியீவாய்

குற்றச் செயல்புரி பத்துத் தலையிறை

..... கொச்சைச் சொலனழ .. அடர்பாதா

.. கொக்குச் சிறகொடு செக்கர்ச் சடைநதி

..... கொட்புற் றிடவணி .. பெருமானே.


பதம் பிரித்து:

இற்றைக் கழல் தொழல் எற்றுக்கு என நிதம்

..... எத்துப் புரி மனம் அதனாலே,

.. இச்சைக் கடல் அதன்-உட் புக்கு அனுதினம்

..... எய்ப்பு உற்று உழல்கிற அடியேனும்,

வெற்றித் திருமகள் வித்தைக் கலைமகள்

..... விட்டுப் பிரிகிலர் என ஆகி,

.. வெப்பத்தொடு வரு வெற்பு ஒத்து உள வினை

..... விட்டுச் சுகம் உற அருளாயே;

நெற்றித்தலம் எரி கக்கிச் சுடுவிழி

..... நிற்கப், புரம் விழ நகு நாதா;

.. நிட்டைத் தவசியர் பற்று அற்று உளம் மிக

..... நெக்குத் தொழ உயர் கதி ஈவாய்;

குற்றச் செயல் புரி பத்துத்தலை இறை,

..... கொச்சைச் சொலன் அழ அடர் பாதா;

.. கொக்குச் சிறகொடு செக்கர்ச் சடை நதி

..... கொட்புற்றிட அணி பெருமானே.


இற்றைக் கழல் தொழல் எற்றுக்கு என நிதம் எத்துப் புரி மனம் அதனாலே - இன்று திருவடியை எதற்குத் தொழவேண்டும் என்று எப்பொழுதும் வஞ்சகம் செய்யும் மனத்தினால்; (இற்றை - இன்று); (எற்றுக்கு - எதற்கு); (நிதம் - தினமும்); (எத்து - வஞ்சகம்);

இச்சைக் கடல் அதன் உள் புக்கு அனுதினம் எய்ப்பு உற்று உழல்கிற அடியேனும் - ஆசைக்கடலுள் மூழ்கித் தினந்தோறும் வருந்தி உழலும் நானும்; (இச்சை - ஆசை); (எய்ப்புறுதல் - இளைத்தல்; வருந்துதல்);

வெற்றித் திருமகள், வித்தைக் கலைமகள் விட்டுப் பிரிகிலர் என ஆகி - நான் என்றும் வெற்றியும், ஞானமும் உடையவன் என்று ஆகி; (வித்தை - கல்வி; ஞானம்);

வெப்பத்தொடு வரு வெற்பு ஒத்து உள வினை விட்டுச் சுகம் உற அருளாயே - தகிக்கின்ற மலை போல வரும் பழவினைகள் எல்லாம் நீங்கி நான் இன்பம் அடைய அருள்புரிவாயாக; (வெற்பு - மலை); (விடுதல் - நீங்குதல்);

நெற்றித்தலம் எரி கக்கிச் சுடுவிழி நிற்கப், புரம் விழ நகு நாதா - நெற்றியில் தீயை உமிழ்ந்து சுடும் கண் இருக்க, முப்புரங்களும் அழியும்படி சிரித்த நாதனே; (எரி - தீ); (விழுதல் - தோற்றுப்போதல்; கெடுதல்); (நகுதல் - சிரித்தல்);

நிட்டைத் தவசியர் பற்று அற்று உளம் மிக நெக்குத் தொழ உயர் கதி ஈவாய் - நிஷ்டை செய்யும் தவத்தோர்கள் பற்றுகள் அற்று உள்ளம் மிக நெகிழ்ந்து உன்னைத் தொழ, அவர்களுக்குச் சிவகதி அளிப்பவனே; (நிட்டை - நிஷ்டை; தியானம்); (தவசி - தபஸ்வி; தவத்தோன்); (நெக்கு - நெகிழ்ந்து); (திருமந்திரம் - 10.9.8.2 - "சிவசிவ என்னச் சிவகதி தானே");

குற்றச் செயல் புரி பத்துத்தலை இறை கொச்சைச் சொலன் அழ அடர் பாதா - கயிலைமலையைப் பெயர்த்து எறியும் தீய செயலைச் செய்த, பத்துத்தலைகளை உடைய இலங்கை மன்னனும் இழிந்த சொற்களைச் சொல்பவனுமான இராவணன் அழும்படி அவனை நசுக்கிய திருப்பாதனே; (இறை - மன்னன்); (கொச்சைச் சொலன் - கொச்சைச் சொல்லன் - இழிந்த வார்த்தைகள் சொல்பவன்); (அடர்த்தல் - நசுக்குதல்);

கொக்குச் சிறகொடு செக்கர்ச் சடை நதி கொட்புற்றிட அணி பெருமானே - கொக்கின் இறகோடு செஞ்சடையில் சுழலும்படி (சுற்றித் திரியும்படி) கங்கையை அணிந்த பெருமானே; (செக்கர் - சிவப்பு); (கொட்புறுதல் - சுழல்தல்; சுற்றித் திரிதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Tuesday, November 17, 2020

03.04.096 - சிவன் - தீபாவளி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-07-17

3.4.96 - சிவன் - தீபாவளி - சிலேடை

-------------------------------------------------------

திரிநகர் தீவைக்கும் எங்கும் அரவம்

பெரியசரம் சீறும் விளக்கு - வரிசையும்

அன்பர்கள் ஏற்றி அணிசெய்தீ பாவளி

என்பணி ஈசனார் இங்கு.


சொற்பொருள்:

திரி - 1. வாணத்தின் / பட்டாசின் திரி; / 2a. திரிதல்; 2b. மூன்று;

நகர் - 1. ஊர் மக்கள்; / 2. இங்கே, கோட்டை;

அரவம் - 1. சத்தம்; / 2. பாம்பு;

சரம் - 1. வெடிச்சரம் (சரவெடி); / 2. மாலை;

விளக்குவரிசையும் - 1. விளக்கு வரிசையும்; / 2. விளக்குவர் இசையும்;

ஏற்றுதல் - 1. சுடர்கொளுவுதல் (to light a lamp); / 2. புகழ்தல்; நினைத்தல்;

அணி - 1. அழகு; / 2. கூட்டம்;

என்பணி - என்பு அணி - எலும்பை அணியும்;


தீபாவளி:

திரி நகர் தீ வைக்கும் - (வாணத்தின் / பட்டாசின்) திரியில் ஊர்மக்கள் தீவைப்பர்;

எங்கும் அரவம் - எவ்விடமும் சத்தம் (ஒலிக்கும்);

பெரிய சரம் சீறும் - பெரிய வெடிச்சரங்கள் சீறி வெடிக்கும்;

விளக்கு வரிசையும் அன்பர்கள் ஏற்றி அணி செய் - கொண்டாடுவோர் வரிசையாக அகல்விளக்குகளையும் ஏற்றி அழகு செய்யும்;

தீபாவளி - தீபாவளிப் பண்டிகை;


சிவன்:

("திரிநகர் தீவைக்கும், எங்கும் அரவம் பெரியசரம் சீறும், அன்பர்கள் ஏற்றி அணிசெய், என்பு அணி ஈசனார் விளக்குவர் இசையும்" - என்று பதம் கூட்டியும் பொருள்கொள்ளல் ஆம்);

திரிநகர் தீ வைக்கும் - எங்கும் திரிந்த முப்புரங்களை எரிப்பார்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதி பலர்பாலில் வாராது. இப்பாடலில் சிவனார் என்று பன்மையில் கூறுவதால், இங்கே சிலேடை கருதிப் பால்மயக்கம் என்று வழுவமைதியாகவும் கொள்ளல் ஆம்);

எங்கும் அரவம் பெரிய சரம் சீறும் - அவர் திருமேனியில் எங்கும் பாம்புகள்; (பாம்பே மாலையும் ஆவதால் அவர் அணிந்த) பெரிய பாம்பு மாலையும் சீறும்;

விளக்குவர் இசையும் - (தட்சிணாமூர்த்தியாக வேதத்தை விளக்கியவர் வேறொரு சமயத்தில்) இசையையும் விளக்குவார்; (இது திருவிளையாடல்களுள் ஒன்று. விறகுவெட்டியாக வந்து ஏமநாதர் முன் இசைநுணுக்கங்களை விளக்கிப் பாடியவர்). (** திருவிளையாடற் புராணத்தில் விறகுவிற்ற படலத்தில் காண்க - "நைவளம் தெரிந்த ஏம நாதனும் விறகு மள்ளா அவ்விசை ஒருகால் இன்னும் பாடு என ஐயன் பாடும்");

அன்பர்கள் ஏற்றி அணிசெய் - பக்தர்கள் புகழ்ந்து கூட்டமாகத் திரண்டு வழிபடும்; (அணிசெய்தல் - அலங்கரித்தல் என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

என்பு அணி ஈசனார் - எலும்பை அணியும் சிவபெருமானார்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.08.012 – முருகன் - வயலூர் - விருப்புகள் வெறுப்புகள் - (வண்ணம்)

03.08.012 – முருகன் - வயலூர் - விருப்புகள் வெறுப்புகள் - (வண்ணம்)

2009-08-13

3.8.12 - முருகன் - விருப்புகள் வெறுப்புகள் - (வயலூர்)

--------------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

(தனத்தன தனத்தன .. தனதான )


விருப்புகள் வெறுப்புகள் .. இவைமூடி

.. வினைக்குழி அழுத்திட .. அழியாதே

திருப்பெயர் தனைத்தின(ம்) .. மொழிவேனாய்ச்

.. செகத்தடை பிறப்பற .. அருளாயே

பொருப்பினை இடித்திடும் .. வடிவேலா

.. புயற்புனல் வயற்பதி .. வயலூரா

நெருப்புமிழ் நுதற்கணில் .. வருவோனே

.. நினைத்தொழு தவர்க்கருள் .. பெருமானே.


பதம் பிரித்து:

விருப்புகள் வெறுப்புகள் .. இவை மூடி

.. வினைக்குழி அழுத்திட .. அழியாதே,

திருப்பெயர்தனைத் தின(ம்) .. மொழிவேனாய்ச்,

.. செகத்து அடை- பிறப்பு அற .. அருளாயே;

பொருப்பினை இடித்திடும் .. வடிவேலா;

.. புயற்புனல் வயற்பதி .. வயலூரா;

நெருப்பு உமிழ் நுதற்கணில் .. வருவோனே;

.. நினைத் தொழு தவர்க்கு அருள் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


விருப்புகள் வெறுப்புகள் இவை மூடி வினைக்குழி அழுத்திட ழியாதே, - விருப்புகளும் வெறுப்புகளும் என்னைச் சூழ்ந்து மூடிக் கொடியவினை என்ற குழியில் தள்ள அழிந்தொழியாது; (அழுத்துதல் - அமிழ்த்துதல்; ஆழ்த்துதல்);

திருப்பெயர்தனைத் தின(ம்) மொழிவேனாய்ச், செகத்து அடை- பிறப்பு அற அருளாயே - உன் திருநாமத்தைத் தினமும் மறத்தல் இன்றிச் சொல்வேன் ஆகி, மண்ணுலகில் அடைகின்ற பிறப்புகள் தீர அருள்வாயாக; (செகம் - ஜகம் / ஜகத் - உலகம்);

பொருப்பினை இடித்திடும் வடிவேலா - கூரிய வேலை எறிந்து கிரௌஞ்சமலையைத் தூளாக்கியவனே; (பொருப்பு - மலை; இங்கே, கிரௌஞ்ச மலை); (இடித்தல் - தூளாக்குதல்; அழித்தல்);

புயற்புனல் வயற்பதி வயலூரா - மேகத்து நீர் அடையும் வயல்கள் திகழும் தலமான வயலூரில் எழுந்தருளியவனே; (புயல் - மேகம்); (இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் - "புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி");

நெருப்பு உமிழ் நுதற்கணில் வருவோனே; - (சிவபெருமானது) தீயை உமிழும் நெற்றிக்கண்ணில் உதித்தவனே; (நுதல் - நெற்றி); (கணில் - கண்ணில் - இடைக்குறை விகாரம்);

நினைத் தொழு வர்க்கு அருள் பெருமானே - உன்னைத் தொழும் தவம் உடையவர்களுக்கு அருள்கின்ற பெருமானே; (நினை - நின்னை - உன்னை); (தவன் - தவம் உடையவன்; தவம் செய்பவன்); (தொழுதவர் - 1. வணங்கியவர்கள்; 2. தொழு தவர் - வினைத்தொகை - தொழும் தவம் உடையவர்கள்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.08.011 – முருகன் - பொது - தினமாசை யுற்ற வங்கள் - (வண்ணம்)

03.08.011 – முருகன் - பொது - தினமாசை யுற்ற வங்கள் - (வண்ணம்)

2007-03-25

3.8.11 - முருகன் - தினமாசை யுற்ற வங்கள் - (பொது)

----------------------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதான தத்த தந்த .. தனதான தத்த தந்த

தனதான தத்த தந்த .. தனதான)

(தனனா தனத்த தந்த .. தனனா தனத்த தந்த

.. தனனா தனத்த தந்த .. தனதான) - என்றும் கருதலாம்;

(விழியால்ம ருட்டி நின்று - திருப்புகழ் - சுவாமிமலை)

(கடிமா மலர்க்கு ளின்ப - திருப்புகழ் - சுவாமிமலை)


தினமாசை யுற்ற வங்கள் .. தமைநாடி நற்ற வங்கள்

.. .. தெரியாது மிக்கு ழன்று .. வயதாகித்

.. திரைநோய்கள் உற்றி றந்து .. சுடுகான கத்தெ ரிந்து

.. .. திரையேக ரைக்க வெந்த .. பொடியா(ம்)முன்

இனமாம லர்ச்ச ரங்கள் .. மணமேறு சொற்ச ரங்கள்

.. .. இணையார்ப தத்த ணிந்து .. மகிழ்வேனோ

.. இபமாமு கத்தன் அன்று கரியாய்வெ ருட்ட அஞ்சும்

.. .. எழிலார்கு றத்தி வந்து .. புணர்மார்பா

வனமாமு லைத்த டங்கண் .. உமைகோன்ந யக்க முன்பு

.. .. மறையோது வித்த கந்த .. அழகான

.. மயில்வாக னக்க டம்ப .. வடிவேல பத்தர் அன்ப

.. .. வரதாவெ னப்ப ணிந்து .. துதிபாடி

உனையேவ ழுத்தும் உம்பர் .. கலிதீர்க ருத்த இன்பம்

.. .. உலவாத முத்த தந்தி .. மகள்நாதா

.. ஒருசேவ லைப்பு னைந்த .. உயர்கேத னத்த தொண்டர்

.. .. உள(ம்)மேவி நிற்கும் எந்தை .. பெருமானே.


பதம் பிரித்து:

தினம் ஆசை உற்று, அவங்கள் .. தமை நாடி, நற்றவங்கள்

.. .. தெரியாது, மிக்கு உழன்று, .. வயதாகித்,

.. திரை நோய்கள் உற்று, இறந்து, .. சுடு-கானகத்து எரிந்து,

.. .. திரையே கரைக்க வெந்த .. பொடி ஆ(ம்)முன்,

இன-மா-மலர்ச்சரங்கள் .. மணம் ஏறு- சொற்சரங்கள்

.. .. இணை-ஆர்-பதத்து அணிந்து .. மகிழ்வேனோ?

.. இபமாமுகத்தன் அன்று கரியாய் வெருட்ட அஞ்சும்

.. .. எழில் ஆர்-குறத்தி வந்து .. புணர்-மார்பா;

வன-மா-முலைத் தடங்கண் .. உமைகோன் நயக்க முன்பு

.. .. மறை ஓதுவித்த கந்த; .. "அழகான

.. மயில்வாகனக் கடம்ப; .. வடிவேல; பத்தர் அன்ப;

.. .. வரதா" எனப் பணிந்து .. துதி பாடி

உனையே வழுத்தும் உம்பர் .. கலி தீர்-கருத்த; இன்பம்

.. .. உலவாத முத்த; தந்தி-மகள் நாதா;

.. ஒரு சேவலைப் புனைந்த .. உயர்-கேதனத்த; தொண்டர்

.. .. உள(ம்) மேவி நிற்கும் எந்தை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


தினம் ஆசை ற்று, வங்கள்தமை நாடி, நற்றவங்கள் தெரியாது, மிக்குழன்று - நாள்தோறும் ஆசையால் அவச்செயல்களையே விரும்பி, நல்ல தவங்கள் செய்ய அறியாமல், மிக உழன்று வருந்தி;

வயதாகித், திரை நோய்கள் உற்று - முதுமை அடைந்து, தோற்சுருக்கமும் வியாதிகளும் அடைந்து; (திரை - 1. தோற்சுருக்கம்; 2. அலை; கடல்); (திரை நோய்கள் - திரையும் நோய்களும் - உம்மைத்தொகை; "அலை போல நோய்கள்" என்று உவமைத்தொகையாகவும் பொருள்கொள்ளல் ஆம்);

இறந்து, சுடு-கானகத்து எரிந்து, திரையே கரைக்க வெந்த பொடி ஆ(ம்)முன் - செத்துச், சுடுகாட்டில் (இந்த உடலானது) எரிந்து, கடலில் (/நதியில்) கரைக்கச் சாம்பல் ஆவதன் முன்னமே; (திரை - அலை; கடல்; நதி); (பொடி - சாம்பல்);

இன-மா-மலர்ச்சரங்கள், மணம் ஏறு- சொற்சரங்கள் இணை-ஆர்-பதத்து அணிந்து மகிழ்வேனோ - நல்ல அழகிய பூமாலைகளையும் வாசனை மிக்க பாமாலைகளையும் உன் இரு-திருவடிகளில் சூட்டி மகிழ அருள்வாயாக; (பதம் - பாதம்); (அணிதல் - அலங்கரித்தல்); (ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திர வெண்பா - 11.5.6 - "மாலை தலைக்கணிந்து மையெழுதி")

இபமாமுகத்தன் அன்று கரியாய் வெருட்ட அஞ்சும் எழில் ஆர்-குறத்தி வந்து புணர்-மார்பா - கஜமுகத்துக் கணபதி அன்றொ யானை வடிவில் வந்து அச்சுறுத்தவும், அந்த யானையைக் கண்டு அஞ்சிய அழகிய குறத்தி (வள்ளி) வந்து கட்டிக்கொண்ட திருமார்பினனே; (இபம் - யானை); (வெருட்டுதல் - பயமுறுத்துதல்); (புணர்தல் - பொருந்துதல்);

வன-மா-முலைத் தடங்கண் உமைகோன் நயக்க முன்பு மறை ஓதுவித்த கந்த - அழகிய பெரிய முலையும் விசாலமான கண்ணும் உடைய உமைக்குக் கணவனான சிவபெருமான் விரும்ப முன்பு பிரணவத்தை விளக்கிய கந்தனே; (வனம் - அழகு); (தடம் - விசாலம்); (கோன் - கணவன்); (தடங்கணுமை - தடங்கண்ணுமை என்பது சந்தம் கருதி ணகர ஒற்று மிகாது வந்தது);

"அழகான மயில்வாகனக் கடம்ப; வடிவேல; பத்தர் அன்ப; வரதா" எனப் பணிந்து துதி பாடி உனையே வழுத்தும் உம்பர் கலி தீர்-கருத்த - "அழகிய மயிலை வாகனமாக உடைய கடம்பனே! கூரிய வேலை ஏந்தியவனே! அன்பர்க்கு அன்பனே! வரதனே!" என்று வணங்கித் துதிகள் பாடி உன்னையே வாழ்த்திய தேவர்களது துன்பத்தைத் தீர்த்த கடவுளே; (கடம்பன் - கடப்பமலர்களால் ஆன மாலையை அணிந்தவன்); (கருத்தன் - கர்த்தா - கடவுள்; தலைவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.134.1 - "கருத்தன் கடவுள் கனலேந்தி ஆடும் நிருத்தன்");

இன்பம் உலவாத முத்த - பேரின்ப முக்திநிலையில் இருப்பவனே; பேரின்ப முக்தியை அருள்பவனே; (உலத்தல் - குறைதல்; அழிதல்); (முத்தன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்);

தந்தி-மகள் நாதா - தெய்வயானை கணவனே; (தந்தி - யானை; தந்திமகள் - தெய்வயானை); (கந்தபுராணம் - வள்ளி திருமணப்படலம் - 261 - "யானைதன் அணங்கு வாழ்க");

ஒரு சேவலைப் புனைந்த உயர்-கேதனத்த - சேவல் திகழும் உயர்ந்த கொடியை உடையவனே; (கேதனம் - கொடி);

தொண்டர் உள(ம்) மேவி நிற்கும் எந்தை பெருமானே - அடியார் உள்ளத்தில் விரும்பிக் குடிகொள்ளும் எந்தையாகிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------